உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் # 28

ஆதி துபாய் செல்லும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கவே நந்துவையும், பிரபாவையும் சிறு விருந்துக்கு அழைத்திருந்தான்.

“சிட்டு, நானும் வரேண்டி… உன்னை விட்டு ரெண்டு மூணு மணி நேரமெல்லாம் இருக்க முடியாது.”

“இதெல்லாம் டூ… டூ மச் விஜய். நாள் பூரா என்னை விட்டு தானே ஆபிஸில் இருக்கீங்க? இப்போ என்ன அதிசயமா படுத்துறீங்க?” இடையை கட்டிக் கொண்டு விட மறுக்கும் சிறு குழந்தையாய் அவள் மடியில் படுத்துக் கொண்டு அலுச்சாட்டியம் செய்வது விஜயேந்திரபூபதியே தான்.

“நான் போகலாம்… நீ தான் என்னை தனியா விட்டு போகக் கூடாது.”

“ஏன் விஜய் இப்படி இம்சிக்கிறீங்க? பாவம் ஆதி ஊருக்கு போகப் போறான். சீக்கிரம் வந்துடறேன். சமத்து தானே நீங்க? சொன்னா கேக்கணும்.”

“உன்னை போக வேண்டான்னா சொல்றேன்… நானும் வரேன்னு தானே  சொல்றேன். இதெல்லாம் அநியாயம் சிட்டு… ராஜா விஜயேந்திர பூபதியை கெஞ்சவிடுற…”

“நீங்க எவ்வளவு கெஞ்சினாலும் நோ தான். எங்க செட்டுல வேறு யாருக்கும் இடமில்லை.” (என்னா பெரிய செட்டு… நாங்க பாக்காத டபரா செட்டு!)

“போடி போங்கு! ஆதி நிவியை கூட்டி வருவான் பாரு.”

“அதெல்லாம் வரமாட்டான். இது எங்களுக்குள் பெர்சனல் அக்ரிமெண்ட் தெரியுமா?”

“சரி நானே உன்னை கூட்டி போறேன். உங்க கூட சேராமல் வேறு டேபிளில் உட்கார்ந்திருக்கேன். முடிந்ததும் சேர்ந்து வந்துடுவோம்.”

“விஜய், உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்க குடும்ப கௌரவம் பாதிக்கிற மாதிரி நடந்துக்க மாட்டேன். நம்பலாம்”

“போடி லூசு. உன்னோடயெல்லாம் பேச முடியாது, கிளம்பு” அவளுக்கு முன் அவன் வெளியே கிளம்பிவிட்டான்.

‘ரொம்ப தான்… போ. எனக்கும் பெர்சனல் ஸ்பேஸ் வேணும்’ அவளும் சென்றுவிட்டாள்.

யாருகிட்ட? நந்தினியை கட்டாதன்னு எத்தனை பேர் புத்தி சொன்னாங்க கேக்கலையே…

விஜயின் மாற்றத்தால் தோழியின் முகம் தெளிந்திருப்பது கண்டு நண்பர்கள் இருவருமே சந்தோஷப்பட்டனர்.

பிரபா, பவானியின் காதல் பற்றியும் அவளது அறியாமை பற்றியும் சொல்லி வருத்தப்பட, நந்து பவானிக்கு ஆதரவாக,

“காதல் கொண்ட மனது சந்தேகப்படாது பிரபா… விஜயின் நடவடிக்கைகள் நேரடியாக என்னை காயப்படுத்தும்போது கூட தவறா நினைக்க மனம் வராது”

“அனுபவம் பேசுது… கேட்டுக்க பிரபா…”

“ஆதி… காதல் விஷயத்தில் நீ சொன்னது தான் சரி… எதார்த்தமும் கூட, காதலாகி கசிந்து உருகுவதெல்லாம் இப்போ முட்டாள் தனமாக தெரியுது. வயசு கோளாறில் ஏதோ உளறிவிட்டேன் நந்தினி.

அந்த அர்ஜுனை பார்க்கும் போது நான் நினைத்தது போல் தான் நடந்து கொள்வதாக தெரியுது. பேபி பேபின்னு தரையில் விடாமல் தாங்குறான். அதுலயே ஜில்லாயிடுது இந்த லூசு. கொஞ்ச நேரத்தில் அவன் புத்தியை காட்டும் போது இவளுக்கு பிரித்தறிய தெரியல…

பாவம் ஆதி, அம்மா இல்லாததால் அன்புக்கு ஏங்குவான்னு நினைக்கிறேன். பட் அதை காட்டிக்க மாட்டேங்கிறா. இவன் கொஞ்சம் கொஞ்சியதும், வேறெதையும் யோசிக்கமாட்டேன்கிறா.

