உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் #5

தன் எண்ணங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கப் போகும் சமயம் அவ்வறைக்குள் புயலாய் நுழைந்தான் மனுபரதன். அவனைக் கண்டதும் மதுரா பேந்த விழித்துக் கொண்டிருக்க மரியாவோ,

“குட்மார்னிங் பாஸ்!” என சிரித்த முகமாய் அவன் முன்னே சென்று, அன்றைய வேலைகளை பட்டியலிட துவங்கிவிட்டாள். மெல்ல சுயம் பெற்ற மதுரா,

‘இனி இங்கிருப்பதில் எந்த உபயோகமும் இல்லை. இந்த வேலை வேண்டாம் என சொல்லிவிட்டு பாத்திரக்கடைக்கு கிளம்பினால் அரை நாள் சம்பளமாவது கிடைக்கும்’ எனும் நினைப்பில் அவனது மேசைக்கு அருகே வந்து,

“எக்ஸ்கியூஸ் மீ…” என எச்சில் கூட்டி விழுங்க,

‘போச்சு! கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணாம பேசிட்டு இருக்கும் போது குறுக்க வர்றா… பாஸ் திட்டி தீர்க்கப் போறாங்க…’  என மரியா மதுவை பாவமாகப் பார்க்க,

‘பேசிக்கிட்டு இருப்பது தெரியலையா? அப்படி என்ன அவசரம்? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம குறுக்க வந்து, நேற்றைய மழையில் முளைத்த மஷ்ரூம்ன்னு நிரூபிக்கிறியே…’ என காட்டமாக சொல்ல நினைத்தாலும் ஒழிந்து போகட்டும் என்னும் நினைப்பில் சொல் என்பது போல் தலையசைக்க,

“குட் மார்னிங் மனு சார்!” என்று அவன் முன்னே நிற்க,

‘மனு சாரா? பாஸ் என்று தான் அழைக்கனும் என சொல்லிக் கொடுக்க   வேண்டும்’ என்பதை மனதிற்குள் குறித்துக் கொண்ட மரியாவிற்கு நிச்சயம் இதற்காகவே இவள் பாஸிடம் திட்டு வாங்கப் போகிறாள் எனத் தோன்றியது.

ஆனால் அவனோ அதை பொருட்படுத்தாமல் சிறு தலையசைப்புடன் மதுராவின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள,

‘இங்கே என்ன நடக்கிறது?’ என்பது போல் ஆச்சரியமாகிப் போனாள் மரியா.

“ஐம் சாரி சார். எனக்கு இந்த வேலை வேண்டாம்” பட்டென சொல்லிவிட,

‘இந்த வேலை கிடைக்காதான்னு எத்தனை பேர் தவமிருக்காங்க… எவ்வளவு திமிர்? அசால்ட்டா வேண்டாம்னு சொல்றா… கஷ்டப்படாம கிடைக்கும் எதுக்கும் மதிப்பிருக்காதுங்கிறது இது தான் போல…’ என மூண்ட சினத்தை கட்டுக்குள் கொண்டுவந்து,

“ஏன்?” ஒற்றையாய் கேட்க,

‘ஏன் இப்படி அபத்தமாய் உளருகிறாள்?’ என்று மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மரியா.

“எனக்கு இந்த சூழல் செட்டாகாதுன்னு தோணுது” மென்று விழுங்கிக் சொல்லியேவிட்டாள்.

“புதுசா ஒரு இடத்தில் வேலைக்கு போகும் போது எல்லோருமே சந்திக்கிற பிரச்சனை தான் இது. போகப் போக சரியாகிடும்” இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்து சபரிவாசனுக்காக மதுராவிற்கு எடுத்துச் சொன்னான்.

“அதில்லை மனு சார், இந்த ட்ரெஸ் கோட் எனக்கு சரியா வராது” என்றவள் மீது தன் பார்வையை ஆழப் பதித்து,

“மரியா, காபி கொடுங்க. இளஞ்சூடா இருக்கட்டும்” என்றதும் பல வருடங்களாய் அவனிடம் பணி புரிந்த அனுபவத்தில்,

‘நீ வெளியே போ! நான் இவளிடம் தனியாக பேச வேண்டும்’ என்பதைத் தான் இவ்வளவு நாகரீகமாக சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டவள், இளஞ்சூடாக இருக்கட்டும் என்றதிலிருந்து மெதுவாக வந்தால் போதும் எனும் குறிப்பையும் கண்டு கொண்டு,

“ஷ்யூர் பாஸ்” என வெளிநடப்பு செய்துவிட்டாள்.

“சிட் டவுன்”

“பரவாயில்லை…”

“சிட் டவுன், ஐ சே!” என அதட்ட கண்ணாடி தடுப்பு என்பதால் நல்ல காலம் அவன் கத்தல் வெளியே கேட்கவில்லை. மிரண்டு போய் அமர்ந்தவளுக்கு,

‘இதென்ன ஸ்கூல் பிள்ளையை அதட்டுற மாதிரி இப்படி மிரட்டுறாங்க…’ எனும் எண்ணம் தான் ஓடியது.

