உறவாய் உயிராய்…!!! அத்தியாயம் #4

“சாரி சார்…! உங்களை தப்பு சொல்லணும்ங்கிறது என்னோட நோக்கம் இல்லை. எங்களோட தேவைகள் அதிகம். மணியும், குணாவும் பக்கத்தூர் பாலிடெக்னிக்கில் படிக்கிறாங்க. பஸ் காசு கொடுக்க முடியாம நடந்து போயிட்டு வராங்க. இப்படி ஏதாவது காசு கிடைச்சா அவங்களுக்கு ஒரு சைக்கிள் வாங்கலாம்னு நினைச்சு தான் சொன்னேன்.

உங்களை கஷ்டப்படுத்தியிருந்தா மன்னிச்சுடுங்க மனு சார். தப்பா பேசியிருந்தா என்னை தண்டிச்சுக்கோங்க. பணம் கொடுக்கிறதை நிறுத்திடாதீங்க. என்னால எல்லோரும் பட்டினி கிடக்கக் கூடாது. ப்ளீஸ் சார்… மன்னிச்சுடுங்க”

அணையுடைத்த வெள்ளமாய் கண்ணீர் கண்களில் புரள கைகூப்பி இறைஞ்சுபவளை பார்த்தவனுக்கு கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டது. ஆயினும் நேற்று பெய்த மழையில் புதிதாய் முளைத்த காளான் தனக்கு புத்தி சொல்வதா? எனும் எரிச்சல் தணியாமல் இருக்க,

“கெட் லாஸ்ட்!” மீண்டும் சிங்கமாய் கர்ஜித்துவிட்டுப் போனான்.

விழியில் பெருகிய நீரை துடைத்துக் கொண்டு வந்தவளுக்கு மனம் முழுவதும் பாரமாய் இருந்தது.

‘நான் சொல்லாமல் அப்பாவை சொல்லச் சொல்லியிருந்தால் இப்படி கோபப்பட்டிருக்க மாட்டார்’ என்று தான் சறுக்கிய இடத்தை சீர்தூக்கிப் பார்த்து சரி செய்யும் யுத்தியை சிந்தித்துக் கொண்டு வந்தவளை,

“மதும்மா, நாளையில் இருந்து உனக்கு பரத் சார் ஆபீஸ்ல தான் வேலை” என தந்தை குதூகலமாய் சொல்ல,

‘சிங்கத்தோட குகைக்குள்ளே இல்ல இல்ல… அதோட வாய்க்குள்ளேயே போய் விழப் போகிறேன் போலவே…’ என மிரண்டு போனவளாய்,    

“என்னது… வேலையா…?!” அதிர்ச்சியும் மிரட்சியுமாய் விழிக்க,

“ஆமாம்மா… நான் தான் உனக்கு ஏதாவது நல்ல வேலை இருந்தா சொல்லச் சொல்லி கேட்டேன். கேட்டவுடனே வரச் சொல்லிட்டார். மூணு மாசம் ட்ரெயினிங்காம். அப்புறம் பெர்மனென்ட் பண்ணிடுவாங்களாம்” என விளக்க, கணக்கெழுதும் வேலையாகத் தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு அதை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பியவளாய்,

“என்ன வேலைப்பா?” சிறு சந்தோசம் எட்டிப் பார்க்கக் கேட்டாள்.

“பரத் சாரோட செக்ரெட்டரி, வேலையை விட்டு போகப் போறாங்களாம். அந்த வேலைக்கு தான் உன்னை எடுக்கிறாங்க” என தந்தை சத்தமில்லாமல் குண்டு வீச,

“செகரெட்டரியா?” எந்நேரமும் அவன் கண்முன்னேயே இருக்க நேரிடுமே எனும் பதற்றம் தொற்றிக்கொள்ள கேட்டாள்.

