உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் #2

மறுநாள் அலுவலகம் வந்த மதுராவின் டேபிளில் அழகும், கவர்ச்சியும், கம்பீரமுமாய் வீற்றிருந்தது மனுபரதன் அனுப்பிய பொக்கே. அதை கையில் எடுக்க,

“ஷார்க் ஷிப்பிங் கம்பெனில இருந்து வந்திருக்கு மேம்.” என அவளது காரியதரிசி கூற, ஒரு நொடி உடல் இறுக நின்றவள் தன்னை சமாளித்துக் கொண்டு,

“பொருட்களை எல்லாம் கலெக்ட் பண்ணிட்டாங்களா? பேமெண்ட் சரியா போகுதான்னு செல்லருக்கு போன் பண்ணி கேட்கச் சொன்னேனே, கேட்டாச்சா?” என தனது வேலைக்கு தாவினாலும், கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் தனது மேசையின் மேல் வீற்றிருக்கும் பூங்கொத்திலிருந்து அவள் பார்வை நகரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

நண்பகல் கொள்முதல் செய்த பொருட்களை மும்பைக்கு அனுப்புவதற்காக மதுரா ஏர்போட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்க, அந்நேரம் அவளது கைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வர, அதை படித்தவள் தனது வேலையை காரியதரிசிடம் ஒப்படைத்துவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்.

“ஹவ் ஆர் யூ ஹனி?” இந்த நாலே நாலு வார்த்தைகள் தான் அவளை அசையவிடாது அமர்த்தி வைத்திருந்தன. திகைத்திருந்தவளின் மூளைக்குள்,

‘எனது எண் எப்படி கிடைத்தது? இவ்வளவு நாளும் இல்லாமல் இப்பொழுது ஏன் திடீரென இதெல்லாம்?’ என கேள்விகள் வரிசைகட்டிக் கொண்டு எழ கிங்கிணியாய் சிணுங்கிய கைபேசி மதுராவை இயல்புக்கு கொண்டு வந்தது.

திரையில் மிளிரும் பெயரை கண்டவளுக்கு உடலெங்கும் ஒருவித நடுக்கம் ஓட… அழைப்பை எடுப்போமா, வேண்டாமா? என நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு கடைசி ரிங்கில் உயிர்ப்பிக்க,

“ஹனி…” என்னும் அழைப்பு காதில் விழ விசுக்கென எழுந்துவிட்டாள்.

“கேள்வி கேட்டா பதில் சொல்லணும்னு தெரியாதா? எப்படி இருக்கன்னு கேட்டு அரைமணி நேரமாகுது, இன்னும் பதில் வரல… நமக்கான கேள்விக்கு உடனுக்குடன் பதில் கொடுக்கணும்னு உன் பாஸ் உனக்கு சொல்லிக் கொடுக்கலையா?” கேலியும், கிண்டலுமாய் எதிர்முனையில் இருந்து கேட்க, அவளது இதழ்கள் பசை போட்டது போல் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு பேச மறுத்தன.

“நான் எப்படி இருக்கேன்னு கேட்க மாட்டியா ஹனி?” அதற்கும் அவளிடம் அமைதியே பதிலாய் கிடைக்க,

“சொல்லிக்கிற மாதிரி இல்ல… எனிவேஸ் நீயாவது சந்தோஷமா இருந்தா சரி தான். புதுசா தொழில் தொடங்கியிருக்கீங்க, சிகரம் தொட வாழ்த்துகள் மதுரா மேம்.” என்றவன் அவள் பதிலுக்கெல்லாம் காத்திருக்கவில்லை, வேகமாய் இணைப்பை துண்டித்துவிட்டான்.

அதற்குமேல் பேசினால் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என நினைத்தான் போலும். அவன் தன்னை யாரென அறிமுகப்படுத்திக் கொள்ளாத போதும் அந்த காந்த குரலும், பேசும் த்வனியும், ஹனி என்னும் அழைப்பும் அவன் இன்னார் என்பதை அவளுக்கு காட்டிக் கொடுக்க,

அவனை முதன் முதலில் சந்தித்த நாட்களை நோக்கி அவள் மனம் ஓட அதை துரத்தி பிடிக்க அவளும் ஓடினாள். அவனும் அங்கே அதே நினைப்பில் ஆசையுடன் பின்னோக்கி பயணிக்க துவங்கிவிட்டான். 

