உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் #30

இதோ, மூன்று நாட்கள் ஓடிவிட்டது. அலுவலகத்திற்கும் போகவில்லை. பவானியிடம் அரை வாங்கியதில் இருந்து மீள முடியாமல் மறுகிக் கொண்டிருந்தான் பிரபா.

நந்தினியை பார்க்கப் போனான். நிவியோடு பொழுதை கழித்தான். அன்னையோடு சத்துணவு கூடத்திற்கு கூட சென்று பார்த்துவிட்டான். ஒன்றும் அவன் மனநிலையை மாற்றுவதாக இல்லை. கடைசியில் ஆதிக்கு அழைத்து பேசியவுடனேயே இயல்புக்கு திரும்பினான்.

இனி அங்கு வேலை பார்க்க முடியாது என்னும் முடிவுக்கு வந்தவனாய் சிவானந்தத்தை பார்க்கச் செல்ல, இவனுக்கு முன்னால் தட்டு தடுமாறி உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் பவானி.

அவள் ஒருபக்கம் செல்ல எத்தனிக்க, கால்கள் வேறு பக்கம் அழைத்து சென்றன. எங்கு விழப் போகிறாளோ என்னும் பதட்டத்துடன் அவள் பின்னே சென்றவனை கண்டு கொண்டவள்,

“ஹாய் பிரபா! ஆர் யூ ஆல்ரைட்?” என அவன் கன்னம் தடவி… மயங்கி விழப் போக, தாங்கிக் கொண்டவன், கைகளில் ஏந்திக் கொண்டு வேலையாள் அவளது அறையை காட்ட… மாடிக்கு தூக்கிச்சென்று கட்டிலில் கிடத்தி விலகியிருந்த டீ ஷர்ட்டை சரிசெய்து, நெற்றி வருடி,

“வனிம்மா!” அவனது அழைப்புக்கு சிறு முறுவல் தோன்றியது அந்த செப்பு இதழ்களில்.

“சாரிடா உன்னோட இந்த நிலைக்கு நான் தான் காரணம். இது தற்காலிகம் தான். நிரந்தரமா உன்னை பலிகொடுக்க முடியாமல் தான் செஞ்சேன். இந்த குடியையும், அர்ஜுனையும் விட்டு நீயும்… உன் நினைவில் இருந்து நானும் எப்படி மீளப் போறோம்னு தெரியல… சீக்கிரம் மீண்டு வந்துடு வனிம்மா…” பார்வையால் வருடியவன், கீழே செல்ல…

சிவானந்தன் தனது அறைக்கு அழைத்துச் சென்று,

“பிரபா… உங்கிட்ட மனசு விட்டு பேசணும். பேபிம்மாவை பத்தி உனக்கு தெரிஞ்சிருக்கும்… இயல்பா ரொம்ப நல்ல பொண்ணு தான். எனக்குத் தான் ஒழுங்கா வளர்க்கத் தெரியல… இந்த ஆறு மாசமா தான் எல்லாம்.

அர்ஜுன் கனடால படிப்பு முடிச்சுட்டு வந்த பிறகு தான் நம்ம கம்பெனிக்கு கஷ்டகாலம் ஆரம்பம் ஆச்சு. பேபிகிட்ட எவ்வளவோ சொன்னேன் யாரையும் சட்டுன்னு நம்பாத, அதிலும் அவனுங்க நம்மை இவ்வளவு நாளா எதிரியா பார்த்தவங்க திடீர் மாற்றம் நல்லதுக்கு இல்ல…

ஏதாவது திட்டம் போட்ருக்கலாம்னு எடுத்துச் சொன்னேன். கேக்கலையே… ரெண்டு ஆர்டர் கை விட்டு போன பிறகு தான் எனக்கும் ஓரளவுக்கு புரிஞ்சுது. அதான் உன்னை தேர்ந்தெடுத்தேன்.

கம்பெனியை காப்பாத்திக் கொடுத்துட்ட… என் பெண் வாழ்க்கையையும் காப்பாத்திட்ட அதே போல அவளையும் காப்பாத்திடு என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடு பிரபா…!