“ஆமாம்டா. பொறுப்பான வேலை. ரொம்ப கவனமா செஞ்சு நல்ல பேர் வாங்கனும்”

‘நல்ல பேரா? கெட்ட பேர் வாங்காம இருந்தால் போதும். சரியான முசுடா இருப்பார் போல… சட்டுன்னு கோபப்படுறார்… என்ன பண்றது…? எப்படியாவது சமாளிப்போம்’ என தன்னையே தேற்றிக் கொண்டாலும் சற்று முன் நடந்த நிகழ்வினால்,

‘நாளை வேலையில் சேர்த்துக் கொள்வாரா?’ எனும் சந்தேகம் தலை தூக்க,

‘இதை நம்பிக்கொண்டு இப்பொழுது இருக்கும் வேலையையும் விட்டுவிடக் கூடாது. நாளை ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு போய் பார்ப்போம். சாதகமாய் அமைந்தால் இந்த வேலையை விடுவது பற்றி முடிவு செய்யலாம்’ என தெளிவான திட்டமிடலுடன் தூங்கிப் போனாள்.

காலையில் மனுபரதனின் அலுவலகத்திற்கு கிளம்பியவள் தன்னிடம் இருக்கும் உடையில் கொஞ்சம் புதிதாக இருக்கும் சுடிதாரை அணிந்து கொண்டு முதுகை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் கூந்தலை கிளிப்பில் அடக்கி நெற்றியில் சிறிய பொட்டை ஒட்டிக்கொள்ள, ஒப்பனைகள் ஏதுமின்றி மாநிறத்தில் இருந்தாலும் அவளது முகம் பளீரென இருந்தது.

அந்த பிரத்யேக பொலிவிற்கு காரணம் அவளது தன்னம்பிக்கை என்றும் சொல்லலாம். அத்தன்னம்பிக்கை இன்று ஆட்டம் காணப் போவது தெரியாமல் மனுபரதனின் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

‘ஷார்க் ஷிப்பிங் கம்பெனி’ எனும் எழுத்துக்கள் தான் முதலில் வரவேற்றன. ஏதேனும் தொழிற்சாலை வைத்திருப்பான் என எண்ணிக் கொண்டு வந்தவளுக்கு ஷிப்பிங் கம்பெனியை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அங்கேயே சிறு பயம் பீடித்துக் கொண்டது.

மனுபரதன், இன்ன பொருள் என்றில்லை யார் யாருக்கு என்னென்ன பொருள் தேவைப்படுகிறதோ அனைத்தையும் அவர்களது தேவைக்கேற்ப பல நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்கிறான்.

சொந்தமாக ரெண்டு கப்பல்கள் வைத்திருக்கிறான். சங்கரன் ஏற்றுமதி மட்டுமே செய்து கொண்டிருந்தார். மனுபரதனோ சொந்தமாய் கப்பல்கள் வாங்கிய பிறகு பிற நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு தேவையான பொருட்களை கொண்டு வரும் பணியையும் செய்யத் தொடங்கினான்.

சீனா, ஜப்பான், மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர், கொழும்பு, மாலதீவ்ஸ் போன்ற பல நாடுகளுடன் இவனது வாணிபத் தொடர்பு வளர்ந்திருப்பதெல்லாம் மதுராவிற்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் மனுவின் காரியதரிசியாய் தான் என்ன மாதிரியான வேலைகள் செய்ய வேண்டியதிருக்கும் என்று எதுவுமே புலப்படாமல் தான் சென்றாள்.

சாம்பல் வண்ண கோட்டும் உள்ளே வெள்ளை சட்டையும் அணிந்து, தோள் வரை விரவியிருந்த கேசத்தை விரியவிட்டு இதழ்களில் புன்னகையை தவழவிட்டபடி வரவேற்பறையின் டெஸ்கில் இருந்த பெண்,

“வெல்கம் மேம், நான் உங்களுக்கு எந்த விதத்தில் உதவனும்?” என தத்தை மொழியில் பேச அவளது குரலை கேட்டுக் கொண்டே, புன்னகை தவழும் லிப்ஸ்டிக் பூசிய சிவந்த அதரங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்ற மதுரா அப்படியே நின்றுவிட்டாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ மேம்…” என மீண்டும் அப்பெண் அழைக்க,

‘ஐயோ! என்ன இது சின்னபுள்ளத்தனமா ஆன்னு பார்த்துட்டு இருக்கோம்’ என்று தன்னையே கடிந்து கொண்டு,

“மனுபரதன் சாரை பார்க்கணும்” என ஒருவாறு சொல்லி முடித்தாள்.

