அத்தியாயம் #1


“மதுரா ட்ரேடர்ஸ்” எனும் நியான் எழுத்துக்கள் பளபளக்க நகரின் மையத்தில் கம்பீரமாய் வீற்றிருந்தது அந்த கட்டிடம். அதன் வாயிலில் கறுத்த நிறமும் உழைத்து உரமேறிய உடலும், வெள்ளந்தியான முகமுமாய் வேஷ்டி சட்டையும், பச்சை நிற தலைப்பாகையுமாய், இருபதில் இருந்து அறுபது வயது வரை மதிக்கத்தக்க சிலர் நின்று கொண்டிருந்தனர்.
தஞ்சையை சுற்றியுள்ள கிராமத்து விவசாயிகளான அவர்கள் அனைவரும், இன்று தங்கள் வேலைகளை விட்டு பட்டிணம் வர ஒரே காரணம் இந்த மதுரா ட்ரேடர்ஸ் தான்.
ஆம், இந்த நிறுவனம் வடநாட்டில் ஏற்றுமதி இறக்குமதியில் கொடிகட்டிப் பறக்கும் கணபதி ட்ரேடர்ஸின் சார்பு நிறுவனம். முதல்முறையாக கணபதி ட்ரேடர்ஸ் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களையும் ஏற்றுமதி செய்ய விரும்பியதால் தான் இங்கு மதுரா ட்ரேடர்ஸ் உதயமானது.
அந்த வியாபாரம் சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கே இவ்விவசாயிகளை இங்கு அழைத்திருக்கிறார் அதன் நிறுவனர்.
கம்பெனி செலவிலேயே விவசாயிகளை அழைத்து வந்து நல்ல ஹோட்டலில் ரூம் எடுத்து தங்க வைத்து அவர்களது தேவைகளை சிறப்பாக கவனித்து இப்பொழுது தனியார் பேருந்து ஒன்றை அமர்த்தி அனைவரையும் அலுவலகம் அழைத்து வந்திருப்பதை வைத்து அவ்விவசாயிகள் தங்களுக்குள் இருவிதமாய் பேசிக் கொண்டார்கள்.
“எவ்வளவு நல்லவிதமாய் நடந்து கொள்கிறார்கள்… நிச்சயம் நம் பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும்!” என சிலர் சொல்ல, வேறு சிலரோ,
“இப்படி ஓவரா கவனிக்கிறவங்களைத் தான் நம்பவே கூடாது. இவனுங்க நம்மை ஏய்ச்சு பறிக்க திட்டம் போடுறானுக…” என விழிப்பாய் பேச, அந்நேரம் அங்கே வந்த ஒரு பெண்,
“எல்லோரும் உள்ள வாங்க! மீட்டிங் ஆரம்பிக்கப் போகுது” என அழைத்துச் சென்றாள்.
குளிரூட்டப்பட்ட நீண்ட அறை… அதில் நீள்வட்ட மேசை. அதனைச் சுற்றி அமர்வதற்கான இருக்கைகள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் தண்ணீர் பாட்டில் குறிப்பெடுத்துக் கொள்ள சிறிய நோட் மற்றும் பேனாவும் வைக்கப்பட்டிருந்தது.
கண்களுக்கு குளிர்ச்சியான நிறத்தில் திரைச்சீலைகள் அதற்கு பொருத்தமான வண்ணத்தில் சுற்றுச்சுவர் என பார்ப்பதற்கே அழகாக மட்டுமல்ல ஆளுமையை பறைசாற்றும் இடமாகவும் இருந்தது அந்த அறை.