மூன்று வருடங்களுக்கு முன்…                                              

ஆதவன் அழகாய் புலரும் நேரம். மரத்தில் வசிக்கும் பலவகையான பறவைகளின் ரீங்காரம் செவிகளில் இன்ப தேனூற்றாய் பாய அதை ரசித்தபடியே அமர்ந்து அன்றைய செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தார் சங்கரன்.

வீடெங்கும் தூபம் மணக்க பூஜை அறையில் விளக்கேற்றி, நீல நிறத்தில் இரண்டு விரல்கடை அளவு கரை வைத்த சில்க் காட்டன் புடவையும், நெற்றியில் வட்டத் திலகமும் ஏழு கல் வைரத்தோடும், கழுத்தில் தாலிச்சரடும், கைக்கிரண்டு வைர வளையல்களுமாய் பார்த்ததுமே பணம் படைத்தவர்கள் என தெரிந்துகொள்ளும் அளவிற்கு நறுவிசான அலங்காரத்துடன் கடவுளின் முன் கைகூப்பி நின்றார் நாற்பது வயது கிருஷ்ணவேணி.

அன்பும், கருணையும் ததும்பி வழியும் கண்களும், பாந்தமான முகவடிவும் அதிர்ந்து பேசாத குணமும் கொண்டவர் இந்த கிருஷ்ணவேணி.

“பச்சை மாமலை போல் மேனி

பவள வாய் கமழச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே

ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய்

இந்திர லோகமாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகருலானே…”

என தன் தெய்வீகக் குரலில் மனம் உருகி பாடியவர், தன் வேண்டுதல்களை அந்த அரங்கனிடம் வைக்கத் தொடங்கினார்.

வேணியின் வேண்டுதல் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போயின எனினும், அத்தனையும் அவரது மகன் நலன் குறித்து இருந்ததே குறிப்பிடத்தக்கது. அதிலும் இன்று அவனது பிறந்தநாள் என்பதால் பிரார்த்தனை கொஞ்சம் நீண்டது.

ஒருவழியாய் பூஜையை முடித்துக் கொண்டு சமையல்கட்டில் நுழைந்தவர் நுரை பொங்கும் காபியை கலந்து எடுத்துச் சென்று கணவரிடம் கொடுக்க,

“இனிய காலை வணக்கம் வேணிமா…” என மலர்ந்த முகத்துடன் வாங்கிக் கொண்டார்.

“குட்மார்னிங் அத்தான்” வழக்கமான பளிச்சிடும் புன்னகையுடன் சொன்னார்.

“நீ காபி குடிச்சுட்டியா வேணிமா?”

“இதோ… சமையலை பார்த்துக்கிட்டே குடிச்சிடுவேன். நீங்க பொறுமையா குடிங்க, நான் போறேன். எனக்கு தலைக்கு மேல வேலையிருக்கு” என்றார்.

“சும்மாவே விதம் விதமா சமைப்ப, இன்னைக்கு உன் மகன் பிறந்தநாள் வேற… சொல்லவா வேணும்…?!” என சங்கரன் சிரிக்க,

“ஆமா, அத்தான். இன்னைக்கு பரத்துக்கு பிடிச்ச ஐட்டமெல்லாம் பண்ணனும். நேரமாச்சு” என ஓடியேவிட்டார்.

எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் சமையலை தன் கைபட செய்வது தான் வேணிக்கு பிடிக்கும்.