“அப்பாயின்ட்மென்ட் இருக்கா?”

“இல்ல… அவங்க தான் வரச் சொன்னாங்க”

“உங்க பேர் என்ன மேம்? எங்கிருந்து வர்றீங்க?”

“மதுரா. அன்னை இல்லத்தில் இருந்துன்னு சொல்லுங்க, தெரியும்”

“வெயிட் பண்ணுங்க மேம்” என ஆளை விழுங்கக் காத்திருக்கும் சோஃபாவை நோக்கி கைகாட்டியவள் தொலைபேசியை கையில் எடுக்க, சோஃபாவில் பொதிந்து போனவளாய் சுற்றுப்புறத்தை நோட்டமிட்டாள்.

சிறிய வரவேற்பறை என்றாலும் இருவர் அமரும் இருக்கைகள், சிறிய மோடா, ரிசப்ஷன் டெஸ்க், அழகிய செயற்கை நீரூற்று, மணிபிளாண்ட் கொடிகள் என பார்ப்பதற்கே ரம்மியமாய் இருந்தது அவ்விடம். அதன் அழகில் லயித்திருந்தவளை

‘மேம்’ எனும் ரிசப்ஷனிஸ்ட்டின் குரலே இயல்புக்கு கொண்டு வந்தது.

“சார், வெளியே போயிருக்காங்க. நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க. பத்து நிமிஷத்தில் செக்ரெட்டரி மரியா வந்து உங்களை அழைச்சுக்கிட்டு போவாங்க. ட்ரிங்க் எடுத்துக்கோங்க” என குளிர்பானத்துடன் தகவலையும் பகிர்ந்து கொள்ள,

அப்பொழுது தான் அப்பெண்ணின் நீண்ட வழவழப்பான கால்களை கண்டவள் லேசாய் திடுக்கிட்டாள்.

ஏனெனில் அப்பெண் மேற்கத்திய பெண்களின் பிரத்யேக அலுவலக உடையான கோட்டும், ஸ்கர்ட் எனப்படும் சிறிய பாவாடையும் அணிந்திருந்தாள். அது முட்டிக்கு சற்று மேலே குறுகலாக உடலமைப்புடன் கனகச்சிதமாய் பொருத்தி இருந்தது.

‘நம்ம ஊரிலும் இந்த மாதிரி உடுப்பெல்லாம் போடுறாங்களா?’ என வாய்பிளக்காத குறையாய் பார்த்துக் கொண்டிருக்க,

அந்நேரம் முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி மதுராவை நோக்கி வந்தாள். இவளும் அதே போன்ற உடையை தான் அணிந்திருந்தாள். வண்ணம் தான் மாறியிருந்தது. அவள் சாம்பல் நிறமென்றால் இவள் கரும் ஊதாவில் அணிந்திருந்தாள். இவளும் ஒப்பனையும், விரிய விடப்பட்டிருந்த கூந்தலுமாய் தான் இருந்தாள்.

‘ஒருவேளை இது அவங்க யூனிஃபார்ம் மாதிரியோ? அப்படியெனில் நாமும் இப்படி தான் உடுத்த வேண்டுமா?’ மிரண்டு போனவளாய் அமர்ந்திருந்தவளின் முன்னே வந்த பெண்மணி,

“ஹாய், ஐம் மரியா” என கரத்தை நீட்ட, செக்ரெட்டரி எனும் பேட்ஜ் அவளது பணியென்ன என்பதை பகிரங்கப்படுத்தியது.

“ஐம் மதுரா” என கரம் குலுக்கி லேசாய் முறுவலிக்க,

“நீங்க வருவீங்கன்னு பாஸ் சொன்னாங்க… நான் தான் உங்களை ட்ரெயின் பண்ணப் போறேன். வாங்க போகலாம்” என உள்ளே அழைத்துச் சென்றாள்.