இதை கேக்குற அருகதை எனக்கிருக்கான்னு தெரியல… ஆனால் நீ தான் வேணும்னு பிடிவாதமா இருக்கா… இப்போ மூணு நாளா தான் இந்த குடிப்பழக்கம்… ஏமாந்த வலி உன்னால் அவளை சரி பண்ணிட முடியும்… தயவு செஞ்சு மறுக்காத..” என கரம் பற்றிக் கெஞ்ச… சற்று நேரத்திற்கு ஒன்றுமே விளங்கவில்லை பிரபாவிற்கு.

பாவம், இதய நோயாளியான அந்த தந்தைக்கு மகளின் குடிப்பழக்கம் கடந்த நான்கைந்து மாதமாக இருப்பது தெரியவில்லை. இரவு சீக்கிரம் உறங்க சென்றுவிடுவதால் அவரால் பவானியின் பழக்கத்தை இனம் கண்டுகொள்ள முடியவில்லை.

தன்னை படிக்க வைத்தவர் என்பதாலா அன்றி தன்னால் பாவனியை மறக்க முடியாது என்பதாலா என பிரித்தறிய முடியாமல் அவர் கெஞ்சுவது மனதை பாதிக்க சட்டென தன்னவளை மணக்க சம்மதம் சொல்லிவிட்டான்.

“அர்ஜுனை பேபிம்மா விரும்பினது தெரியும் தானே பிரபா…?” பரிதவிப்புடன் கேட்க…

“எனக்கு எல்லாம் தெரியும். தெரிஞ்சு தான் சம்மதம் சொல்றேன். பவானிம்மா உங்க பொண்ணு ஐயா! நான் அவங்கள மணக்க அந்த ஒரு காரணம் போதும்.” என்றவனை கண்ணீர் மல்க அனைத்துக் கொண்ட சிவானந்தன், சம்பந்தம் பேசுவதற்காக முருகனின் இல்லம் நோக்கிச் சென்றார்.

முதலாளி தன் வீட்டிற்கு வரவும், என்னவோ ஏதோ என்ற பதட்டத்தில் திகைப்பும் விழிப்புமாய் வரவேற்கக் கூட தோன்றாமல் முருகன் நிற்க… அவர் தோளில் இடித்து உள்ளே வரச் சொல்லுங்கள் என்பது போல் கண் ஜாடை காட்டினார் வள்ளி. அதன் பிறகே பல வணக்கங்களை வைத்து முதலாளியை உள்ளே அழைத்துச் சென்றார்.

மூவர் அமர்வது போல் மூங்கில் இருக்கை அதில் தான் அமர வைக்க வேண்டியதிருந்தது. இதுவும் பிரபா வேலைக்கு சென்ற பிறகு வாங்கியது தான். அதற்கு மேல் இருக்கைகள் போட அங்கு இடமில்லை. அதோடு அவர்கள் மூவருக்கும் இந்த வீடு போதும் என்பதாலும் வசதிகள் அதிகம் இல்லாமலேயே இருந்தது.

முருகன் கையை கட்டிக் கொண்டு நிற்க, வள்ளி அடுக்களையில் கையை பிசைந்து கொண்டு நின்றார். முதலாளிக்கு குடிக்க என்ன கொடுப்பது? என்பது தான் அவரது பெருங்கவலையாக இருந்தது.

‘காபி குடிப்பாரா? இல்ல பாலாவே கொடுப்போமா?’ அதற்குள் சிவானந்தம் வள்ளியை அழைத்துவிட்டார்.

“அம்மா இப்படி கொஞ்சம் வாம்மா… இது உங்க ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு பேச வேண்டிய விஷயம். அருமையான பிள்ளைய பெத்து வச்சிருக்க மகராசி. சுத்தி வளைச்சு பேச விரும்பல. என் பொண்ணை உங்க பிரபாவுக்கு எடுத்துக்குறீங்களா?” அவர் பணிவோடு கேட்க,

முருகனும், வள்ளியும் மயங்கி விழாத குறையாய் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க, அந்நேரம் தான் பிரபா வந்தான்.

“வாங்கய்யா…” வரவேற்போடு வந்தவனை,

“மாமா என்றே கூப்பிடுங்கள் மாப்பிள்ளை” சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருந்தார் முதலாளி.

