உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் #3

மனுபரதனோ தனது அலுவலகத்தின் சுழல் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் காட்சிப்பிழையாய் மனதில் விரியும் வேணியோடான தனது பால்ய பிராயத்து நினைவுகளை தடுக்க முடியாது வேண்டா வெறுப்பாய் அதை ரசிக்கத் தொடங்கினான்.

பழைய நினைவுகளின் தாக்கம் சற்று கூடுதலாய் இருக்க, அன்னை இல்லத்திற்கு அழைத்த மனுபரதன் அதன் உரிமையாளர் சபரிவாசனிடம் அன்றைய இரவு உணவை பெரிய உணவகத்தில் இருந்து வரவழைத்து தானும் அவர்களுடன் சேர்ந்து உண்ணப் போவதாய் சொல்ல மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் அறுபது பேருக்கு தினமும் அன்னமளிப்பவன் ஆயிற்றே. சபரிவாசனிடம் அந்த நன்றி மிளிர்ந்தது.

‘அன்னை இல்லம்’ பழைய காலத்து சுற்றுக்கட்டு வீட்டில் தான் அமைந்திருந்தது. அறைகள் அதிகம் இல்லாது மூன்று நீண்ட பத்திகளை கொண்டிருப்பது கூடுதல் வசதி. முதல் பத்தியில் ஆண் பிள்ளைகளும், அடுத்ததில் பெண் குழந்தைகளும் இருக்க, மூன்றாம் கட்டைத் தான் சாப்பாட்டுக் கூடமாய் பயன்படுத்திக் கொண்டனர். 

பிள்ளைகளுக்கென்று தனி அறையெல்லாம் கிடையாது. எல்லோரும் ஒன்றாகத் தான் படுத்துக்கொள்வர். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே இரும்பு பெட்டி உண்டு. அது தான் அவர்களது சொத்து.

நல்ல உள்ளம் கொண்டவர்கள் கொடுக்கும் பழைய உடுப்புகளை அதில் தான் வைத்திருப்பர். தீபாவளிக்கு மட்டுமே புதிய ஆடைகள் கிடைக்கும். ஆனால் அதை நினைத்தெல்லாம் அக்குழந்தைகள் வருந்துவதில்லை.

அன்றாடம் தவறாமல் கிடைக்கும் உணவும், உடலை மறைக்க போதுமான உடையும், தங்குவதற்கு நல்ல இடமும் கிடைத்திருப்பதே பெரும் பாக்கியம் என எண்ணிக்கொள்வர்.

சபரிவாசன் அவர்களை அப்படி தான் வளர்த்திருக்கிறார். அக்குழந்தைகளிடம் நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே இருக்கும் படி சிறப்பாக வளர்த்த பெருமை அவரையே சேரும்.

ஆசிரமத்தில் இருந்தாலும் அனைவரும் மகிழ்வுடன் தான் இருந்தனர். தாங்கள் அனாதைகள் என்னும் நினைப்பே அவர்களிடம் இருக்காது. ஒருவருக்கொருவர் உறவாய் நினைத்து ஒற்றுமையையாய் இருப்பர்.              

அன்னை இல்லத்தின் முதல் குழந்தையும் இக்குடும்பத்தின் மூத்த பெண்ணுமான மதுராவுக்கும் இன்று தான் பிறந்தநாள். இந்த இல்லத்தில் யார், யார் எப்பொழுது வந்து சேர்கிறார்களோ அது தான் அவர்களது பிறந்த தினமாய் கொண்டாடப்படும்.

அன்றைய தினம் பிறந்தநாள் காணும் பிள்ளையின் நலனுக்காக மற்ற அனைவரும் சேர்ந்து இறைவனிடம் பிரார்தித்து வாழ்த்துச் சொல்லி பரிசாய் முத்தங்கள் வழங்கி கொண்டாட்டத்தை முடித்துக் கொள்வர். இங்கு 20 வயது மதுராவில் ஆரம்பித்து மூன்று நாட்களுக்கு முன் பிறந்த துளசி வரை ஐம்பத்தைந்து பிள்ளைகள் இருக்கின்றனர்.