அரிசியையும், பருப்பையும் கலந்து பொங்கலுக்காக குக்கரை அடுப்பில் ஏற்றி மறுபுறம் பஞ்சு போல் இட்லிகளை தயாரித்து அதற்கு தொட்டுக்கொள்ள காரச்சட்னியும்… நெய்யும், முந்திரியும், மிளகும் போட்ட பொங்கலுக்கு தோதாய் தேங்காய் சட்னியும், சாம்பாரும் வைத்திறக்கியவர், மகனுக்கு மிகவும் பிடித்த பால் கேசரியையும் செய்து இறக்கினார்.

மொறுமொறு வடையும், பூரியும் கிழங்குமாய் தடபுடலான காலை உணவை தயாரித்து முடித்து அழகாய் சாப்பாட்டு மேசையில் அவற்றைப் பரப்பி வியர்வை அரும்பியிருந்த முகத்தை பூந்துவாலையில் ஒற்றிக்கொண்டு நிமிர,

இருபத்தியேழு முடிந்து இருபத்தியெட்டு வயதில் இன்று அடியெடுத்து வைக்கும் அவரது மகன் மனுபரதன் கறுப்பு பேண்ட்டும், வெள்ளை சட்டையும் அணிந்து அதற்கு தோதாய் கறுப்பு நிற டையுமாய் நெடு நெடு நெடுமாறனாய் வர,

“பரத் கண்ணா… பிறந்தநாளும் அதுவுமா கறுப்பு போடலாமா? வேற உடுப்பு மாத்திக்கோ” அன்பும், அக்கறையுமாய் சொன்னார் வேணி.

மறுபேச்சின்றி மீண்டும் தனது அறைக்குள் நுழைந்தவன் அடுத்த சில நிமிடங்களில் ஆடையை மட்டுமில்லாது கூலர்ஸையும் கறுப்பிலேயே அணிந்து கொண்டு வந்தான்.

‘தான் சொன்னதற்கு எதிராக செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்படி முழு கறுப்பில் வந்து நிற்கிறானே…’ என நொந்து போனார்.

மனுபரதன் சிறு வயதில் இருந்தே அப்படித் தான். வேணி என்ன சொன்னாலும் அதற்கு எதிராய் செய்வது தான் அவன் குணம். இதை நன்கு அறிந்திருந்த போதும் அமைதியாய் இருக்காமல் மாற்றச் சொன்ன தன் முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே கடிந்து கொண்டாலும்,

‘என்ன விதமாய் உடையணிந்தாலும் என் மகன் பேரழகன் தான்!’ என வேணியின் கண்கள் மகனை வாஞ்சையுடன் வருடின.

‘ஓங்கி உயர்ந்து உலகளந்த பெருமான் என பெருமாளைத் தான் சொல்வார்கள். அவரைப் போலவே என் மகனும் எவ்வளவு உயரம்! இந்த பால் போலும் பளீர் நிறம் அத்தானுடையது.

எப்பொழுதும் இறுகிப் போய் இருக்கும் முகத்தில் மின்னல் கீற்றாய் சிறு புன்னகை அவ்வப்போது தோன்றினால் பல மடங்கு அழகாய் மாறிவிடுவான்.

இப்பொழுது புதிதாய் வைத்திருக்கும் முறுக்கு மீசையும், குறுந்தாடியும் என் மகனின் அழகை கூட்டுகிறது. ஊர் கண்ணெல்லாம் இவன் மேல் தான் இருக்கும்.

கடவுளே! வெள்ளைக்கார துரை போல் மிடுக்காய் இருக்கும் என் மகனின் மீது யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது’ என மானசீகமாய் மகனுக்கு திருஷ்டி எடுத்துக் கொண்டிருந்தவரை,

“பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பரத்” எனும் அத்தானின் குரலே இயல்புக்கு கொண்டு வந்தது.

‘பெருமாளே! இன்னும் என் பிள்ளைக்கு வாழ்த்து சொல்லலையே…’ என நெற்றியில் தட்டிக் கொண்டவர்,

“அத்தான், பரத் வாழ்க்கையில் இனி எல்லாமே நல்லதா நடக்கனும். அவன் மனம் போல் கல்யாண வாழ்க்கை அமையனும். என் மகன் எப்போதும் சந்தோஷமா இருக்கணும் என்று வாழ்த்தி விபூதி பூசி விடுங்க. நான் எடுத்துட்டு வரேன்” என சாமியறையை நோக்கி விரைந்தவரின் உள்ளம் தான் வாழ்த்த நினைத்ததை அத்தானை உபயோகப்படுத்தி வெற்றிகரமாய் செய்ததில் நிறைந்திருந்தது.