“உன் மனசில் தேவலோக ரம்பைன்னு நினைப்பா?” எனும் கேள்வியில் சுயம் பெற்றவளாய் அதிர்ந்து நோக்க,

“அவ்வளவுக்கெல்லாம் நீ சூப்பர் ஃபிகர் இல்லை. சுமார்… வெகு சுமார் தான்! ஓவரா சீன் போடாம கொடுத்த ட்ரெஸ்ஸை போடு” என அவள் பாணியிலேயே கடுப்படிக்க,

“நான் மொக்கை ஃபிகராவே இருந்துட்டுப் போறேன் சார். அதுக்காக அவயங்களை காட்டணும்ங்கிற அவசியம் இல்லை” கோபம் கொந்தளிக்க அவனுக்கு நறுக்கென பதிலடி கொடுத்தாள். கை முஷ்டி இறுக்கி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

“ஊர் உலகத்தில் இருக்கிறவங்களுக்கு எல்லாம் உன்னை நோட்டமிடறதைத் தவிர வேற வேலையே இல்லையா? நீ அவ்வளவுக்கெல்லாம் ஒர்த் இல்லை. அரையடி ஸ்கேல் மாதிரி இருந்துட்டு இவ்வளவு கெத்து ஆகாது.

என்னை எல்லோரும் எவ்வளவு மரியாதையா பார்க்கிறாங்களோ… அது போல என்கிட்ட வேலை பார்க்கிறவங்க கிட்டயும் அதே மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடந்துக்கணும்னு தான் இந்த உடுப்பே போடச் சொல்றேன். மரியாவை கூப்பிட்டு நிக்க வச்சு பார்… அவங்களை தப்பா பார்க்கவே தோணாது.

அந்த ட்ரெஸ்ஸே அவங்களுக்கு ஒரு மிடுக்கையும், கம்பீரத்தையும் கொடுக்கும். இதெல்லாம் ஒரு விஷயம்னு கிண்டர்கார்டன் கர்ல் மாதிரி காரணம் சொல்லாம உருப்படியா வேலையை கத்துக்கிற வழியைப் பாரு” அலட்சியமாய் சொன்னான்.

‘மரியாவுக்கு அழகா இருக்கா? கவர்ச்சியா இருக்கா? அடுத்தவங்களோட பார்வையை ஈர்க்கும்ங்கிறதெல்லாம் இங்க பிரச்சனையில்லை. எனக்கு போட பிடிக்கலைங்கிறது தான் விஷயம். இதைக்கூட புரிஞ்சுக்க முடியாத இவரெல்லாம் என்ன பிஸ்னஸ் மேன்?’ எரிச்சல் மேலிட,

“ட்ரெஸ் மட்டுமில்ல இந்த செக்ரெட்டரி வேலையையும் என்னால சரியா செய்ய முடியாதுன்னு தோணுது. எனக்கு இந்த வேலை வேண்டாம்” என அவன் முகம் காண துணிவின்றி நிலம் பார்த்துச் சொல்ல, அவள் முன் சொடக்கிட்டு நிமிரச் செய்தவன்,

“முயற்சி செஞ்சு உன் வேலையில தப்பு வந்தாக்கூட நான் ஏத்துப்பேன். ஆனா முயற்சியே செய்யாம என்னால முடியாதுன்னு சொல்ற உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் என் ஆபீசில் வேலையில்லை… கெட் லாஸ்ட்!” என உக்கிரமாய் உறும,

அதற்கு மேல் அவனது கண்களையும், கோபத்தையும் எதிர்கொள்ள முடியாமல் உடல் வெடவெடக்க வெளியே ஓடிவந்தவளை எதிர்கொண்ட மரியா என்னவென்று விசாரிக்க அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

“கடவுளே, ஏன் இப்படி சின்னக்குழந்தை போல பேசின? உன் முட்டாள்த் தனத்தால நல்ல சம்பளத்தை மிஸ் பண்ணப் போற. இங்கேயே இரு. நான் வரேன்” என மனுபரதனிடம் சென்றவள்,

“பாஸ்! உங்க முடிவில் குறுக்கிடறதுக்கு என்னை மன்னிச்சுடுங்க. மது ஆசிரமத்தில் வளர்ந்த பொண்ணு, அவளுக்கு நம்ம யூனிஃபார்ம் போடுறது கொஞ்சம் கஷ்டம் தான்.

அதோட நான் தான் அவளுக்கான வேலைகளை எல்லாம் ஒட்டுமொத்தமா பட்டியலிட்டு அவளை பயப்படுத்திட்டேன். புடவையில் கூட இதே கண்ணியத்தை கொண்டு வர முடியும் பாஸ். ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க. எனக்காக…”

மரியா இதுவரை இப்படியெல்லாம் யாருக்காகவும் பரிந்து பேசியதில்லை என்பதால் என்ன சொல்வானோ என்னும் பயத்துடனேயே அவன் முகம் பார்க்க,       

“மரியா, நான் எடுத்த முடிவை மாற்ற மன்றாடும் அளவிற்கு உங்களுக்கு அவ மேல அப்படியென்ன சாஃப்ட் கார்னர்…?” என்றவனிடம் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது.