பிள்ளைகள் அற்ற சபரிவாசனுக்கும், கோமதிக்கும் மூத்த பிள்ளையாய் வந்தவள் தான் மதுரா. இளங்கலை வணிகவியலை முடித்துவிட்டு பெரிய பாத்திரக்கடை ஒன்றில் கணக்கராய் பணியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் முழுவதுமாய் முடிந்துவிட்டது. தனது சம்பளத்தையும் ஆசிரம நலனுக்கு கொடுத்துவிட்டு அவளும் அங்கேயே தங்கியிருக்கிறாள்.

வேலை கிடைத்ததும் விலகிச் செல்ல நினைப்பவர்கள் தாராளமாய் இங்கிருந்து போகலாம் எனச் சொன்னாலும் பெண்பிள்ளையான, மூத்த மகளைப் போல் வளர்த்த மதுராவை போகச் சொல்ல சபரிவாசனுக்கு மனமில்லை.

மதுராவுக்கும் இங்கிருந்து கிளம்ப விருப்பமில்லை என்பதால் இன்னும் அவளது ஜாகை அன்னை இல்லத்திலேயே தொடர்கிறது.

பிள்ளைகள் எல்லாம் பள்ளிக்கும், கல்லூரிக்கும் கிளம்பிக் கொண்டிருக்க மதுராவோ வேலைக்குச் செல்ல தயாராகி தனது வளர்ப்பு பெற்றோர்களிடம் ஆசி வாங்க அலுவல் அறைக்கு வந்தாள்.

“மதும்மா, வாடா…. வா, வா! பிறந்தநாள் வாழ்த்துக்கள்…” என கோமதி அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டார்.

“அம்மா…. அப்பா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க…” என இருவரின் காலிலும் பணிந்து வணங்கியவளின் தோள் பற்றி எழுப்பி,

“நீண்ட ஆயுளோடையும், மனம் நிறைந்த சந்தோஷத்தோடையும் வாழணும்” என தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் சபரி.

“அப்பா, என்னோட பரிசு!” என்று தன் வண்டு விழிகளை உருட்டும் மகளின் நெற்றியில் வாஞ்சையுடன் முத்தமிட்டு,

“பிறந்தநாள் வாழ்த்துகள் மதும்மா…!” அன்பொழுகச் சொன்னவர்,

“மதும்மா… இன்னைக்கு இரவு சாப்பாடு தயார் பண்ண வேண்டாம். நம்ம ஸ்பான்சர் மனுபரதன் கொண்டு வருவதாய் சொல்லியிருக்கார். நம்ம கூடவே உணவருந்தப் போறதாவும் சொன்னார். இதை எல்லோர்கிட்டையும் சொல்லிடும்மா. குறிப்பா நம்ம சமையல்கார முத்தம்மாகிட்ட சொல்லிடு” என விஷயம் பகிர,

“சரிங்கப்பா. ஆனா இன்னைக்கு என்ன ஸ்பெஷல் பா…? அவரும் நாலஞ்சு வருஷமா நமக்கு ஸ்பான்சர் பண்றார். இதுவரை இப்படியெல்லாம் நம்மோட சேர்ந்து சாப்பிட்டதில்லையே… சொல்லப் போனா நாமெல்லாம் அவரை பார்த்ததேயில்லையே?” என இருபது வயது பெண்ணிற்கே உரிய துறுதுறுப்பும், ஆர்வமுமாய் கேட்டாள்.

“தெரியலைடா… பிஸினஸ்ல ஏதும் லாபம் வந்திருக்கலாம்… இல்ல அவருக்கோ, அவரை சார்ந்தவங்களுக்கோ பிறந்தநாள், திருமண நாளா கூட இருக்கலாம்.” என்ற தந்தைக்கு,

“இருக்கலாம்… ஸ்பான்சர் டீடெயில்ஸ் செக் பண்ணிடுவோம். பிறந்தநாளா இருந்தா விஷ் பண்ணனும் தானேப்பா?” என ஸ்பான்சர்களின் விவரம் அடங்கிய கையேட்டை எடுத்து பார்க்க இன்று அவனது பிறந்ததினம் என்பது தெரிய வந்தது.

“அப்பா, அவரோட பிறந்தநாள் தான். வழக்கம் போல சாப்பிடுறதுக்கு முன்ன அவருக்காக பிரார்த்தனை பண்ணிட்டு வாழ்த்து சொல்லிடுவோம், சரி தானேப்பா?”

