உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #27

நிவி பனிரெண்டாவது முடித்துவிட்டு ஆதியின் அறிவுரைப்படி இளங்கலை வங்கி மேலாண்மையில் சேர்ந்திருந்தாள். இன்று கல்லூரியின் முதல் நாள். ஆதி தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு துபாய் வேலைக்கான பர்மிட்டுக்காக காத்திருந்தான்.

“ஆதி இன்னைக்கு நிவியை நீயே காலேஜில் கொண்டுபோய் விடு. முதல் நாள் பயந்துடப் போறா…”

“அம்மா இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா? இன்னும் உங்க மருமக என்ன பேபியா? தனியா போய் பழகட்டும். எப்படியும் ராகிங்கையெல்லாம் தனியா தான் ஃபேஸ் பண்ணனும். நான் போய் ஒண்ணும் பண்ண முடியாது.

இந்த மகாராணி படிக்கிற அழகுக்கு, நந்து வேற அவளோட ஸ்கூட்டியை கொடுத்திருக்கா எத்தனை தடவை விழுந்து எந்திரிக்கப் போகுதோ?” கேலியாக சொன்னாலும் சிறு கவலையும் இருக்கத் தான் செய்தது ஆதிக்கு.

“அதனால் தான் சொல்றேன் ஆதி… முதல் நாளே விழுந்து எந்திரிச்சா என்ன பண்றது? இன்னைக்கு நீயே கூட்டி போ… நாளைக்கு அவளை ஸ்கூட்டியை ஓட்டச் சொல்லி பின்னாடி உட்கார்ந்து போ… அப்புறம் அவளையே தனியா ஓட்டவிட்டு ஃபாலோ பண்ணு. நீ ஊருக்கு போறதுக்குள்ள கொஞ்சம் பழக்கிவிடு ஆதி.

“இந்த ஐடியாவெல்லாம் உங்களுக்குன்னு எப்படி தான் தோணுமோ தெரியல… நல்லா என்னை வேலை வாங்குங்க…”

கல்லூரிக்கு பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தவள்,

“ஆதி அத்தான்! சீக்கிரம் வாங்க… ஆதி அத்தான்!” என்று மூச்சுவிடாமல் அழைக்க,

“ஆதி சீக்கிரம் போயெண்டா! புள்ள எவ்வளவு நேரமா கூப்பிடுது”

“என்னடி? ஏன் இப்படி கூப்பாடு போடுற?” என அவளது அறையினுள் நுழைய, அழகான பூந்துவாலையுடன் (டவல் பா!) கைக்கொன்றாக இரண்டு சுடிதார்களை பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள் அவனது இம்சை.

“என்னடியிது…?!” அரைகுறையாய் அவளை பார்த்து திகைத்து விழிக்க…

“நல்லா இருக்கா? இது அத்தை செலக்ட் பண்ணினது… இது மாமா செலக்ஷன்! எதைப் போட்டுக்கட்டும்? நீங்க சொல்லுங்க ஆதி அத்தான்?”

அவன் எங்கே ஆடைகளைப் பார்த்தான்!? கழுத்தடி மச்சத்திலும், பளீரென்ற நெஞ்சுக்குழியிலும் மிச்சமில்லாமல் மொத்தமாக தொலைந்து சுயம் திரும்பியவன்,

“எதையோ ஒன்றைப் போடு… ஏன் இப்படி அரைகுறையாய் நின்று என்னை இம்சிக்கிறாய்?” என சிடுசிடுக்க,

“சோ வாட்? நீங்க கூடத் தான் அத்தை, மாமாக்கு முன்னாடி துண்டோடு திரியுறீங்க! சீக்கிரம் சொல்லுங்க, லேட்டாகுது!”

“அவங்க என் அப்பா அம்மாடீ!”

“நீங்களும் எனக்கு அப்படி தான்!” என கண் சிமிட்டி சிரிக்க, திகைப்பிலிருந்து மீளாதவனாய் ஒன்றை கை காட்டினான்.

கல்யாணத்திற்குப் பிறகாவது என்னை கணவனா பார்ப்பியா ? இல்லை அப்பவும் இப்படி குழந்தையா இருந்து கொல்வியா? எனும் கேள்வியை கண்களில் தேக்கி அவளைப் பார்க்க,

“போங்க… போங்க நான் டிரஸ் மாத்தணும். லேட்டாயிடுச்சு!” என அவனை வெளியே தள்ளினாள்.