இது கனவிலும் பிரபாவுக்கு கிடைக்க முடியாத பேரதிர்ஷ்டம், முதலாளி நல்லவர், கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசான மகள். பெண்ணும் அழகி, இங்கு பெண்ணெடுப்பது கொடுப்பினை அல்லவா? அப்படி தான் இருவருக்கும் ஓடிக் கொண்டிருந்தது.

பாவம், வெள்ளந்தியான மனிதர்கள்… இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் தன் வீட்டு டிரைவரின் மகனை ஏன் கேட்டு வந்தார் என யோசிக்கத் தவறிவிட்டனர்.

பவானியின் குடிப்பழக்கம் மட்டும் தெரிந்திருந்தால் முதலாளியின் காலில் விழுந்து திருப்பி அனுப்பியிருப்பார் வள்ளி. மாற்றுக் கருத்துக்கு வழியேயில்லை என்னும் போது சந்தோஷமாகவே சம்மதித்தனர் இருவரும்.

அடுத்து, பிரபா வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டுமென்றார் சிவானந்தன். இது ஓரளவிற்கு முருகன் எதிர்பார்த்ததே. வள்ளிக்கு வருத்தம் என்பதை அவர் முகமே கட்டிக் கொடுத்துவிட்டது. பிரபாவுக்கு இதில் சுத்தமாக உடன்பாடில்லை என்பதை அவன் பேச்சு உணர்த்தியது.

“ஐயா மன்னிக்கணும்… இந்த வீடு உங்க பொண்ணுக்கு வசதிப்படாது தான். இதைவிட நல்ல வீடா பார்த்து உங்க பொண்ணை என்னால வசதியா வாழ வைக்க முடியும்” பணிவோடு சொன்னவனை தோளோடு அணைத்துக் கொண்டவர்,

“மாப்பிள்ளை உங்க தகுதியும், திறமையும், நல்ல குணமும் தெரிஞ்சு தான் வந்திருக்கேன். என் பொண்ணோட வசதிக்காக நீங்க என் வீட்டோட இருக்கணும்னு சொல்ல வரல, எனக்காகத் தான்.

என் மகளை விட்டா எனக்குன்னு யாரும் இல்ல. நீங்க தனிக்குடித்தனம் போய்ட்டா நான் அநாதையாயிடுவேன். செத்துக் கிடந்தா கூட யாருக்கும் தெரியாது மாப்பிள்ளை!” அவரது வருத்தம் புரிய அதற்குமேல் அங்கு யாராலுமே மறுக்க முடியவில்லை.

வரும் முகூர்தத்திலேயே திருமணம் என முடிவாகியது. அதற்கான காரணம் பிரபாவுக்கும், சிவானந்தனுக்கும் மட்டும் தான் தெரியும்.

அர்ஜுனின் திருமணத்தன்றே தனக்கும் திருமணம் நடக்க வேண்டும். பிரபா தான் வேண்டும்…. என்பது மகளின் கட்டளை.

அவளின் பிடிவாதம் அவர் அறிந்ததே. இந்த அளவுக்காவது அர்ஜுன் பைத்தியம் தெளிந்ததே எனத் தேற்றிக் கொண்டவர் திருமண வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர்.

இரண்டு நாட்ளாகவே நந்தினியின் மனம் அவளுக்கு இன்பக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தது. தாய் அறியாத சூளா? தான் தாய்மை அடைந்துவிட்டோம் எனத் தெரிந்தாலும் அதை எப்படி கணவனிடம் சொல்வது என்பதில் தான் பிரச்சனை.

நாட்கள் தள்ளிப் போயிருந்தாலும் கர்பவதிகளுக்கே உரிய எந்த உபாதையும் அறிகுறியுமில்லை என்பது தான் பெரும் குழப்பத்திற்கு காரணம். இதற்கு மேல முடியாது என்று தோன்றிவிட ராணியம்மாவிடம் சென்றுவிட்டாள்.

“அத்தை நான் உங்ககிட்ட பேசணுமே…” தயங்கித் தயங்கி சொல்ல,

‘இவ பேசணும்னு சொன்னாலே வில்லங்கம் தான். இப்ப எதை பற்றி சொல்லப் போகிறாளோ தெரியவில்லையே’ உள்ளூர பீதியுடனேயே மருமகளை அருகமர்த்திக் கொண்டார் சகுந்தலாதேவி.