சதுர வடிவமான ஹாலில் ஒருபுறம் முழுவதும் கண்ணாடி தடுப்பு உருவாக்கி தனி அறை ஒன்றிருக்க அதனருகே நான்கு கேபின்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்க அதில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் கம்ப்யூட்டரோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். அவ்வளவு தான் அலுவலகம்.

கண்ணாடி தடுப்போடு பொருத்தியிருந்த கண்ணாடி கதவில் மனுபரதன் மேனேஜிங் டைரக்டர் எனும் தங்க நிற எழுத்துக்கள் மின்னின. அதை தள்ளிக்கொண்டு உள்ளே போக நேர் எதிரே மரியாவின் டேபிள் இருந்தது.

அதன் பக்கவாட்டில் சுழல் நாற்காலியுடன் கூடிய கண்ணாடி டேபிள் அதில் பென் ஹோல்டரும், லக்கி பேம்பூ செடியும் மனுபரதன் எனும் பெயர் பலகையும், எதிரே இரண்டு இருக்கைகளும் மட்டுமே  இருந்தன. மரியாவின் டேபிளில் தான் ஏகப்பட்ட கோப்புகள், பேப்பர்கள் எல்லாம் குவிந்திருந்தன. இதை கண்டதும்,

‘இங்கு மேனேஜிங் டைரக்டர் மரியாவா? மனு சாரா?’ எனும் பெரும் சந்தேகம் தலை தூக்க,

“இது தான் ஆபீஸா?” என கேட்டுவிட்டு உளறிவிட்டோமே என்று நாக்கை கடித்துக் கொண்டாள்.

“என்னடா இது, ஆறு பேர் தான் வேலை பார்க்கிறாங்க… இதுக்கு ஒரு ஆபிஸ் அப்புறம் ஒரு எம்டி ன்னு யோசிக்கிறியா?” என கண்கள் மலரக் கேட்டவள்,

“பாஸ் பண்றது ஷிப்பிங், எக்ஸ்போர்ட் பிஸ்னஸ். மோஸ்ட்லி ஹார்பர், கோடவுன்ல தான் அதிக வேலையும் அதற்கான ஆட்களும் இருப்பாங்க. இங்க அக்கவுண்ட்ஸ் மெயின்டனன்ஸ், கிளையன்ட் மீட்டிங், டீலர்ஸ் கான்ட்ராக்ட் இப்படி தான் இருக்கும்.

இது ஆபீஸ் வொர்க் மட்டும் பார்க்கிற ஏரியா. இதை வச்சு பாஸ் ஏதோ சின்ன கம்பெனி வச்சிருக்கிறதா நினைச்சுக்காத. ரெண்டு கப்பலே சொந்தமா வச்சிருக்காங்க” என மனுபரதனின் பிரதாபங்களை மரியா பெருமையாய் சொல்ல,

“கப்பலா?” மதுரா ஆச்சரியத்தில் விழிவிரிய கேட்க, கள்ளம் கபடம் இன்றி அழகாய் விரியும் மதுராவின் விழிகள் மரியாவை கவர,

“உன் கண்கள் ரொம்ப அழகாயிருக்கு” என பொறாமையின்றி இயல்பாய்ச் சொன்னாள்.

இப்படி யாரும் நேருக்கு நேர் சொல்லி கேட்காததால் சிறு வெட்கமும், கூச்சமும் போட்டி போட நன்றி சொன்னாள்.