‘ஆதி, குறைந்தபட்சம் இன்னும் மூன்று வருஷமாவது காத்திருக்கணும்…செத்தடா!’ என மனதினுள் நொந்தபடியே கல்லூரியில் இறக்கிவிட,

“ஆதி அத்தான், நீங்களும் வரீங்களா?” என்றாள் படபடப்புடன்.

“இங்கு எனக்கென்ன வேலை?” என புருவம் தூக்க,

“ப்ளீஸ், ஆதி அத்தான்… ராகிங் இருக்குமோன்னு பயமா இருக்கு?!”

“எல்லாத்தையும் என்ஜாய் பண்ண கத்துக்கோ… போ…!” என அதட்டிவிட்டு போய் விட்டான். வசமாக பெரிய பட்டாளத்திடம் மாட்டிக்கொண்டாள்.

ஆண்களும், பெண்களுமாய் பத்து பதினைந்து பேர் இருந்து கொண்டு,

“இப்போ உன்னை கொண்டு வந்துவிட்டது உன் அண்ணனா?”

“இல்லை. ஆதி அத்தான்!”

“அத்தானா ..?” எனக் கூச்சலிட,

“அட லூசுகளா! இதில் இப்படி கத்த என்ன இருக்கு?” என விழிக்க, (அத்தான்ல ஆயிரம் இருக்கு ஆனால் உன் அர்த்தம் எல்லோருக்குமே புதுசு)

“என்ன மேஜர்?”

“BBM”

“வாவ்! உன் அத்தானைப் பற்றி ஒரு கவிதை சொல்!”

“எனக்கு தெரியாது”

“அப்போ பாட்டு பாடு!”

“என்ன தவம் செய்தனை…”

“ஏய்… நிறுத்து, நிறுத்து! அத்தான்னு வர்ற மாதிரி பாட்டு பாடு”

“அத்தான்… என்னத்தான்… அவன் என்னைத் தான் எப்படி சொல்வேனடி…” கூச்சலும், விசிலும் காதை பிளந்தன.

“சொல்லு… உன் அத்தான் என்ன செய்தார்?”

“அவள் தான் எப்படி சொல்றதுன்னு வெட்கப்படுறாளே விடுங்க பக்கிகளா” என்றான் ஒருத்தன்.

“உன் பேர் என்ன?”

“நிவேதா”

“இனிமே அத்தான்னு பேர் மாற்றம் பெறுகிறாய்! நாங்க எங்கு உன்னை பார்த்து அத்தான்னு கூப்பிட்டாலும் வணக்கம் வைக்கணும். சரியா?”

“ம்”

“எங்க…? ‘அத்தான்!’

“வணக்கம் சீனியர்ஸ்!”

“கலக்குற போ! கிளம்பு” என ஒருவழியாக அனுப்பி வைத்தனர். கல்லூரி வாழ்க்கை இனிமையாகவே இருந்தது.

ஆதி தனது துபாய் பயணத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்க… போ என்றும் சொல்ல முடியாமல் இரு என்றும் சொல்ல முடியாமல் மருகிக் கொண்டிருந்தாள் நிவேதா. பகலெல்லாம் கலகலப்பாக இருந்தாலும் இரவின் தனிமையில் வருந்தினாள்.

விலகி இருந்து தான் இவளுக்கு தன் இருப்பை உணர்த்த வேண்டும் என முடிவெடுத்தே அந்த வேலையை தேர்ந்தெடுத்திருந்தான். அவனுக்கும் அவளது வருத்தம் புரிந்தது. இருந்தும் இந்த பிரிவு இருவருக்குமே அவசியம் என நினைத்ததால் அவனும் அவளிடம் அதிகம் வம்பு வளர்க்கவில்லை.

எங்கே இவள் டாமை திறந்துவிட்டு போகாதே என்று சொல்லிவிடுவாளோ என்ற பயமும் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது ஆதிக்கு.

பிரபா சிவானந்தனின் கம்பெனியில் MD ஆக பொறுப்பு பேற்றுக் கொண்டு ஒரு மாதமாகிவிட்டது. அதன் CEO பவானி தான் என்ற போதும் அவள் ஒருமுறை கூட கம்பெனியின் பக்கம் எட்டி பார்க்கவேயில்லை.

இதோ, இண்டஸ் இண்டஸ்ட்ரிஸ் டெண்டர் அறிவிப்புக் கொடுத்திருந்தனர். பிரபாவே இந்த முறை கொட்டேஷன் தயாரித்தான். அதற்குக் காரணம் இருந்தது. சமீபத்தில் அவன் வேளைக்கு சேர்வதற்கு முன் சிறு கவனப் பிசகால் ஒரு டென்டர் கை நழுவிப் போயிருந்தது.