எல்லாத்துக்குமே இவ தான் பே(pay) பண்றா… தான் ஏமாத்தப்படுறோம்னு தெரியாமலேயே ஏமாந்துகிட்டு இருக்கா. பண விஷயம் மட்டுமில்ல கம்பெனி விஷயத்திலும் கோட்டைவிடுறா அதான் முதலாளிகிட்ட சொல்லிடலாமான்னு பார்க்கிறேன்.”

“என்னடா… ரெமோ இப்படி மாறிட்டான்?” ஆச்சரியப்பட்டாலும்,

“உனக்கு பவானி மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு தானே பிரபா?” என நந்து கேட்கவும் மறக்கவில்லை.

“இருக்கலாம்…” உண்மையை ஒத்துக் கொண்டான் பிரபா.

அதன் பின் கூத்தும், கும்மாளமுமாய் உணவை முடித்துக் கொண்டு நண்பனுக்கு வாழ்த்துச் சொல்லி பிரியா விடை கொடுத்து வெளியே வர அன்று போல் இன்றும் விஜய் அவளுக்காக காத்திருந்தான்.

ஆதியின் கரம் குலுக்கி வாழ்த்துச் சொன்னவன் தன் பாட்னரின் கார்டை கொடுத்து துபாயில் எந்த உதவி தேவையென்றாலும் தொடர்பு கொள்ளும்படி கூறி விடைபெற்றான்.

கணவனை பெருமை பொங்க பார்த்தவள், சட்டென நண்பனின் புறம் திரும்பி கையசைத்து விடைபெற்று காரில் ஏறிக் கொண்டாள்.

“என்னடி… நமக்காக காத்திருந்து கூட்டிட்டு வரானே, அவனுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லுவோம்… இல்ல சண்டை போட்டு சிலுத்துகிட்டு வந்தோமே… அதுக்கு ஒரு சாரி சொல்லுவோம்… எதுவுமில்லாம வேடிக்கை பார்த்துட்டு வர்ற?”

“நான் உங்களை காத்திருக்கச் சொன்னேனா? நான் எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்? வம்பிழுத்தது நீங்க, சோ சாரியும் நீங்க தான் சொல்லணும்”

“சும்மா இருந்த புள்ளைக்கு ராஜவம்சத்து பழக்கத்தை கத்துக் கொடுத்து இப்போ கண்ணுக்குள்ள விரலைவிட்டு ஆட்ட வச்சுட்டாங்களே ராணியம்மா…” வாய்விட்டு புலம்ப,

“விஜய்! அத்தை என்கிட்ட பேசினது உங்களுக்கு எப்படி தெரியும்?” ஆச்சரியமாய் விழி விரிக்க,

“மருமக பண்ற அட்டகாசத்துக்கெல்லாம் குற்றப் பத்திரிக்கை வாசிக்காமல் இருக்கும் போதே தெரியும்… நீ என்னை படுத்தி எடுக்கும் போதும் கண்டுக்காம இருந்தாங்களே, அநியாயம்டி சிட்டு.” போலியாக வருந்தியவன்…

“ஏய்! சாரி சொல்லுடி” மீண்டும் விட்ட இடத்திற்கே வந்தான்.

“நீங்க தான் காரணம். சோ நீங்க தான் சொல்லணும்…”

“நோ, நோ… நீ தான்… சின்னப்புள்ளத்தனமா சண்டை போடுறோம்ல? எப்படி இருந்த ராஜா விஜயேந்திர பூபதியை இப்படி ஆக்கிட்டியே… ஒண்ணு செய்யலாம், வீட்டில் போய் முத்த சண்டை போடலாம்… யார் தோற்று போறோமோ அவங்க சாரி சொல்லணும் சரியா?”

“எல்லாத்தையும் உங்களுக்கு சாதகமாவே யோசிப்பீங்களா விஜய்? குத்து சண்டை போடலாம்!” அட்டகாசமாக சிரித்தவன்,

“என்னோட இறுகிய அணைப்பையே தாங்கமாட்ட இதுல குத்து சண்டை? ஒரு குத்துக்கு தாங்குவியா?”