தந்தையோடு சேர்த்து வேணிமாவின் காலிலும் விழ வேண்டியிருக்குமோ எனும் நினைப்பில் அன்னை விபூதியை எடுத்துக்கொண்டு வருவதற்குள் சட்டென தந்தையின் காலில் விழுந்து வணங்கிய மனுபரதன் வராத அழைப்பை ஏற்று கைபேசியை காதுக்கு கொடுத்தபடி வாசலை நோக்கி நகர முற்பட,

“பரத் கண்ணா… சாப்பிட்டு போகலாம். எல்லாம் தயாரா இருக்கு” மகன் பட்டினியாய் புறப்படுகிறானே என்று வேணி மனம் பதறச் சொன்னார்.

“சாப்பிட்டு போ பரத். வேணிமா உனக்கு பிடிச்சதெல்லாம் பண்ணி வச்சிருக்கா…” என்று தந்தையும் சொல்ல, ஒரு நொடி நின்று நிதானமாய் திரும்பியவன்,

“முக்கியமான மீட்டிங் இருக்குப்பா, நேரமாச்சு. நீங்க சாப்பிடுங்க” என கிளம்பிவிட்டான்.

இது தான் அவன் இயல்பு. இன்று, நேற்றல்ல… இருபது வருடமாய் இந்த புறக்கணிப்பு தொடர்கிறது. இப்படித் தான் நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றே என்றாலும் இயல்பாய் ஏற்றுக்கொள்ள முடியாமல் வேணியின் கண்களில் மளுக்கென கண்ணீர் திரண்டுவிட்டது. அதைக் கண்ட சங்கரனுக்கு சங்கடமாகிப் போக,

“அவனோட பிடிவாதம் தெரிஞ்சும் உன்னை நீயே ஏன் வருத்திக்கிற வேணிமா?” ஆற்றாமையுடன் கேட்டார். விழிநீரை முந்தானையில் ஒற்றியெடுத்தபடி,

“இன்னைக்கு இல்லைன்னாலும் என்றைக்காவது ஒரு நாள் நிச்சயமா என் மகன் என் கையால் சாப்பிடுவான். இந்த எதிர்பார்ப்போட தான் தினமும் நானே சமைக்கிறேன்” என நம்பிக்கையுடன் தன்னை தேற்றிக் கொண்டவரின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

சிறுவயதில் பரத்தின் பிறந்தநாள் தடபுடலாய் கொண்டாடப்படும். சொந்தங்களை அழைத்து விருந்து கொடுப்பதை விட ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுக்கு உணவு வழங்கி அவர்களுடன் சேர்ந்து உண்டு அன்றைய நாளை அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒன்றாய் மாற்றுவது தான் சங்கரனுக்கு பிடிக்கும்.

“வேணிமா, எனக்கு என்ன பரிசு கொடுக்கப் போறீங்க…?” என கழுத்தை கட்டிக்கொண்டு கொஞ்சும் மகனுக்கு,

“உனக்கு பிடிச்சதை வாங்கிக் கொடுக்கனும்னு தான் காத்துக்கிட்டு இருக்கேன். வாடா கண்ணா, கடைக்கு கிளம்பலாம்…” என்று சொல்லி மூக்கோடு மூக்கை உரசி செல்ல சண்டையிட,

“எனக்கு பிடிச்சதெல்லாம் என்கிட்ட இருக்கு வேணிமா. நீங்க நிறைய முத்தம் கொடுங்க, போதும்!”

“முத்தம்… நான் எப்போதும் கொடுக்கிறது தானே…”

“ம்ஹூம்… இன்னைக்கு ஸ்பெஷலா நிறைய முத்தம் வேணும் வேணிமா… கொடுங்க, கொடுங்க!” என கன்னத்தை காட்டிக் கொண்டு நிற்கும் மழலை மகனை வேணியின் மனம் இன்றும் தேடியது.