அதனால் ரகசியம் காக்கப் படவேண்டிய வேலையை தானே எடுத்து செய்து தனது செகரட்டரி ரவியின் உதவியுடன் அனைத்தையும் பவானிக்கு மெயில் செய்தான்.

அடுத்த 10 நிமிடங்களிலேயே அவளிடமிருந்து அழைப்பு, பிரபாவை சந்திக்க தான் வருவதாகச் சொல்லி காத்திருக்கச் சொன்னாள். வேலை நேரம் முடிந்துவிட்டது. மாலை ஏழு மணியை நெருங்கிக் கொண்டிருக்கவே ரவியை அனுப்பி வைத்துவிட்டு காத்திருந்தான்.

பவானி MBA இரண்டாம் ஆண்டு மாணவி. கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தவள் அடுத்து தன் காதலனை பார்க்க தயாராகிக் கொண்டிருக்க… அந்நேரம் தான் பிரபாவின் மெயிலைக் கண்டாள். அதில் சில விஷயங்கள் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியதிருக்கவே நேரில் சந்திக்கப் போகிறாள்.

காத்திருக்க தொடங்கியவன் நந்தினியுடன் பேசிக் கொண்டிருக்க, விஜயின் மாற்றத்தை சொல்லி சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தாள் தோழி. இவனும் மகிழ்வுடன் சிரித்து பேசிக் கொண்டிருக்க புயலாய் நுழைந்தாள் பவானி.

“பை நந்து! முக்கிய வேலை வந்துடுச்சு அப்புறம் கால் பண்றேன்.” சில நொடிகளே காத்திருந்தாள் என்ற போதும்

‘கொஞ்சமும் மரியாதையில்லாமல் இது என்ன திமிர் தனம்?’ எரிச்சல் மூள, அவனை ஏறிட்டவளுக்கு அவனது சிரித்த முகம் இன்னும் காண்டை கிளப்பவே,

“ஹலோ! நிஜ உலகுக்கு திரும்பியாச்சா? இல்ல இன்னும் கேர்ள் பிரண்ட் மயக்கத்தில் தான் இருக்கியா?” அவனுக்கு முன் சொடக்குப் போட்டு வினவ,

“ஹாய் பவானி. அவ என் பிரண்ட். தப்பா மீன் பண்ணாதீங்க.”

“ஷட் அப்! நான் உனக்கு சம்பளம் கொடுக்கறவ, அந்த மரியாதை இருக்கட்டும். கால் மீ மேம்.”

“சாரி. நமக்குள்ள பெருசா வயசு வித்தியாசம் இருக்காது. அதோட படிக்கிற பொண்ணு தானே சோஷியலா இருப்பீங்கன்னு நினைச்சேன் தப்பு தான் மேம்.”

அவன் மன்னிப்புக் கேட்டதும் சப்பென்றாகிவிட்டது பவானிக்கு. ஒவ்வொருமுறை இருவருக்குமான சந்திப்பின் போதும் ஏனோ இவன் திமிராக நடந்து கொள்வதாகவே அவளுக்கு தோன்றியது.

சட்டென அவன் மன்னிப்பு கேட்டதும் அவனை கணிக்க முடியாமல் தடுமாறியவள், கொட்டேஷனைப் பற்றி பேசத் தொடங்கினாள். அவளது பல கேள்விகளுக்கும், சில சந்தேகங்களுக்கும் தெளிவாக விளக்கம் கொடுக்கவே, அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டாள்.

அதற்குள்ளாகவே ஒருமணி நேரம் கடந்திருந்தது. வேலையின் போது வந்த இரு அழைப்புகளையும் அவள் எடுக்காதது கண்டு உள்ளூர பெருமைபட்டுக் கொண்டான் பிரபா.

“பார்க்கத் தான் சின்ன புள்ள மாதிரி இருக்கா, வேலையில் கெட்டி தான்!” பாராட்டு வேறு. கொஞ்ச நேரத்தில் அவள் செய்யப் போகும் வேலை தெரிந்தால் இப்படியெல்லாம் யோசிக்க மாட்டான் என்பது வேறு விஷயம்.