‘அவனிடம் சொல்வது தான் சிரமமென்று நினைத்தாள் இவரிடம் சொல்வது அதைவிட சிரமமாக இருக்கிறதே’ சிந்தனை வயப்பட்டிருந்தவளை,

“நந்தினி!” என்னும் மாமியாரின் அழைப்பே சுயம் திருப்பியது.

“அது வந்து அத்தை… எனக்கு நாள் தள்ளிப்போயிருக்கு!”

‘சரியாய் தானே சொன்னோம் புரியுமா?’ யோசித்துக் கொண்டிருந்த மருமகளை அணைத்து உச்சிமுகர்ந்தவர்,

“மங்களாம்பிகா…! சந்தோஷம் தாயே…! உன் மாமனார் நம்மிடம் மீண்டும் வரும் நேரம் வந்துவிட்டது. எத்தனை வருட காத்திருப்பு…!” கண்கள் பனிக்க மீண்டும் அணைத்துக் கொண்டார்.

“அத்தை, எனக்கு தலை சுத்தல், வாமிட் இந்த மாதிரி எந்த உணர்வும் இல்லையே…” தெளியாமல் சொல்லும் மருமகளின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர்,

“நம் டாக்டரை வரச் சொல்வோம். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. எனக்கு கூட ரேகாவுக்கு ஒருமாதிரியும் விஜய்க்கு ஒருமாதிரியும் இருந்தது”

மருத்துவர் வந்து அனைத்து சோதனைகளையும் முடித்து கருவுற்றிருப்பதை உறுதி செய்தார்.

“இனி அதிக கவனத்தோடு இருக்க வேண்டும் நந்தினி. உன் கணவன் ஏற்கனவே நீ சிறு பெண்ணாக இருக்கிறாய் என்று தான் தள்ளிப் போட்டிருப்பதாகச் சொன்னான். போம்மா ஓய்வெடுத்துக் கொள். விஜய்க்கு தெரியுமா?”

“தெரியாது அத்தை.”

“நான் வரச் சொல்கிறேன், நீயே சொல்…”

அவளும் விதம் விதமாகத் தான் கண்ணாடிக்கு முன் நின்று சொல்லிப் பார்க்கிறாள்… எதுவும் பிடிக்கத் தான் மாட்டேங்கிறது.

“குட்டி நீங்க வந்துட்டீங்கன்னு அப்பா கிட்ட எப்படிச் சொல்ல? விஜய் நான் கன்சீவா இருக்கேன்… ம்ஹூம் ரொம்ப சாதாரணமா இருக்கே… விஜய் நீங்க அப்பாவாகப் போறீங்க… இப்படி தானே எல்லோரும் சொல்வாங்க… வேறு மாதிரி யோசி நந்தினி.

விஜய்! கடவுள் நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்திருக்கார். இது கொஞ்சம் ஓகே… இன்னும் பெட்டரா சொல்லலாமோ? போ, நாம ஏன் சொல்லணும்? உன் அப்பாவே கண்டுபிடிக்கட்டும்…” சட்டமாக கணவனுக்காக காத்திருக்கத் தொடங்கிவிட்டாள்.

அன்னையின் ஆணைப்படி அவனது வேலைகளை விரைவில் அடுத்தவருக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தவன், அன்னையை தான் முதலில் எதிர்கொண்டான்.

“அம்மா ஏன் இவ்வளவு அவசரமாக அழைத்தீர்கள்? அக்கா வீட்டில் அனைவரும் நலம் தானே?”

“விஜய், இப்படி உட்கார். எல்லோரும் நலம் தான். ஏதேனும் சாப்பிடுகிறாயா?” அவன் பதிலுக்கு காத்திராமல் வேலையாளிடம் இனிப்பு எடுத்துவரச் சொல்லி அதை மகனுக்கு ஊட்டினார்.

“உனக்கு இனிப்பான செய்தி ஒன்று இருக்கிறது… உன்னை எதிர்பார்த்து நந்தினி காத்திருக்கிறாள். அவளுக்கும் ஊட்டிவிடு” மகனை அனுப்பி வைத்தவர், சாயங்காலம் மங்களாம்பிகைக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்ய சொல்லி காரியஸ்தரிடம் கூறிக் கொண்டிருந்தார்.