“மதுகிட்ட ஒரு சார்ம் இருக்கு பாஸ். சிறுபிள்ளை மாதிரி வெள்ளந்தியா மனசில் தோன்றதை அப்படியே பேசும் குணம் என்னை ஈர்க்கிறது போல…” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்

“வெல், அப்போ அவ ட்ரெஸ் கோடை நீங்களே தேர்ந்தெடுங்க.” என தோள்களை குலுக்க, சட்டென ஒப்புதல் கொடுப்பான் என எதிர்பாராததால் கொஞ்சம் திகைத்து பின் சமாளித்து,

“நன்றி பாஸ்.” மலர்ந்த புன்னகையுடன் சொன்னவள் மதுவோடு பேச எண்ணி அறையை விட்டு வெளியேறிவிட்டாள். 

‘ஸ்டுபிட் கேர்ள்! முதலாளிங்கிற பயம் கொஞ்சமும் இல்லாம துடுக்கா பேசுறா. தப்பு, ரொம்ப தப்பு… மனுபரதனை எதிர்த்து மறுவார்த்தை பேசுறது ரொம்பவே தப்புன்னு புரிய வைக்கணும்.’

மதுவை வாட்டி வதக்க கங்கணம் கட்டிக் கொண்டவன் அவளது உடை விஷயத்தில் தன் முடிவை மாற்றிக் கொண்டதற்கு காரணம் மரியாவா, சபரிவாசனா இல்லை மதுராவா என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

“மது! கிவ் மீ ஹை ஃபை!” என விரிந்த புன்னகையுடன் மரியா தன் கரத்தை உயர்த்த, காரணம் தெரியாத போதும் அவள் சொன்னபடி கரத்தோடு கரம் அடிக்கும் மதுவை கண்ணாடி தடுப்பின் வழி பார்த்துக் கொண்டிருந்தவன்,

‘வேலைக்கு சேர்ந்து பத்து நிமிஷம் கூட ஆகலை அதுக்குள்ள மரியாவையே மாங்கா மடச்சி மாதிரி நடந்துக்க வைக்கிறா… வெரி டேஞ்சரஸ் மஷ்ரூம்’ என எண்ணிக் கொண்டாலும் தன் பார்வையை விலக்கவில்லை. 

“நீ புடவையே கட்டிக்கலாம். பாஸ் ஓகே சொல்லிட்டாங்க.” குதூகலமாய் சொல்ல

“எஸ்!” தன் கரங்களை மடக்கி பின்னுக்கு இழுத்து வெற்றிக்குறி காட்டியவளின் முகம் சட்டென வாட,

“இப்பவும் எனக்கு இந்த வேலை வேண்டாம். என்னால மனு சார்கிட்ட சிறப்பா வேலை பார்க்க முடியும்னு தோணல…” என இழுக்க,

“உன்னை ட்ரெயின் பண்ண நான் இருக்கும் போது ஏன் கவலைப்படுற? சியர் அப்!” என தோளில் தட்டி ஊக்கம் கொடுக்க மீண்டும் மதுவின் கண்களில் மின்னல் வெட்ட,

‘மஷ்ரூம் கண்ணில் மேக்னெட் இருக்கு! அதான் மரியாவை கட்டி இழுக்குது!’ (மரியாவை மட்டும் தானா?) என எண்ணிக் கொண்டவன்

‘நான் ஏன் அங்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என கடிந்து கொண்டு தன் பார்வைக்காக காத்திருந்த கோப்பில் பார்வையை செலுத்தினான்.

உயிராகலாம்…

5 Comments

 1. Thaji says:

  அவளும் தான் என்ன பண்ணுவாள் இப்படிபட்ட உடைய முன்னாடி போட்டிருக்க மாட்டாள்தானே
  ஒழுக்கம் அவர் அவர் மனதில் தான் இருக்கு என்று போக போக புரிந்து கொள்வாள் தானே
  இந்த மனுவை பாஸ் என்று அழைக்கணுமாக்கும் ஏன் பெயர் சொன்னா பிடக்காதாம…..🤪

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   ஹா ஹா ஹா… பாஸ்ன்னு கூப்பிடணும்கிறதெல்லாம் மத்தவங்களுக்கு தான். மகாராணியோட மனு சாருக்கு அவன் அடிமை! போகப்போக எல்லாத்தையுமே புரிஞ்சுப்பா. மனு புரிய வைப்பான். பார்க்கத்தானே போறீங்க.

   Like

 2. Bamini Kani says:

  மனு சார் முடிவை மாற்றியதற்கு காரணம்…மரியா,சபரிநாதன்,மதுரா….ஏன் மனு சார் கூட இல்லை.
  எல்லாம் இந்த அம்முயோக பண்ணும் அட்டகாசம் தான்.

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   ஹா ஹா ஹா… தெரிஞ்சிருச்சா? உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா? என்ன செய்ய எங்க டிஸைன் அப்படி!

   Liked by 1 person

 3. Anonymous says:

  Kannu eerkuthaamaa… interesting

  Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s