“பேச்சை குறைங்க விஜய்! பெர்ஃபாமென்ஸை பார்த்துட்டு சொல்லுங்க”

ஆகட்டும் மகாராணி…” அமைதி காத்தான் விஜயேந்திரன். வீட்டிற்கு வந்ததும் வராததுமாக தன் சட்டையை கழட்டியவன் சண்டைக்குத் தயாராகி,

“வாடி!” தன் முஷ்டி மடக்கி குத்துவதற்கு தயாராக வைத்துக் கொண்டிருக்க,

“இப்போ எதுக்கு விஜய் சட்டை போடாமல் நிக்கறீங்க? இந்த ஜிம்பாடியைப் பார்த்து பயந்துடுவேன்னு தானே? அதெல்லாம் நடக்காது.” (அட லூசே உன்னை மயக்க திட்டம் போடுறான்…)

“பயப்படுறவளா நீ? ராஜா விஜயேந்திர பூபதியையே தண்டனிடச் செய்தவள்” சிறு சிரிப்புடன்,

“பேச்சை மாத்தாம வாடி…” சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவனை குத்த தொடங்கிவிட்டாள்,

“இதெல்லாம் போங்கு! ஸ்டார்ட் சொல்லாமல் குத்த ஆரம்பிச்சுட்ட…” தடுப்பதை மட்டுமே வேலையாக செய்து கொண்டிருந்தவன் முகம் பார்த்தவள்…

“இங்கு இப்படி தான். நோ ரூல்ஸ்… எல்லாம் என் இஷ்டம் தான்!” பேசிக்கொண்டே சரமாரியாக அவன் கைகளில் குத்த,

“ஏய் வலிக்குதுடி! நான் குத்தினால் நீ தாங்க மாட்ட ஒழுங்கா இரு சொல்லிட்டேன்…”

“போட்டின்னு வந்துட்டா நான் பின்வாங்க மாட்டேன் தோற்றுட்டீங்கன்னு ஒத்துக்கோங்க விட்டுடறேன்…” அவனது கரம் தன்னை நோக்கி வரவும் பின்னுக்கு நகர்ந்தவளை லாவகமாக இழுத்து இறுக அணைக்க…

“அம்மா! விடுடா காட்டுவாசி…” கத்தியவளால் அசையவே முடியவில்லை.

“நீ தானே சொன்ன நோ ரூல்ஸன்னு… சாரி சொல்லுடி…” வேறுவழியின்றி,

“சாரி! விடுங்க…” முகம் திருப்பிக் கொண்டாள் நந்தினி.

“அது! என்ன குத்து குத்துற…? ராட்சஷி…” பேசிக் கொண்டிருக்க அவன் வயிற்றில் குத்திவிட்டாள். எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போனவன் பொத்தென கட்டிலில் விழுந்துவிட்டான். அவ்வளவு தான் பதறியவள்,

“விஜய்… விஜய்… கண்ணை திறங்க!” வெடித்து அழ

“சிட்டு… இவ்வளவு தான் உன் தைரியமா? சும்மா…” என கண் சிமிட்ட

“போப்பா, நான் பயந்துட்டேன் தெரியுமா?”

“இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லையாடி? இந்த தேன்சிட்டு ராஜாளியை என்ன செஞ்சுட முடியும்?” புருவம் உயர்த்தி வினவ…

“முடியும்! சிட்டு, சிட்டு… ப்ளீஸ் கெஞ்சவிடாதடின்னு உங்களை சுத்தவிட முடியும். பாக்கறீங்களா?”

“அம்மா வலிக்குதே… சிட்டு பயங்கரமா குத்திட்டடி ரொம்ப வலிக்குது…” என வயிற்றை பிடித்துக் கொள்ள

“விஜய்!’ என பதட்டத்துடன் அருகே வந்தவளை தன் பிடிக்குள் கொண்டுவந்தவன்…

“என்னை கெஞ்சவிடுவியா? பாக்கலாம் இன்று யார் கெஞ்சுறாங்கன்னு…” அவளை பேசவிடாமல் மலைப்பாம்பு தன் இரையை முறுக்கி துவம்சம் செய்வது போல் மூச்சு திணற வைத்தான். கெஞ்சுவதற்கு கூட இயலா நிலையில் அவனிடம் சரணாகதி அடைந்திருந்தாள் நந்தினி.

நாளை காலை ஆதி துபாய் கிளம்ப வேண்டும். அச்சமயம் ஆளுயர குரங்கு பொம்மையுடன் வீட்டிற்குள் நுழைந்தவனைப் பார்த்து,

“இது எதுக்கு ஆதி, அங்கு யாருக்கும் வாங்கிப் போகணுமா?” அப்பாவியாய் மங்களம் கேட்க…

“இது நம்ம வீட்டு குரங்குக்குத் தான். இந்தாடி வச்சுக்கோ…” என கண்சிமிட்டி நிவியிடம் கொடுக்க,

“ஏன்டா உனக்கு கரடி பொம்மையெல்லாம் கிடைக்கலையா? இதப் போய்வாங்கிட்டு வந்திருக்க?”