“எல்லோரும் உட்காருங்க, மேடம் இப்போ வந்துடுவாங்க…” என அவர்களை அழைத்து வந்த பெண் வெளிநடப்பு செய்ய,
“இன்னும் எத்தனை மேடம் வருவாங்களோ…? நாம எப்போ தான் முதலாளியை பார்க்கிறதோ தெரியலை…” என ஒருவர் அலுப்புடன் சொல்ல,
“ஐயா, நீங்க விஷயம் தெரியாம பேசுறீங்க… அவ்வளவு சுலபமா நாம முதலாளியை பார்த்துட முடியாது. பொதுவா நமக்கும் இவங்களுக்கும் நடுவே தரகு வேலை பார்க்கிறவங்க தான் எப்போதும் இந்த மீட்டிங்கெல்லாம் போவாங்க, மொத தடவையா இவுக தான் நம்மகிட்டயே நேரடியா பேசணும்னு இதை ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அது வேற ஏதும் வில்லங்கமா இருக்குமான்னு சந்தேகமா இருக்கு” என அங்கிருந்தவர்களில் இளமையானவன் சொல்ல,
“என்ன வில்லங்கமா இருந்தாலும் நமக்கு கட்டுப்படியானா இவுககிட்ட வியாபாரம் பண்ணுவோம். இல்ல நமக்கு சரிப்பட்டு வராதுன்னு நடையை கட்டிட வேண்டியது தான்” என பெரியவர் பேச,
அங்கிருக்கும் ஒவ்வொருவரின் பேச்சையும், நடவடிக்கையையும் தனது அறையில் இருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தாள் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான மதுரா.
கம்பீரமான தோற்றமும், மிடுக்குமாய் இருக்கும் அவளை பார்ப்பவர்கள் அனைவரும் தானாகவே மரியாதையுடன் நடந்துகொள்வர். 26 வயது தான் என்றாலும் உடை, சிகை அலங்காரம், அழுத்தமான முக பாவனை, கூரிய பார்வையென அத்தனையும் எதிராளியை வீழ்த்தும்படி இருப்பது தான் இதற்கான முக்கிய காரணம்.
விவசாயிகள் தங்களுக்குள் விவாதித்ததை வைத்தே தான் என்ன பேச வேண்டும்? எப்படி பேசினால் இவர்களுடன் வியாபார உறவை வைத்துக்கொள்ள முடியும்? என ஒவ்வொரு விஷயத்தையும் துல்லியமாக கணித்தவள் மீட்டிங் ரூமிற்கு செல்லத் தயாரானாள்.
இது ஒரு சிறப்பான வியாபார உத்தி. எதிராளியை பேசவிட்டு அடித்து வீழ்த்துவது. ஆம்! தொழில் சாம்ராஜ்யத்தின் ஜாம்பவான்களுள் முக்கியமான ஒருவனிடம் அவள் பயின்ற பாடம்.
நிச்சயம் தனது இந்த உத்தி வெற்றியை ஈட்டித் தரும் எனும் நம்பிக்கையுடன் நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் வந்தவளைக் கண்டு அனைவரும் எழுந்து நின்றனர்.
“வணக்கம்… நான் மதுரா. இந்த நிறுவனத்தோட தலைமை நிர்வாகி… உட்காருங்க” என கரம் கூப்ப,
உயர்த்தி போட்ட கொண்டையும், நெற்றியில் சிறு திலகமும், காதில் கண்ணுக்கே தெரியாதபடி தோடும், ஒரு கரத்தில் மெல்லிய கைக்கடிகாரமும் மறுகரத்தில் ஒற்றை தங்க வளையலுமாய் காலர் வைத்த ஜாக்கெட் அணிந்து கைத்தறி புடவையில் கம்பீரமாய் காட்சி கொடுக்கும் முதலாளியம்மாவை எதிர்பாராததால் அங்கிருந்தவர்களின் பார்வையில் பெண் பிள்ளையா இவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு முதலாளி?! எனும் ஆச்சரியமும், வியப்பும் விரவியிருந்தது.