பவானி தன்னிடம் முதலாளியாக மட்டுமே நடந்து கொண்டாள் என்பதில் ஏனென்று தெரியாத வருத்தம் இருந்தது பிரபாவுக்கு. அவளோ வந்தது போலவே விலகியும் சென்றுவிட்டாள். எதுக்கு உன்னிடம் நெருங்கனும் அப்புறம் வருந்தனும்? பாதுகாப்பு உணர்வு போலும்.

எதிரிபார்த்தது போல் அந்த டெண்டர் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக போன முறை தட்டிச் சென்ற அதே விஷ்ணு அன் பிரதர்ஸ்க்கு கிடைத்தது. பிரபாவின் முதல் வேலையே தோல்வி காணவே எங்கு தவறு நடந்தது? வாய்ப்பே இல்லையே எல்லாவற்றையும் தயாரித்ததே நான் தானே குழம்பியவனுக்கு பவானியிடம் இருந்து அழைப்பு.

“என்ன செய்து கொண்டிருக்கிறாய் பிரபா? கொஞ்சமும் அனுபவமில்லாதவனை இவ்வளவு பெரிய பொறுப்பில் அமர வைத்தால் இப்படி தான் நடக்கும்.

அன்று வாய்கிழிய பேசினாய் இது தான் உன் திறமையின் அளவு தெரிஞ்சுக்க. இனி எல்லாம் தெரிந்தது போல் ஆடாதே.” அவனுக்கு பேச வாய்ப்பே கொடுக்காமல் துண்டித்துவிட்டாள்.

வெகு நேரம் யோசித்தவன் ரவியை அழைத்தான். நேரடியாக விசயத்திற்கு வந்துவிட்டான்.

“டபுள் கேம் ஆடறீங்களா ரவி?” அவனுக்கும் புரியவே,

“மன்னிச்சுடுங்க பாஸ்… பெரிய முதலாளி உங்களிடம் சொல்லியிருப்பார்னு நினைச்சேன். தப்பு செஞ்சது நான் இல்ல பாஸ். பவானி மேம்.”

“வாட்?”

“எஸ் பாஸ்… விஷ்ணு அன் பிரதர்ஸ் பையன் மேமோட லவ்வர்… ரெண்டு பேரும் நம்ம ‘நிர்வானா’ல அடிக்கடி மீட் பண்ணுவாங்க. அங்கு தான் சொல்லியிருக்கனும்.”

முதல் அதிர்ச்சி… ஐயோ என் பார்பிக்கு காதலன் இருக்கானா? இதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது. எட்டா கனி தான் இருந்தும் மனம் ஏற்க மறுத்தது. ரவி எதிரே இல்லை என்றால் தலையை இறுக பிடித்து சுருண்டு படுத்திருப்பான் அவ்வளவு வேதனையையும் உள்ளடக்கி,

“ஸ்டுப்பிட் மாதிரி பேசாதீங்க ரவி. லவ்வராவே இருந்தாலும் யாராவது தன் கம்பெனி ரகசியத்தை சொல்வாங்களா? அதுவும் பவானி நிச்சயம் சொல்ல மாட்டாங்க.”

“நீங்க சொல்றது சரி தான் பாஸ். மேம் சுயநினைவோடு இருந்தால் சொல்ல தான் மாட்டாங்க. பட் நிர்வானாங்கிறது பப். குடி போதையில் உளறிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

குடிச்சிட்டு உளறினேன்னு என் பொண்டாட்டி காரி துப்புவா ஆனால் என்ன பேசினேன்னு ஒண்ணுமே நியாபகம் இருக்காது பாஸ். அப்படி தான் ஏதோ நடக்குது. நான் நிறைய தடவை மேமையும், அந்த அச்சுவையும் பார்த்திருக்கேன்.”

‘என் பார்பி குடிகாரியா?’ அடுத்தடுத்த அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது பிரபாவுக்கு. குளிர்ந்த நீரை குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்,

“பவானி குடிப்பாங்களா?” நம்ம ஊரில் பப் இருக்கா? அதென்ன பேர் அச்சு?”

“பாஸ்… இருந்தாலும் நீங்க அநியாயத்துக்கு நல்லவரா இருக்கவேண்டாம்.” என சிரித்தவன்,

“அர்ஜுன். அதைத் தான் அப்படி கூப்பிடுவாங்க…”

‘அது சரி இவளுக்கு தெரியாம எப்படி அமவுண்ட் கோட் பண்ணுவது? இவன் உண்மையை தான் சொல்கிறானா? பார்த்துவிட வேண்டியது தான்’

ஒருமுறைக்கு இருமுறை ஒரே கம்பெனிக்கு கிடைத்திருப்பது ரவி சொல்வதில் உண்மை இருக்கிறது என சொல்லாமல் சொல்லியது. இருந்தும் தன் கண்காணிப்பு பணியை ஆரம்பித்தான் பிரபா… சில தினங்களிலேயே அர்ஜுனின் குணத்தை அவனால் எளிதில் கண்டுகொள்ள முடிந்தது.