“சரிதான்டா… என்ன பரிசு கொடுக்கிறது?” என கோமதி விழிக்க,

“அவர்கிட்ட இல்லாததையா நாம கொடுக்கப் போறோம்? வாழ்த்து மட்டும் போதும்மா!” என்றார் சபரி.

“ஒரு பூங்கொத்தாவது…” என கோமதி இழுக்க,

“நூற்றி ஐம்பது ரூபாய்க்கு குறைஞ்சு பொக்கே கிடையாது. அந்த காசில் நம்ம துளசிக்கு பால் வாங்கலாம். அவர் நல்லா இருக்கணும்னு மனசார பிரார்த்தனை பண்ணிப்போம்மா. அது தான் நம்மால முடிஞ்ச சிறப்பான செயலா இருக்கும்.” என மதுரா பரிசுப்பொருள் பிரச்சனைக்கு சுலபமாய் முற்றுப்புள்ளி வைத்துச் சென்றாள்.

நண்டு சிண்டில் இருந்து கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் வரை வரிசையாய் தட்டின் முன் அமர்ந்திருக்க,

“பிள்ளைகளா… இன்னைக்கு நம்ம மதுவோட பிறந்த நாள்! அதனால வழக்கமான நன்றி நவிழலோடு மதுவுக்கான பிரார்த்தனையும் சேர்த்துப்போம்” என சபரிவாசனும், கோமதியும் கண்மூடி கரம் கூப்ப, தினப்படி கூட்டு பிரார்த்தனையுடன் அனைவரும் மதுராவின் நலனுக்காகவும் கூடுதலாய் வேண்டிக் கொண்டனர்.

உணவு உண்டு முடிந்ததும் அனைவரும் சேர்ந்து நின்று பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு சென்றனர். ஒரே கூரையின் கீழ் வாழும் அவளது உடன்பிறவா சகோதர, சகோதரிகளின் அன்பு அவளை தனக்கான குடும்பம் பற்றி யோசிக்க வைத்தது.

மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன், கூட்டாளி என பல உறவுகள் கொண்ட குடும்பத்தில் தான் வாழ வேண்டும். அப்படி ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை தனக்கு அமைய வேண்டும் எனும் ஆசை துளிர்த்தது.

நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ அதை நன்றியோடு ஏற்க வேண்டுமே தவிர இல்லாததை பற்றி ஏங்கக் கூடாது! என்ற தந்தையின் வார்த்தை நினைவில் வந்து அவளது கனவை கலைத்துச் சென்றது.

இரவும் வந்தது… உணவும் வந்தது கூடவே மனுபரதனும் வந்தான். சபரிவாசனைத் தவிர ஆசிரமத்தில் இருக்கும் யாருமே மனுபரதனை பார்த்ததில்லை என்பதால் முதன் முதலாக காணும் ஆவலுடனும், இவ்வளவு சிறுவயதினனா என்னும் ஆச்சர்யத்துடனும் தான் பார்த்தனர்.

சிறுவர்கள் முதல் கோமதி வரை அனைவரின் கண்களும் இளம்வயதிலேயே பலரின் பசி போக்கும் எண்ணம் கொண்டு செயலாற்றுபவனை நன்றி பெருக்குடன் வருடிக் கொண்டிருந்தன.   

காலையில் மகனுக்காக வேணி செய்திருந்த அத்தனை பதார்த்தங்களும் விருந்தில் இடம் பெற்றிருக்க சாப்பாட்டு கூடத்தில் வரிசையாய் அமர்ந்திருந்த பிள்ளைகளுடன் அமைதி தவழும் முகத்துடனும், இதழோரம் சிறு முறுவலுடனும், தானும் அமர்ந்தபடி,

“சாப்பிடுவோமா?” மனுபரதன் வாஞ்சை வழிய கேட்க, சிறு தலையசைப்புடன் அனைவரும் கைகூப்பி,

“உயிரும், உறவும் கொடுத்த இறைவனுக்கு நன்றி!

உணவும், உடையும் கொடுத்த உள்ளங்களுக்கு நன்றி!

தாய் போல் எங்களை காக்கும் உங்கள் எல்லோருக்கும் நன்றி!