“முதல்ல என்னோட அழைப்பை ஏற்று நீங்க எல்லோரும் இங்க வந்ததுக்கு நன்றி…” என ஒவ்வொருவரிடமும் தன் பார்வையை செலுத்த, அந்த கிராமத்துவாசிகளுக்கு சிறு கூச்சம் உண்டாக,
“வியாபாரத்துக்காக தானம்மா கூப்பிட்டீங்க, எதுக்கு நன்றியெல்லாம்…? எங்களை ஏன் வரச் சொன்னீங்கன்னு தெரிஞ்சா நல்லாயிருக்கும்…” என பெரியவர் ஒருவர் விஷயத்துக்கு வர,
“நல்லதுங்கய்யா… அன்றாட தேவைகளான காய்கறிகள், பழங்கள், பூ இவற்றையெல்லாம் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி பண்றது தான் எங்க கம்பெனியோட வேலை.
உற்பத்தியாளர்களான உங்ககிட்ட இருந்து அதையெல்லாம் நேரடியா கொள்முதல் பண்ணி விமானம் மூலமா ஏற்றுமதி பண்ணப் போறோம். கடின உழைப்புக்கு ஏற்றவிதமா உங்க பொருட்களுக்கு நல்ல விலை கொடுப்போம். பொருளோட தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் இருக்கும்.
பொதுவா உள்ளூர் மார்க்கெட் ரேட்டை விட அதிகமாகவே கொடுப்போம். உங்க பொருட்களை உங்களோட இடத்துக்கே வந்து எடுத்துக்கிட்டு போவோம். ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, போக்குவரத்து செலவு இதெல்லாம் உங்களுக்கு கிடையாது” மதுராவின் பேச்சில் கடைசி பகுதி அவர்களை வெகுவாகக் கவர அகமும், முகமும் மலர…
“அம்மா… பொதுவா பொருள் நிர்வாகத்தோட கைக்கு வந்து சேர்ற வரை ஆகுற செலவெல்லாம் எங்களோடதா தான் இருக்கும். நீங்க சொல்றது ரொம்பவே புதுசா இருக்கு. நம்பலாங்களா? இல்ல வேறெதுவும் கண்டிசன் போடுவீங்களா?” வெள்ளந்தியான மனிதரின் வெளிப்படையான பேச்சில் இதழோரம் புன்னகை அரும்ப,
“நம்பலாம் ஐயா! வெளிநாட்டு ஏற்றுமதிங்கிறதால நாங்களே நேரடியா வந்து கொள்முதல் பண்ணப் போறோம். சின்ன அளவிலான காலதாமதம் கூட நமக்கு பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணிடும். காலையில தோட்டத்தில் இருந்து நீங்க பறிச்சதும் எங்க வண்டி பொருட்களை ஏற்ற வந்திடும். அங்கேயே எடைபோட்டு காசு செட்டில் பண்ணிடுவோம்.
மதிய பிளைட்டில் சென்னை வரும். அங்கிருந்தபடியே அடுத்த ஒரு மணி நேரத்தில் மும்பைக்கு அனுப்பிடுவோம். மற்ற வேலைகளை அவங்க பார்த்துப்பாங்க. உங்களுக்கு ஏதும் சந்தேகமிருந்தா கேளுங்க…” என பெரிதாய் விளக்கமளித்து கேள்விக்காக காத்திருக்க,
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, தனியாக கலந்தாலோசிக்க அவகாசம் கொடுக்க எண்ணியவளாய் அவர்களுக்கு காபியும், வடையும் கொடுக்கும்படி தனது காரியதரிசிக்கு உத்தரவிட்டு,
“சாப்பிடுங்க, இதோ வந்துடுறேன்” என விலகிச் சென்றாள்.
தங்கள் மனநிலை புரிந்து பேச அவகாசம் கொடுத்து சென்றவளின் மீது அவ்விவசாயிகளுக்கு பெரும் மதிப்பு உண்டானது.
ஊருக்கே உணவளிக்கும் பயிர் தொழில் செய்தாலும் அதை விற்று பணமாக்குவதற்குள் படாத பாடுபட வேண்டி இருக்கும் நிலையில் இவளது கை மேல் காசு எனும் திட்டம் அவர்களை வெகுவாகக் கவர அனைவரும் கூடிப் பேசி, சாதகபாதகங்களை ஆராய்ந்து தங்கள் பொருட்களை மதுராவிடமே விற்கலாம் எனும் முடிவுக்கு வந்துவிட்டனர். அதை பகிர்ந்து கொள்ளவும் செய்தனர்.