“இதுக்கு என்னம்மா குறைச்சல்? குரங்குக்கு குரங்கைத் தான் பிடிக்கும். கரடியை பார்த்து பயந்துவிடும், அதெல்லாம் யோசிச்சுட்டோம்ல…!”

“ஆதி, புள்ளையை குரங்குன்னு சொல்லதான்னு எத்தனை தடவை சொல்றது…”

“அம்மா, இதுக்கு ஒரு பஞ்சாயம் வைக்காதீங்க. குரங்கை குரங்குன்னு தான் கூப்பிடுவாங்க… மண்ணு மாதிரி நிக்காதடி. எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கென்ன?”

“அடப்பாவி! இதெல்லாம் அநியாயம்டா… நீ கூப்பிடும் அழகுக்கு அவ உனக்கு வக்காலத்து வேறு வாங்கணுமா?”

“தங்கம்னு கூப்பிடற மாதிரி இதுவும் செல்லப் பேர் தான் அத்தை… நீங்க கோபப்படாதிங்க.”

“அதைச் சொல்லு… இவனுக்குன்னு வந்து சேர்ந்திருக்கியே, உன்னையெல்லாம் மாத்தவே முடியாது”

இரவில் வழக்கம் போல் அவளது அறைக்கு வந்தவன் தன் இருக்கையில் அமர, நாளை இந்நேரம் இங்கு இருக்கமாட்டானே கண் கலங்கியபடி ஜன்னல் புறம் திரும்பி நின்று கொண்டிருந்தாள் நிவேதா.

“பட்டுக்குட்டி… இப்படி வா” தன்னருகே அழைத்தவன், புத்தம் புதிய கைபேசியை அவளிடம் கொடுக்க,

“இது எதுக்கு அத்தான்?”

“என்னோட பேசணும்னெல்லாம் உனக்கு தோணவே தோணாது… ஆனால் எனக்கு அப்படி இல்ல. வாரத்தில் ரெண்டு நாள் பேசுவேன். அங்கு போனதும் சிம் வாங்கிட்டு நம்பர் தரேன்… உனக்கு எப்போ பேசணும்னு தோன்றினாலும் கால் பண்ணு.

தூக்கம் வராமல் கஷ்டப்பட்டா, உடனே அத்தானுக்கு கூப்பிடனும் சரியா? மூணு மாசத்துக்கு ஒரு தரம் கண்டிப்பா வந்துடுவேன். அப்புறம் பத்துநாள் உன்னோடு தான். சமத்தா இருக்கணும் தங்கம். கண்டதையும் நினைச்சுக்கிட்டு வருத்தப்படக் கூடாது.

இப்போ ரொம்பவே பெரிய பெண்ணாகிட்டீங்க, சமத்தா இருப்பிங்க தானே? இனி இந்த குரங்கு பொம்மை தான் உன் ஆதி அத்தான் சரியா? வேறு என்ன வேணும்? இன்னும் இப்படி உம்முன்னு இருந்தா எப்படி பட்டு…? அத்தான் அங்க போய் ஒழுங்கா வேலை பார்க்க வேண்டாமா?” அருகே அமர்ந்திருந்தவளின் கன்னம் தாங்கி வினவ,

“இந்த பொம்மையும் நீங்களும் ஒண்ணா?” விழிகளில் நீர் இதோ அதோ என நிற்க,

“இல்லையா பின்ன…? இந்த குட்டிக் குரங்கோட ஜோடிக் குரங்கு! பொருத்தமா தானே இருக்கு…” சூழலை இலகுவாக்க முயன்றான்.

“ஆதி அத்தான்… கண்டிப்பா போகணும் இல்ல…?” தானாகவே அவனை கட்டிக் கொண்டு மார்பில் முகம் புதைத்துக் கொள்ள,

‘ஐயோ! என்னடி இப்ப போய் இப்படி கேட்கிற?’ எண்ணியவன் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்க அவனது சட்டை பட்டனை திருகியபடிய,

“ஆதி அத்தான், நாளைக்கு ஏர்லைன்ஸ் ஸ்ட்ரைக் இருந்தா நல்லா இருக்கும் இல்ல?” (கிழிஞ்சுது)

“தங்கம், உனக்கு இந்த பட்டன் ரொம்ப பிடிச்சிருக்கோ… இன்னும் கொஞ்சம் தான்… டிரை பண்ணு கையயோட வந்துடும்…”