“முதல்ல இந்த ட்ரெஸ்ஸை போட்டு காட்டு, சைஸ் கரெக்ட்டா இருக்கான்னு பார்க்கணும். சரியான சைஸை கன்பார்ம் பண்ணி சொல்லிட்டோம்னா ஈவினிங் நீ வீட்டுக்கு கிளம்புறதுக்குள்ள ட்ரெஸ் வந்துடும். நாளையில் இருந்து போட்டுட்டு வந்துடலாம்” என அவள் அணிந்திருப்பது போல ஸ்கர்ட் மற்றும் கோட் செட்டை கொடுக்க,

“எனக்கு இதெல்லாம் வேண்டாம். ஆசிரமத்தில் இருந்தாலும் நல்ல உள்ளம் கொண்ட நிறைய பேர் அவங்க சில தடவை மட்டுமே பயன்படுத்திய புதிய ஆடைகளை எங்களுக்கு கொடுப்பாங்க. அதில் நேர்த்தியா இருக்கிறதை போட்டுட்டு வரேன்” சிறியதாய் இருக்கும் ஸ்கர்ட்டை போட சங்கடப்பட்டு வேகமாய் மறுத்தாள்.

ஏனோ மரியாவிற்கு மதுராவை மிகவும் பிடித்துப் போனது. அதனால் அவளது அபத்தமான பேச்சில் கோபம் வரவில்லை. அதற்கு காரணம் மதுரா அனாதை என்பதால் உண்டான மென்தன்மையாகக் கூட இருக்கலாம். எனவே பொறுமையாகவே,

“பார் மதுரா, இது யூனிஃபார்ம். இதைத் தான் போடணும். பாஸை பார்க்க வர்ற எல்லோரும் நேரே அவரை போய் பார்க்க முடியாது. அப்படி பார்க்க நாம அனுமதிக்கவும் கூடாது. முதல்ல அவங்க யார், என்ன விஷயமா பார்க்க வந்திருக்காங்கங்கிறதை எல்லாம் விசாரிச்சு பாஸ்கிட்ட சொல்லி அப்பாயின்ட்மென்ட் பிக்ஸ் பண்ணிக் கொடுக்கணும்.

அதுக்கு நாம எல்லோரும் எளிமையா அணுகும்படியா இருக்கணும். பார்த்ததும் நாம மனுபரதன் சாரோட செக்ரெட்டரின்னு தெரியணும்ங்கிறதுக்காகத் தான் இந்த பார்மல் ட்ரெஸ்ஸும், செகரட்டரிங்கிற பேட்ஜும் அதுக்கு மேல எம்பிராயிடரி பண்ணியிருக்கும் நம்ம கம்பெனி லோகோவும்.

சோ, உனக்கு வேற ஆப்ஷனே இல்ல. ட்ரெஸ்ஸை ட்ரை பண்ணிப் பாரு. பாஸ் இப்போ வந்துடுவாங்க” என துரிதப்படுத்தினாள்.

ஒரு சாதாரண ஆடைக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் ஒளிந்திருக்கும் என எண்ணாததால் வெகு எளிதாய் மறுத்திருக்கிறோமே என நொந்து கொண்டாலும்,

“ப்ளீஸ், மரியா மேம்… எனக்கு இது வேண்டாம். வேற ட்ரெஸ்… ஸ்கர்ட்டுக்கு பதிலா லாங் பேண்ட்ஸ் மாதிரி மாத்திக்கிறேன்னு மனு சார்கிட்ட சொல்லுங்களேன்…” மீண்டும் விட்ட இடத்திற்கே வந்து நின்றாள்.

“பாஸோட தோழி சாதனா மேம் இன்னொரு பிஸ்னஸ் ஐகான். அவங்க நீ சொல்ற மாதிரி தான் ட்ரெஸ் பண்ணுவாங்க. சோ, பாஸ் செக்ரெட்டரிக்கு அந்த மாதிரி உடையை ஒத்துக்கொள்ள மாட்டாங்க. நீ ரொம்ப ஒல்லியா தான் இருக்க… இந்த ட்ரெஸ் உனக்கு அழகா தான் இருக்கும். கால்ல இருக்கும் பூனைமுடியெல்லாம் பார்லர்ல வாக்ஸ் பண்ணிக்கலாம். அதை பத்தியெல்லாம் யோசிக்காதே” சற்று கண்டிப்புடன் சொல்ல,

‘பார்லருக்கு வேறு செலவு செய்ய வேண்டுமா? இதெல்லாம் எனக்கு கட்டுபடியாகாது’ என அதிர்ந்தவள், மீண்டும் மறுப்பாய் தலையசைத்து,

“எனக்கு இது வேண்டாம்” என பிடிவாதம் பிடிக்க,

“மதுரா… இதில் நீ இந்த அளவுக்கு மறுக்கவோ, யோசிக்கவோ எதுவுமேயில்லை. நாம என்ன உடுத்தினாலும் அழகாயிருப்போம், என்ன செஞ்சாலும் அது சரியா இருக்கும்ங்கிற நம்பிக்கை உனக்கு இருக்கனும்.