“சிட்டு…” என்னும் அழைப்பு வந்தது தான் தாமதம், ஓடிச் சென்றவள் அலுவல் அறைக்கு முன்பாக அவனது விரிந்த கரங்களுக்குள் புகுந்து கொண்டாள். கண்களில் நீர் பெருக,

“தேங்க்ஸ் விஜய்… தேங்க்ஸ்… தேங்க்ஸ்…” இதைத் தவிர வேறு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை அவளுக்கு.

“சிட்டு, என்னடா…?” அவள் அமைதியாக இருந்திருந்தால் நிச்சயம் கண்டுபிடித்திருப்பான்.

கண்ணீரும் சிரிப்புமாய் அவள் நன்றி சொல்ல அவன் மூளை வேலை நிறுத்தம் செய்துவிட்டது. சுத்தமாக எதையும் யோசிக்க முடியவில்லை அவனால்.

அவன் மடியில் அமர்ந்தவளுக்கு யோசித்து வைத்திருந்தது எல்லாம் மறந்துவிட்டது. கழுத்தைக் கட்டிக் கொண்டு எவ்வளவு நேரம், எத்தனை முத்தம் என்பதெல்லாம் கருத்தில் பதியாமல் அவன் கேசம் கலைத்து… கன்னம் கடித்து தேங்க்ஸ், தேங்க்ஸ் என்னும் புலம்பலோடு முத்தங்களின் அர்ச்சனை நீண்டு கொண்டிருக்க, அவளது காதலில் தடுமாறியவன் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள சில மணித்துளிகள் தேவைப்பட்டன.

“போதும் சிட்டு… முதலில் இதெல்லாம் எதுக்குன்னு சொல்லு?” அவள் கன்னம் தாங்கிக் கேட்க,

“என்னை உங்க மனைவியா ஏத்துக்கிட்டதுக்கு…” விசும்பலுடன் சொல்ல…

“புரியலம்மா…”

“பட்டத்து அரசிக்கு தானே குழந்தை பெத்துக்கிற தகுதி இருக்குன்னு சொன்னீங்க… இப்போ எனக்கு அந்த தகுதி வந்துடுச்சான்னு தெரியல விஜய். பட், நீங்க உங்க மனசை மாத்திக்கிட்டீங்கல்ல அதுக்கு தான்.”

“நந்தினி… என் மனம் புரிந்த பின்னும் ஏன் அதில் இருந்து மீளாமல் தவிக்கிறாய்? நீ என் தேவதை நந்தினி. என் வார்த்தைகள் உன்னை இவ்வளவு காயப்படுத்தும் என நினைக்கவில்லை. மன்னித்துவிடு, முற்றிலுமாக மறந்துவிடு சிட்டு! ப்ளீஸ்…”

சற்று நேரம் அவளது விசும்பலைத் தவிர அங்கு வேறு சத்தமே இல்லாமலிருக்க கை என்னவோ அவள் முதுகு வருடினாலும் மூளை தன் வேலையை தொடங்கிவிட்டது.

“கருவுற்றிருக்கிறாயா நந்தினி?” கண்களில் மின்னல் வெட்ட மார்பில் தலை சாய்த்திருந்தவளின் முகம் நிமிர்த்திக் கேட்க,

ஏனென்று தெரியாது வெட்கம் வந்து ஒட்டிக் கொள்ள பதில் சொல்லாமல் அவன் முகம் பார்க்க முடியாமல் இன்னும் இன்னும் தன்னை அவனுள் புதைக்க முயன்றாள். அவளது முகம் இடமும், வலமுமாய் அவன் மார்பில் அலைய கிளர்ந்தான்.

“நந்தினி, என்னைப் பார்…” அன்னை கொடுத்துவிட்ட இனிப்பை அவளுக்கு ஊட்டியவன், அவள் விழுங்குவதற்குள்ளாக வாயோடு வாய் வைத்து அதை தனதாக்கிக் கொண்டான். இதை எதிர்பார்க்காதவளின் நாவில் வெறும் இனிப்பு சுவை மட்டும் ஒட்டியிருக்க செல்ல கோபத்துடன்,

“போடா…” முகம் திருப்பிக் கொண்டாள்,

“வா… அத்தான் கிட்ட வந்து எடுத்துக்கோ…” நாவில் இருக்கும் இனிப்பை காட்டி அழைக்க,

“வேண்டாம் போ…”

“நீ சொன்னா நான் விட்டுடுவேனா?” மீண்டும் இனிப்பு அவள் வாய்க்குள் வந்திருந்தது.