“ம்… எனக்கு இந்த சட்டையே பிடிச்சிருக்கு… இப்போ அதுவா முக்கியம்? கண்டிப்பா கரெக்ட் டயமுக்கு ஃபிளைட் கிளம்பிடுமா?” அவள் முறைப்பாக கேட்க…

“லூசு, லூசு… நாளைக்கு இல்லன்னா நாளை மறுநாள். போறது உறுதி ஆன பிறகு எதுக்கு இந்த யோசனை?” என்றபடி அவளை கட்டிலில் அமர்த்தியவன் தன் சட்டையை கழட்ட…

“ஆதி அத்தான் என்ன பண்றிங்க?” அவள் மிரண்டு விழிக்க…

“அடிங்க! இப்படியெல்லாம் யோசிக்க தெரியுமா உனக்கு? நீ தானே இந்த சட்டை பிடிச்சிருக்குன்னு சொன்ன, போட்டுக்கோ…!”

“சோ ஸ்வீட் தேங்க் யூ” வேகமாக அணிந்து கொண்டாள். நைட்டியின் மீது அவன் சட்டை… லூசுத்தனமாக இருந்தாலும் இருவருக்குமே பிடித்திருந்தது.

“உங்க மடியில் படுத்துக்கட்டுமா ஆதி அத்தான்…?” வேறு எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாய் அவன் முகம் பார்க்க… மறுக்க முடியாமல் படுக்க வைத்துக் கொண்டான். சற்று நேரத்திலேயே தூங்கிப்போனாள். அவனுக்கும் அவளை பிரிய வேண்டுமே என்னும் வருத்தம் தலைதூக்க அவளருகிலேயே படுத்துவிட்டான்.

மறுநாள் ஆதியின் பெற்றோர், நிவி, பிரபா, நந்து அனைவரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். மங்களம் மகனை கட்டிக் கொண்டு அழ அதிசயமாய் தன் டேமை திறக்காமல் நின்றது நிவிக்குட்டி. நந்து நண்பனைத் தோளோடு அணைத்து விடைகொடுக்க, பிரபாவும் ஆதியும் இறுகத் தழுவிக் கொண்டனர்.

அன்னைக்கும் தந்தைக்கும் முத்தம் வைத்து இருவரையும் கட்டிக்கொண்டு விடைபெற்றவன், விமான நிலையத்திற்குள் நுழையும் சமயம் திரும்பி பார்த்து நிவியை நோக்கி ‘வா’ என்பது போல் கையசைக்க சிட்டாய் பறந்து அவனருகே நிற்க,

“பை தங்கம்! இப்படித் தான் தைரியமா இருக்கனும். அவள் கையோடு கைகோர்த்துக் கொண்டான்.

“கிளம்பட்டுமா?” முத்தமிட வேண்டும் போல் மனம் பரபரக்க பெற்றோரும் நண்பர்களும் நிற்கும் போது எப்படி… என தயங்கிக் கொண்டிருக்க, எம்பி அவன் கன்னத்தில் வேகமாய் முத்தமிட்டவள்,

“பை ஆதி அத்தான்!” விரிந்த புன்னகையுடன் கையாட்டி விடைகொடுத்து திரும்பிச் சென்றுவிட எதிர்பாராத முத்தத்தில் திகைத்து நின்றவன் சிறு சிரிப்புடன் தன்னை சமன் செய்து கொண்டு அனைவர்க்கும் கையசைத்து விடை கொடுத்து கிளம்பிவிட்டான்.

“அத்தை, ஆதி அத்தான் நான் தைரியமா இருக்கேன்னு பாராட்டுனாங்க தெரியுமா? தங்கம்ன்னு சொன்னாங்க…” குதூகலமாய் சொல்லிக்கொண்டு வர,

‘இது தான் முத்தத்துக்கு காரணமா? நான் கூட என்னவோ ஏதோன்னு நினச்சேன். ரெண்டும் பிடிகொடுக்க மாட்டேங்குதுகளே!’ என ஆயாசமாய் இருந்தது மங்களத்துக்கு.

அவனில்லாது வீடு வெறிச்சென்று இருக்கவே ஒரே அழுகாச்சி தான். அத்தையும், மாமாவும் சமாதானம் செய்யும் நிலையில் இருந்தாள் நிவி.

“இவ்வளவு தான் உன் தைரியமா? இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆதி போன் பண்ணுவான், நீ அழுதன்னு தெரிந்தால் அவன் வந்ததும் நியாபகம் வச்சிருந்து கொட்டுவான். அது உனக்கு தேவையா?” அத்தை வடிவேலு பாணியில் கேட்க சிறு சிரிப்புடன் தன்னை சமன் செய்து கொண்டாள்.

உன்மத்தமாகலாம்…

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s