மனுபரதனின் சந்தோஷங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பத்தின் சந்தோஷமும் அவனது எட்டு வயதோடு முடிவுக்கு வந்துவிட சிறுவயது மகனின் அன்பையும், பாசத்தையும் எண்ணி ஏக்கத்துடன் பழங்கணக்கு பார்ப்பதே வேணிக்கு வேலையாகிப் போனது. அமைதியாய் உணவு பரிமாறிக் கொண்டிருந்தவர்,

“அத்தான்… பரத் பிறந்தநாளை முன்ன மாதிரி ஆசிரமத்தில் மறுபடியும் கொண்டாட ஆரம்பிக்கலாம். அந்த புண்ணியம் அவன் வாழ்க்கையை மலர வைக்கட்டுமே…” என வேண்டுதல் வைக்க,

“முன்ன மாதிரி ஆசிரமத்துக்கு நேரில் போய் அவர்களோட சேர்ந்து சாப்பிடறதும், பொழுதை போக்குறதும் இல்லையே தவிர ஒரு குறிப்பிட்ட தொகையை இன்னமும் அனுப்பிட்டு தான் இருக்கேன் வேணிமா.

அது போக உன் மகன் ‘அன்னை இல்லம்’ங்கிற குழந்தைகள் காப்பகத்துக்கு மாசா மாசம் உணவுக்காக ஒரு பெரும் தொகையை ஸ்பான்சர் பண்றான்” என்றவரிடம் சிறு பெருமை எட்டிப் பார்த்தது.

தன் மகன் மனதில் இன்னும் ஈரம் இருப்பதில் வேணி நெகிழ்ந்து போனார்.

ஆக, மதுவோடு போனில் பேசியது மனுபரதன் தான்! அவனது கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல முடியாத அளவிற்கு அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும்? மனுவுக்கும், வேணிக்கும் அப்படி என்ன பிரச்சனை? அனுமானிக்க முடிந்தால் பகிருங்கள் தோழமைகளே…

உயிராகலாம்…

6 Comments

 1. Thaji says:

  ஒருவேளை இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா பின்னர் பிரிந்தும் விட்டார்களா காரணம் வேணிம்மாக்கு மது ஆதரவாய் பேசி இருக்கலாம் இதனால இருவருக்கும் மனகசப்பு வந்திருக்கலாம்???😀மனு மேல தப்பு இருக்கலாம்?????

  எனக்கொரு டவுட் சிஸ் 😀 வேணிம்மாக்கு 40வயது மகனுக்கு 28 வயது என்று சொல்லியிருந்நீங்க…
  வேணிம்மா பால்ய விவாகம் முடித்தவராரா…..அல்லது இரண்டாவது மனைவியா ????இல்லாட்டி தத்து பிள்ளாயா மனு 😀🤔

  உயிர் உருகும் அளவுக்கு ஹனி….என்று அழைத்து பேசினான் என்ன …தப்பு பண்ணினான் மனு
  மதுகூட …இவனின் அழைப்பில் வாயடைத்து ….நின்றாளே😀😍

  Liked by 1 person

  1. ammuyoga says:

   அருமையான கணிப்பு! எத்தனை இருக்கலாம்! நீங்க சொன்னபடி இருக்கலாம்… கலாம்… ம்! பார்க்கத்தானே போறீங்க… ஒருவேளை தத்து அம்மாவா இருப்பாங்களோ? உருக வேண்டிய நேரத்தில் உருகாம இப்போ உருகி என்ன பிரயோஜனம் சொல்லுங்க…

   Like

 2. Suganguna says:

  Both may be married and i guess is wearing collar neck blouse to hide her thali

  Liked by 1 person

  1. ammuyoga says:

   irukalam pa. parkathane poringa.

   Like

 3. Anonymous says:

  Nice story

  Liked by 1 person

Leave a Reply to ammuyoga Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s