“உங்களோட ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. உங்க பொருட்களை எங்களுக்கு மட்டுமே விற்பனை செய்வீங்கன்னு ஒப்புதல் கொடுத்து இந்த பத்திரத்தை படிச்சு பார்த்துட்டு கையெழுத்துப் போட்டு எங்க நிறுவனத்தோட கைகோர்த்துக்கோங்க.
உங்களுக்குள்ள ஒருவரை தலைவரா தேர்ந்தெடுத்து உங்கள் குறைகளை அவர் மூலமா என் பார்வைக்கு கொண்டு வரலாம். மூன்று மாசத்துக்கு ஒருமுறை இப்படி நமக்குள்ள ஒரு சந்திப்பை உருவாக்குறேன்.
அப்போ நீங்க எல்லோருமே நேரடியா உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கலாம். மற்றபடி அவசரம்னா யார் வேணும்னாலும், எப்போ வேணும்னாலும் இந்த நம்பருக்கு அழைக்கலாம்” என தொலைபேசி எண்ணை பகிர்ந்து, கையெழுத்தையும் வாங்கிக்கொண்டு,
“உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்” என கரம் கூப்பி அனுப்பி வைத்தவள் அதோடு நில்லாமல் அதன் தொடர்பான மற்ற வேலைகளை திட்டமிடத் தொடங்கினாள்.
ஹோட்டல் பார்க் ராயல் பெயருக்கு ஏற்றது போல் ராயலான ஐந்து நட்சத்திர ஹோட்டல். அதன் கான்ஃபிரன்ஸ் ஹால்களில் ஒன்று கடல்வழி வாணிபம் செய்பவர்களின் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தது.
அதே ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மல்லாந்து படுத்தபடி மிதந்து கொண்டிருந்தான் “ஷார்க் ஷிப்பிங் கம்பெனி”-யின் ஏகபோக உரிமையாளன் மனுபரதன்.
திரண்ட புஜம், விரிந்த மார்பு, ஒட்டிய வயிறு, நீண்ட கால்கள் என மிதப்பவனை சுற்றி நீந்திக் கொண்டிருந்த பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்தனர்.
குறுந்தாடியும், மீசையும் அவனது ஆண்மையை கூட்டிக் காட்ட சிலருக்கு லேசாய் பொறாமை கூட உண்டானது. தன்னை சுற்றி நடப்பவற்றில் கவனம் கொள்ளாமல் கண்களை மூடியபடி ஆனந்த சயணத்தில் இருந்தவன்,
“பாஸ்…” என்னும் குரல் கேட்டே இயல்புக்கு வந்தான்.
தனது பெர்சனல் அசிஸ்டென்ட் குணா தன்னிடம் ஏதோ கேட்க வந்திருப்பதை அறிந்து மிதந்து கொண்டிருந்தவன் சட்டென புரண்டு, நீச்சல் குளத்தின் படி அருகே வர, அவனது லாவகமான நீச்சலை கண்ட மேல்நாட்டு பெண்கள் சிலர்,
“வாவ்! பென்டாஸ்டிக்!” என வியக்க சிறு புன்னகையுடன் குணாவை பார்த்து,
“எஸ், டெல் மீ…” என்றதும்
“பாஸ், நேற்று பெய்த மழையில் புதுசா ஒரு காளான் முளைச்சிருக்கு.” என முதலாளியின் முகம் பார்க்க,
“ம்ஹூம்…” சிறுதலையசைப்பும் புருவ ஏற்றமுமாய்,
“ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா…”
என சீழ்கை மூலம் பாடிக் கொண்டிருக்க,
தான் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து தன் முதலாளியை இவ்வளவு குதூகலமாய் பார்த்திராத குணா வாய்பிளக்காத குறையாய் அதிர்ந்து நிற்க, ஏன் நிறுத்திவிட்டாய் சொல் என்பது போல் கண்களால் பேசியவன் தன் பாடலை நிறுத்தவே இல்லை.