உதவி செய்யும் கரங்களுக்கு நன்றி!

வாழ்க… வாழ்க… வாழ்க!

வாழ்க மகிழ்வுடன்!

வாழ்க வலிவுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க நலமுடன்!

வாழ்க… வாழ்க… வாழ்க… வாழ்க!”

என மதுராவுடன் சேர்ந்து அனைவரும் நன்றி சொல்லி வாழ்த்த, மனுபரதனின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.

இதுவரை இது போல் நிகழ்ந்ததில்லை என்பதால் மனதில் மட்டுமல்ல அவன் கண்களிலும் ஈரம் கசிந்தது.

இவர்களுக்கு ஸ்பான்சர் செய்வது வரி தளர்விற்காகவும், நாமும் நல்லது செய்கிறோம் எனும் ஆத்ம திருப்திக்காகவும் என இருந்தவனுக்கு பிள்ளைகளின் நன்றி உணர்ச்சியில் நெக்குருகிப் போனது.

அதன் விளைவாய் பல வருடங்களுக்குப் பிறகு அவனது மனம் லேசாகி சிறகில்லாமல் பறந்தது. அந்த மகிழ்வில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிய பிள்ளைகளிடம், வேணிம்மாவிடம் கேட்கும் நினைப்பில்,

“என்ன பரிசு தரப் போறீங்க?” என கேட்டுவிட்டு,

‘இவர்கள் என்ன தர முடியும்? யோசிக்காமல் சங்கடப்படுத்தி விட்டேனே…’ என மருக, பிள்ளைகளோ…

‘இவருக்கு நாம் என்ன கொடுப்பது?’ என திகைத்து நிற்க,

“ஹேய் டாலிஸ்! ஏன் இப்படி விழிக்கிறீங்க? நம்ம பரிசை கொடுத்திட வேண்டியது தானே?” என மதுரா கண் சிமிட்டி சிரிக்க,

“என்ன பரிசுக்கா?” கோரஸாய் கேட்டார்.

“நம்ம பரிசு தான்…” என்றவள்,

“மனு சார்… நீங்க தான் கேட்டீங்க, அதனால தான் கொடுக்கிறோம். நாங்க என்ன கொடுத்தாலும் சங்கடப்படாம வாங்கிக்கனும்” என இறைஞ்சலாய் சொல்ல, மனு என்ற அழைப்பில் ஸ்தம்பித்து போனவனின் தலை தானாகவே சம்மதமாய் அசைந்தது.

மனு என்னும் அழைப்பு அவனது வேணிமாவின் பிரத்தியேக அழைப்பு! என்று அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டானோ அன்றே அந்த அழைப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.

உறவுமுறை, தொழில் முறை என எந்த தொடர்பில் இருப்பவராயினும் தன்னை பரத் என்றே அழைக்க வேண்டும் என்னும் எழுதப்படாத சாசனம் இயற்றி வைத்திருந்தவன் மதுவின் ‘மனு சார்’ என்னும் அழைப்புக்கு பூம் பூம் மாடாய் தலையாட்டியது உலக மகா அதிசயம் தான்.  

“யார் ஃபர்ஸ்ட்?” பிள்ளைகளைப் பார்த்து மது கேட்க,

‘அப்படி என்ன தான் பரிசு கொடுக்கப் போகிறார்கள்?’ என தெரிந்து கொள்ளும் ஆர்வம் கண்களில் மின்ன மனு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.  

“அக்கா, நான்…!” மூன்று வயது பாலா தளிர் நடையிட்டு வந்தான். அவனை தன் கைகளில் ஏந்திக் கொண்டவள், மனுபரதனின் அருகே சென்று,

“மனு சார், கொஞ்சம் குனிங்களேன்…” என கிசுகிசுக்க, இவர்கள் என்ன தரப் போகிறார்கள் என்று தெரியாததால் புரியாமல் பார்த்தாலும் லேசாய் குனிந்தான். மதுரா பாலாவை வாகாய் தூக்க, தன் பிஞ்சு கரங்கள் கொண்டு அவன் கழுத்தை வளைத்து பிடித்து தன் ஈர இதழ்களை மனுவின் கன்னத்தில் பதித்து,

“ஆப்பி பெர்த் டே…” என மழலையாய் கொஞ்ச இதை சற்றும் எதிர்பாராதவனின் கண்களில் மின்னல் வெட்ட, ஆச்சர்யத்தில் விழி விரித்து,

“நன்றி” மதுராவுக்கும் சேர்த்து சொன்னான்.

இப்படியே பிள்ளைகள் அனைவரும் முத்தமிட, வேணிம்மாவிடம் பரிசாய் பல முத்தங்கள் வாங்கிய நினைவு வம்படியாய் வந்து சுகமாய் இம்சிக்க,

‘யார் இவள்? இந்த நாளை இனிய நாளாக்கி ஏன் என்னை இப்படி சுகமாய் இம்சிக்கிறாள்?’ என முதல் முறையாக மதுராவின் புறம் தன் பார்வையை திருப்ப,

ஐந்து அடி உயரத்தில், மாநிறத்தில், சுமாரான அழகில் இருப்பவளின் கண்களில் சிறப்பாய் ஏதோ ஒன்று இருப்பது போல் தோன்ற, அதை எங்கேயோ பலமுறை பார்த்த உணர்வும் உண்டாக மனுபரதனிடம் சிறு திகைப்பு ஏற்பட்டாலும்,

வேணிம்மாவின் கண்களில் தவழும் அன்பும், கருணையும் தான் இவள் கண்களிலும் பொங்கி வழிகிறது என்பதை கடைசி வரை அவனால் கண்டு கொள்ளவே முடியவில்லை.

வழக்கம் போல் இரவு உணவுக்கு பின் படிக்க விரும்பும் பிள்ளைகள் படிக்கச் சென்றுவிட, தூங்க எண்ணும் பிள்ளைகளுக்கெல்லாம் கதை சொல்லத் தொடங்கிவிட்டார் கோமதியம்மாள். மதுரா துளசியை மடியில் கிடத்தி அதற்கு பால் புகட்டிக் கொண்டிருக்க, அலுவல் அறையில்,

“சபரி சார், என் பிறந்த நாளில் நான் கொடுக்கும் கூடுதல் நன்கொடையா இதை ஏத்துக்கோங்க. வேறேதும் உதவி தேவைப்பட்டாலும் கேளுங்க, என்னால முடிஞ்ச வரை செய்றேன்” என செக்கை கொடுக்க,

“ரொம்ப நன்றி, மனுபரதன். இப்பவே நீங்க கூடுதலா தான் உதவி பண்றீங்க. பசங்களோட படிப்பு செலவுக்கு யாரும் ஸ்பான்சர் பண்ணினா நல்லாயிருக்கும். உங்களை போல நல்ல உள்ளங்கள் இருந்தா அறிமுகப்படுத்தி விடுங்க… அது போதும். என் பிள்ளைகளுக்காக நான் அவங்ககிட்ட கையேந்திக்கிறேன்” என்ற சபரி வாசனை பெருமையுடன் பார்த்தவன்,

“கண்டிப்பா சார். என் தொழில் நண்பர்கள் சிலரிடம் அறிமுகப்படுத்தி விடுறேன். லேட்டாயிடுச்சு, நான் கிளம்புறேன்” என விடைபெற,

“மனுபரதன்… இன்னுமொரு சின்ன வேண்டுதல்…” என இழுக்க

“சொல்லுங்க சார். முடிஞ்ச வரை செய்றேன்” வம்படியாக வாழ்க்கைச் சுழலில் சிக்கப் போகிறோம் என்பது தெரியாமல் வாக்குறுதி கொடுத்தான்.

“என் பொண்ணு மதுரா நம்ம கவர்மெண்ட் காலேஜ்ல பிபிஏ படிச்சிருக்கா. இப்போ சரியான வேலை கிடைக்காம நம்ம ஊர்ல இருக்கிற பெரிய பாத்திரக்கடையில கணக்கு எழுதுறா. அவளுக்கேத்த மாதிரி வேலையிருந்தா சொல்லுங்க…”

“மதுரா, உங்க பொண்ணா?” என்றவனிடம் சிறு ஆச்சர்யம் எட்டிப் பார்த்தது.

“இங்க இருக்கிற எல்லா பிள்ளைகளும் என் பிள்ளைகள் தான். கல்யாணம் ஆகி பத்து வருஷமா குழந்தையில்லாம இருந்தோம். சொந்தபந்தங்கள் மதிக்கலை. அக்கம்பக்கம் கூட புறக்கணிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ தான் என் மனைவி இந்த தொட்டில் திட்டத்தை பத்தி சொன்னாங்க.

என்கிட்ட சொத்து பத்தோ, நிலபுலனோ கிடையாது. சாதாரண கிளார்க்கா தான் வேலை பார்த்தேன். குழந்தைகளை பராமரிக்க என்ன செய்யுறதுன்னு பயமா இருந்துச்சு. என் மனைவி தான் அவளோட இருபத்தியஞ்சு பவுன் நகைகளை கழட்டிக்கொடுத்து ‘அன்னை இல்லத்தை’ ஆரம்பிச்சே ஆகணும்னு ரொம்ப பிடிவாதமா இருந்தா.

இந்த இடத்தை லீசுக்கு எடுத்து காப்பகத்தை ஆரம்பிச்சு வாசல்ல தொட்டிலையும் வச்சோம். ஒரு மாசம் எந்த பிள்ளையும் வரலை. இதுக்கு கூட நமக்கு கொடுப்பினை இல்லையோன்னு ரெண்டு பேரும் ரொம்பவே நொந்து போயிட்டோம்.

ஒரு நாள் இரவு தொடங்கும் நேரம் ஒரு குழந்தையோட அழுகுரல்… விளக்கேற்றி பூஜை பண்ணிட்டு இருந்த என் மனைவி ஓடிப் போய் பார்க்க தொப்புள்கொடி ஈரம் கூட காயாத, பிறந்த சில மணி நேரமேயான குழந்தை வீறிட்டு அழுதிட்டு இருக்க, சந்தோஷமா தூக்கிட்டு வந்துட்டா. அப்போ ஏது போன்?

வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரேன்… குழந்தையும் கையுமா வாசல்லயே நிக்கிறா. அப்போ நாங்க அனுபவிச்ச சந்தோஷத்தை வார்த்தையால வர்ணிக்கவே முடியாது. அந்த குழந்தை தான் மதுரா. இருபது வருஷம் ஓடிப் போச்சு. இன்றைக்கும் இங்க வர்ற குழந்தைகளை அதே ஆனந்தத்தோடு தான் வரவேற்கிறோம்…” கண்கள் பனிக்கச் சொன்னார்.

அதிகப்படி வசதிகள் இல்லாத போதும் இத்தனை குழந்தைகளுக்கு வாழ்க்கை கொடுக்கும் சபரிவாசன் மனுபரதனின் கண்களுக்கு மிகவும் உயர்ந்த மனிதராய் தெரிந்தார். அவருக்கு முன் தான் செய்வது ஒன்றுமேயில்லை என்று தோன்ற சேவை செய்ய தேவை பணம் இல்லை, மனம் தான் தேவை என்பது புரிந்தது. இவருக்காகவே மதுராவுக்கு வேலை போட்டுக் கொடுக்கலாம் என எண்ணியவன்,

“என் செகரட்டரி இன்னும் மூணு மாசத்தில் ரிலீவ் ஆகுறாங்க. அந்த பிளேஸ்மென்ட்டுக்கு மதுராவை யூஸ் பண்ணிக்கலாம். பட் இப்போ தான் காலேஜ் முடிச்சிருக்காங்கன்னு சொல்றீங்க. ஃப்ரஷர்ரா இருக்கிறதால ட்ரெயினிங் அவசியம்.

நாளையில் இருந்து வரச் சொல்லுங்க. இந்த மூணு மாசமும் ட்ரெயினியா வொர்க் பண்ணட்டும். சோ, சம்பளம் குறைவாக இருக்கும். பட் இப்போ அவங்க வாங்கும் சம்பளத்தை விட அதிகமாத் தான் கொடுப்பேன். கவலைப்படாதீங்க… ட்ரெயினிங் பீரியட் முடிஞ்சதும் நல்ல ஸ்கேல் கிடைக்கும்.”

இவள் தான் தன் வாழ்வை தடம் புரள செய்யப் போகிறவள் என தெரிந்திருந்தால் ஒருவேளை தன்னிடம் வேலைக்கு சேர்த்திருக்க மாட்டானோ என்னவோ…? அந்தோ பாவம்! விதி வலியது.