உள்ளூர பயம் இருந்தாலும் அதை காட்டிக்காம ரொம்ப கெத்தா தைரியமா நடந்துக்கனும் இல்லைன்னா இந்த உலகம் உன்னை சுலபமா ஏமாத்திடும்.

சில சமயங்களில் பாஸ் செய்ய வேண்டிய முக்கால்வாசி வேலையை அவர் சார்பாய் நாம தான் செய்யனும். நீ இப்படி பின்வாங்கினா ரொம்ப கஷ்டம். மீட்டிங் அரேஞ்ச் பண்ணனும்னு மட்டும் தான் பாஸ் சொல்வாங்க.

எல்லோருக்கும் இன்விடேஷன் அனுப்பி, மீட்டிங் ஹால் புக் பண்ணி, வாட்டர் பாட்டில், ஸ்னாக்ஸ் மாதிரி லைட் ரெப்ஃரெஷ்மென்ட் அரேஞ்ச் பண்ணி, எத்தனை பேர் வருவங்கன்னு கன்பார்ம் செய்து, ஏர்கான், மைக் எல்லாம் சரியா ஒர்க் பண்ணுதாங்கிற வரை எல்லா வேலையும் நாம தான் செய்யனும்.

சில நேரம் பிஸ்னஸ் லஞ்ச், டின்னர் எல்லாம் கூட ஹோஸ்ட் பண்ண வேண்டியதிருக்கும். இதுக்கே இவ்வளவு யோசிச்சேன்னா அதெல்லாம் எப்படி சக்கஸ்புல்லா பண்ணுவ? ஸெல்ஃப் கான்ஃபிடென்ஸ் ரொம்ப முக்கியம் மது! அதை இந்த ட்ரெஸ் மாற்றத்தில் இருந்து வெளிப்படுத்த ஆரம்பி” என விரிவாய், தெளிவாய் விளக்கம் கொடுத்தாள்.

செக்ரெட்டரியாய் அவள் செய்ய வேண்டிய வேலைகளில் சிலவற்றை கோடிட்டு காட்டியதற்கே மதுராவிற்கு கண்களை கட்டிவிட்டது. மின்விசிறியின் கீழ் அமர்ந்து கணக்கெழுதி, பணம் எண்ணி பட்டுவாடா பண்ணுவது போல் இது சுலபமான வேலை இல்லை என்பதும் தெள்ளத்தெளிவாய் தெரிய,

இதையெல்லாம் தன்னால் சிறப்பாக என்றில்லை, சரியாகக் கூட செய்ய முடியாது என்று தோன்றிவிட இந்த வேலை தனக்கு செட்டாகாது. தனக்கு பாத்திரக்கடையே போதும் எனும் முடிவுக்கு வந்துவிட்டாள்.

மனு உன்னை மனுஷியா கூட மதிக்க மாட்டான். அவனோட கோர்த்து விடத் தான் உனக்கிந்த வேலையே, நீ வேண்டாம்ன்னு சொன்னா நாங்க எப்படி கதையை நகர்த்துறது? என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேம்மா…!

உயிராகலாம்…

4 Comments

 1. Thaji says:

  உடையை பாத்து அவள் மிரண்டு விடடாள்
  அழகான பதிவு 😀❤️

  Like

  1. akmlakshmi says:

   நன்றி பா. உடை மட்டுமா? இனி அவளுக்கு எல்லாமே மிரட்சி தான்.

   Like

 2. Kavitha28 says:

  Superb korthu vidal… interesting

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   ha ha ha… thanks pa.

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s