‘எப்படித் தான் இடம் மாற்றினானோ?’ என விழித்துக் கொண்டிருக்க…

“இப்படியே பார்த்துகிட்டு இருந்தா திரும்ப நானே எடுத்துப்பேன்” அருகில் வர, அவன் மார்பில் கை வைத்து தள்ளியவள் அவசரமாக விழுங்கிவிட்டாள்.

“சிட்டு, நான் தான் தேங்க்ஸ் சொல்லணும். ஐ லவ் யூ சிட்டு…” அவனது இறுகிய அணைப்பில்,

‘அம்மா…’ என கத்த வாய் திறந்தாள் சத்தம் தான் வரவில்லை அவன் தான் தடை செய்துவிட்டிருந்தானே. மெல்ல விலகியவனை முறைத்தவள்,

“போங்க விஜய். வலிக்குது… எப்போ என் எலும்பெல்லாம் நொறுங்கப் போகுதுன்னு தெரியல…”

“போடி மாவுருண்டை… நீ எப்போ தான் இதுக்கு பழகப் போறன்னு தெரியல…” கேலி செய்தவன் மீண்டும் தன் மெல்லிய அணைப்புக்குள் கொண்டு வந்திருந்தான்.

“சிட்டு, இனியாவது என்னை அத்தான்னு கூப்பிடலாம் தானே?” ஏக்கமாய் கேட்க…

“மஹூம்… எனக்கு விஜய் தான் பிடிச்சிருக்கு.”

“போடி!” வாய் தான் சொன்னது. கையோ அவளை தன் மீது இழுத்துப் போட்டுக் கொண்டது.

“கொல்றடி சிட்டு…”

பகலையும் இரவாக்கி அரசனை பித்தனாக்கினாள் அந்த அரசி.

நந்தினி இந்த இனிய செய்தியை பெற்றோரிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டாள். ராணியம்மா மருமகளை தரையில் விடாமல் தாங்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.

“உன் மாமா எனக்கு வாக்கு கொடுத்திருக்கிறார் பிறக்கப் போவது ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் அது என் கணவரின் ஆத்மா தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” கவனம்… கவனம்… லேசாக சோர்ந்து அமர்ந்தாலும் பதறிப் போனார்.

நந்தினிக்கு தான் ஐயோ பாவம் என்றாகிப் போனது மாமியாரின் நிலை. நந்தினி அதிகம் வெளியே செல்வதை அனுமதிக்கவில்லை. விஜய் அன்னைக்கு மேல் இருந்தான்.

அலைச்சல் கூடாது என்று மருத்துவர் சொன்னதும் போதும் மாடியில் இருந்து கூட கீழே இறங்க அனுமதிப்பதில்லை. உடனடியாக மின்தூக்கி அமைத்தான். அதுவரை யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கைகளில் ஏந்திக் கொண்டே ஏறி இறங்கினான்.

“விஜய், உங்க குழந்தைக்காக ரொம்பவும் தான் மாறிட்டீங்க…” கேலி செய்தவளின் கன்னம் கிள்ளியவன்,

“ஆமா இந்தக் குழந்தைக்காகத் தான்! இன்னும் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாமோன்னு தோணுது சிட்டு… நீ சின்ன பொண்ணுங்கிற மாதிரியே ஒரு ஃபீல்…” மனைவியின் மூக்கோடு மூக்கை உரசிக் கொஞ்ச,

“விஜய்… நீங்க பெரிய பையனா இருப்பதால நான் உங்க பக்கத்தில் ரொம்ப சின்னதா தெரியறேன்… மத்தபடி நானும் பெரிய பொண்ணு தான். அந்த கார்த்திகா சொன்ன மாதிரி எலி இல்ல…”

“எலியா? உன்னை அப்படியா சொன்னா? கரெக்ட் தான்…” என்றவனின் காதை திருகி அலறவிட்டாள்.

உன்மத்தமாகலாம்…

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s