“ரொம்ப நன்றி. கண்டிப்பா காலையில அனுப்பி வைக்கிறேன்” என கரம் கூப்பி விடை கொடுத்தார்.

மனு கிளம்புவதை கண்டதும் துளசியை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவன் பின்னோடு ஓடிய மதுரா,

“மனு சார்…” வேக மூச்சுகளை விட்டபடி அழைக்க, சட்டென திரும்பியவன் என்னவென்பது போல் புருவங்களை ஏற்றி இறக்கினான்.

“நான் மதுரா. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் இல்ல… இல்ல ஆப்ளிகேஷன்…” என தயங்கி நிறுத்த,

“நீயுமா?” என விழி விரித்தவன் தொடரு என்பது போல் கரத்தை அசைத்தான்.

‘நீயுமான்னா என்ன அர்த்தம்? அப்போ எனக்கு முன்னாடி யார் இவர்கிட்ட உதவி கேட்டது?’ என கபாலத்தில் உதித்த கேள்வியை கடாசிவிட்டு,  

“சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு.  ஆனா… நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… இதுக்கு ரொம்ப செலவாகியிருக்குமே…” தான் கூடுதலாய் பேசுகிறோம் என்பதை உணர்ந்தவளாய் மென்று விழுங்க, அவனும் அப்படியே உணர,  

“அதைப் பத்தி உனக்கென்ன அக்கறை?” அதிகமாய் உரிமையெடுத்துக் கொள்வது போல் தோன்ற வெடுக்கென கேட்டான்.

கொக்குக்கு மீன் ஒன்றே மதியென்பது போல் அவன் கேட்பதை பொருட்படுத்தாது,

“இல்ல… எங்க முத்தம்மாக்காவும் நல்லா சமைப்பாங்க. இனி இதுபோல எதுவும் பண்றதாயிருந்தா பணமா கொடுத்தீங்கன்னா கம்மியான செலவில் சிறப்பா சமைச்சுட்டு மிச்சத்தை மத்த செலவுக்கு யூஸ் பண்ணிப்போம்…” தனது கூற்றை இவன் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமே என்னும் தவிப்புடன் முகம் பார்க்க,

“ஷட் அப்! இது தான் தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடிச்சுப் பார்க்கிறதுன்னு சொல்றது. நான் என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு நீ எனக்கு பாடம் எடுக்காதே. ப்ளடி…” என்ன சொல்ல வந்தானோ அதை அப்படியே விழுங்கி கோபம் கொப்பளிக்க உறும,

‘அடக் கடவுளே! இவ்வளவு நேரமும் சாதுப் பூனை போல் இருந்தவர் இப்படி சிம்மமாய் கர்ஜிக்கிறாரே…  அமைதியானவர், நம் நிலை புரிந்து உதவுபவர் இதையும் புரிந்துகொள்வார் என தப்பு கணக்கு போட்டுவிட்டேனே…

கோபத்தில் வழக்கமாய் உணவுக்கு கொடுக்கும் ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்தி விடுவாரோ? தன்னால் அனைவரும் பட்டினி கிடக்க நேரிடுமே…’ கைப்பொருள் களவு போன கதையாய் மிரண்டவளின் கண்களில் குளம் கட்டிவிட்டது.

மனு என்ன செய்வான்னு சொல்லுங்க மக்களே…

உயிராகலாம்…

4 Comments

 1. Thaji says:

  ஆமாம் தான் னு சொல்லவான் ,மதுசொன்ன யோசினை சூப்பர் ஐடியா தானே😀

  மது கொடுக்க சொன்ன கிப்ட் சூப்பர் …அதை தொடர்ந்து எல்லா குழந்தைகளும் கொடுத்த கிப்ட்ட …மனு மறக்கமாட்டான்😀
  பூங்கொத்துக்கு கொடுக்கும் காசுக்கு துளசிக்கு பால்வாங்கலாம் இந்த ஐடியா கூட..சூப்பர் 😀

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   நன்றி பா. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. மனு யாருக்காகவும் எதுக்காகவும் தன் நினைப்பை மாத்திக்கவே மாட்டான்.

   Like

 2. Suganguna says:

  Nice epi sis

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   நன்றி பா.

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s