‘காதலுக்கு கண் தான் இல்லை என கேள்விபட்டுருக்கிறேன். இங்கு மூளையுமில்லாமல் போய்விட்டதே…!’ ஆயாசமாக இருந்தது பிரபாவுக்கு.

‘எப்படி அவளால் இனம் காண முடியாமல் போகிறது? நடிக்கிறான்… தங்கள் கம்பெனியை முதலிடத்திற்கு கொண்டுவர, இவள் கம்பெனியை குழி தோண்டி புதைக்க நினைக்கிறான். இதை ஏன் அவளால் உணரமுடியவில்லை.

சொன்னால் புரிந்து கொள்வாளா? நம் மன திருப்திக்கு முயற்சி செய்து பார்ப்போம் இல்லையேல் முதலாளியிடம் சொல்லிவிட வேண்டியது தான்.’ அவளை நேரில் சந்திக்க வேண்டுமென்று நான்கு மெசேஜுகளுக்குப் பிறகு அனுமதி கொடுத்தாள்.

“பவானி… மேம்! உங்ககிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும்.” அமைதியாக அவள் முகம் பார்க்க,

“எனக்கும் உனக்கும் என்ன பெர்சனல் இருக்கு? என்ன கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கிறியா? வீண் முயற்சி.. எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு.

‘திமிர் தான்டி உனக்கு. உன்னை போல ஒரு குடிகாரி எனக்கு வேண்டாம்.’

“உங்க ஆளை பத்தி தான் பேசணும் மேம்.” கோபமின்றி வந்து விழுந்தன வார்த்தைகள்.

“முட்டாள்! நீ என்னிடம் கைகட்டி சம்பளம் வாங்குறவன். உன் அளவு தெரிஞ்சு நடந்துக்க. என் அப்பா சொன்னதால் தான் இன்னும் இங்கு இருக்க… என் அச்சுவை பத்தி பேச நீ யார்?” கோபத்தின் உச்சத்தில் இருந்தாள் பவானி.

“பவானி! ப்ளீஸ் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க… உங்ககிட்ட சம்பளம் வாங்குற விசுவாசத்தில் தான்… உங்க நல்லதுக்காகத் தான் சொல்றேன்.. அந்த அர்ஜுன் நல்லவனில்ல… உங்களை ஏமாத்துறான்.” நிமிர்ந்து அமர்ந்தவள்,

“நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம் இந்த நிலையில் எதுக்காக அவன் என்னை ஏமாத்தணும்?”

“உங்க கம்பெனியை இழுத்து மூடணும்கிறது தான் அவங்க நோக்கம். ஏன்னா அவங்களோட ஒரே போட்டி நீங்க தான்..”

“லூசே… காமெடி பண்ணாத என்னை கட்டிக்கிட்ட பிறகு இந்த கம்பெனி மட்டுமில்ல என் சொத்து முழுவதுமே அவங்களோடது போல தானே? பிறகு ஏன் இழுத்து மூடனும்?” கேலி சிரிப்புடன் கேட்க,

“உங்க சொத்து முழுவதும் அவன் காலடியில் கொட்டினாலும் அவன் உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டான் பவானி. அப்படியே பண்ணிக்கிட்டாலும் உங்களை மதிக்க மாட்டான். உங்க கூட நல்லபடியா வாழணும்னு நினைக்கிறவன் கெடுக்க நினைக்க மாட்டான். புரிஞ்சுக்கோங்க…”

“நல்லது உன் அட்வைசுக்கு நன்றி. சீக்கிரமே பத்திரிகை கொடுக்கிறேன். கல்யாண வேலையெல்லாம் நீ தான் முன்ன நின்னு நடத்தணும்.” சென்றுவிட்டாள்.

“போடி லூசு அவன் உன்ன கழட்டிவிடும் போது தெரியும்… படித்த முட்டாள்!” முணுமுணுக்கத் தான் முடிந்தது பிரபாவால்.

அடுத்து என்னவாகும் தோழமைகளே?

உன்மத்தமாகலாம்…

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s