“நம்ம போட்டியாளர் கணபதி ட்ரேடர்ஸோட கையாள் தான் இந்த புது கம்பெனி. காய்கறி, பழம், பூ இதையெல்லாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தான் இந்த ஏற்பாடாம் பாஸ்.
இதுல முக்கியமான விஷயம் என்னென்னா இவங்களே விவசாயிகள்கிட்ட நேரடியா போய் கொள்முதல் பண்ணுவாங்களாம்!” என்றதை கேட்டதும் மெச்சுதலாய் அவன் புருவம் ஏறி இறங்கியது.
“நிச்சயம் இவங்க நமக்கு குடைச்சல் கொடுப்பாங்க. ஆரம்பிக்கும் போதே அடிச்சு வீழ்த்துறது தான் சுலபம்னு சொல்வீங்களே பாஸ்… வழக்கம் போல துவம்சம் பண்ணிடுவோமா?” என்றவன் முதலாளியின் பதிலுக்காக காத்திருக்க,
“கூல் குணா. நமக்கு போட்டியா உருவெடுக்கறவங்களை தான் அடிச்சு வீழ்த்தணும். என்னோட போட்டி போடுறதுக்கே சிறப்பான தகுதி வேணும். அந்த மஷ்ரூம் அவ்வளவுக்கெல்லாம் ஒர்த் இல்ல.
மீட்டிங் ஏற்பாடெல்லாம் சிறப்பா இருக்கு தானே? இன்னும் பத்து நிமிஷத்தில் நான் அங்க இருப்பேன்.” என்றதும் இதற்கு மேல் நமக்கு இங்கு வேலை இல்லை என முதலாளிக்கு ஒப்புதலாய் தலையசைத்து நகர்ந்தவனை அழைத்து,
“ஒரு பொக்கே அனுப்பிடு.” என்றதும்
“யாருக்கு பாஸ்?” புரிந்தும் புரியாமலும் கேட்க,
“மது… மதுரா டிரேடர்ஸ்க்கு… நம்ம கம்பெனி சார்பா வாழ்த்து சொல்லி பொக்கே அனுப்பு. கோ” என விரட்ட,
“நாம கம்பெனி பேரை சொல்லவே இல்லையே… பாஸ் எப்படி மதுரா டிரேடர்ஸ்ன்னு கரெக்ட்டா சொல்றார்?” என அடுத்த கேள்வி தலை தூக்கினாலும் அவனுக்கு விடை தான் தெரியவில்லை.
மதுரா யார்கிட்ட இருந்து வியாபார உத்தியை காப்பியடிச்சிருப்பா? இல்ல இல்ல கத்துக்கிட்டிருப்பான்னு நினைக்கிறீங்க தோழமைகளே? பகிர்ந்துக்கோங்க… காத்திருக்கோம்.
உயிராகலாம்…
மனுகிட்ட இருந்து காப்பி அடிச்சிருப்பா மது😀
அட்டகாசமான ஆரம்பம் 😀💐
ஹீரோ,ஹீரோயின் என்றி சூப்பர்😍👍
விவசாயிகளுக்கும் லாபம் வர மாறி யோசித்து செயல்படுறாளே மது 😍
ம்.. எதிராளியை பேச விட்டு அடித்து வீழ்த்தும் தந்திரமும் தெரியும்… கத்துக்குடுத்த நபர் ..மேலயும் தந்திரத்தை …பிரயோகிப்பாளோ ??? 😛
LikeLiked by 1 person
நன்றி பா. குருவுக்கே பாடம் சொல்வாளா? இல்ல ஊர் குருவி பருந்தாகாதுங்கிற மாதிரி பம்முவாளான்னு பார்க்கத் தானே போறீங்க?
LikeLike
Manubharathan
LikeLiked by 1 person
ha ha ha… arumai. thanks pa.
LikeLike
Nice Star
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike