உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!

அத்தியாயம் # 26

“காதல் சண்டையா? போயும் போயும் இந்த கருவாயனையா? நெவர்! எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு.” முகம் திருப்பிக் கொண்டவள் அந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

“போடி வெள்ளெலி! எனக்கும் தான் ஆள் இருக்கு!” அவன் சும்மா தான் சொல்லி வைத்தான். கோபம் கண்களை மறைக்க நச்சென அவன் காலை மிதித்துவிட்டாள்.

“ஸ்… அம்மா!” சத்தமில்லாமல் அலறியவன் ஹீல்ஸ் குத்தியதில் துடித்துப் போனான். ஒரு நொடி பாவமாக இருந்தாலும் சட்டென இயல்புக்குத் திரும்பியவள் வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு அருகே இருந்த பெண்மணி எழுந்துவிட,

“ஏய்! நகர்ந்து உட்கார்!”

“முடியாது!”

“அப்போ நான் உள்ளே போய் உட்காரவா?” வேறொருவன் கேட்க… உனக்கு இவனே தேவலாம் என்பது போல் முறைப்புடன் நகர்ந்து கொள்ள… பிரபா அமர்ந்துவிட்டான்.

“ஏன்டா என்ன வெள்லெலின்னு சொன்ன?”

“நீ ஏண்டி கருவாயன்னு சொன்ன?”

“போடா குரங்கு!”

“போடி குட்டிக்குரங்கு!” சொன்னவன் தன் காலை பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

“இந்த பயம் இருக்கட்டும்” சிரிப்புடன் சொன்னவள் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

களைப்பு, நல்ல உணவு, பஸ் பிரயாணம் தூங்கி வழிந்தாள் பவானி. தன் தோள் சாய்ந்து உறங்குபவளைக் கண்டவன்,

தொடுற வேலையெல்லாம் வச்சுக்காதன்னு குதிப்ப… இப்போ ஏன் என்னை தொடுற? முணுமுணுத்தவன், வாகாக தோள் சாய்த்துக் கொண்டான்.

‘ஏய் பார்பி! உனக்கும் எனக்கும் ஏணி வச்சாக் கூட எட்டாதுன்னு தெரியும்… இருந்தும் உன்னை பார்த்தாலே மனசு குளிர்ந்து போயிடுது. இன்று முழுக்க கூடவே இருந்து ஏன்டி என்னை இம்சிக்கிற?

இதுவரை எந்த பொண்ணுகிட்டயும் சலனப்பட்டதேயில்ல… நீ தான் விதிவிலக்கு. பார்பியை ஆசைதீர பார்க்கலாம்… நிரந்தரமா வச்சுக்க முடியாதுன்னு புத்திக்கு தெரியுது… மனசு தான் ஏத்துக்க மாட்டேங்குது.

இந்த ஒரு நாள் உனக்கு எப்படியோ? எனக்கு பொக்கிஷம். தேங்க்ஸ் டி பொம்மை!” பார்வையால் பருகிக் கொண்டே வந்தான். ஊர் வந்ததும் மெல்ல கன்னம் தட்டி எழுப்ப, அவள் பதறி விலக…

“பதறாத வனி, நான் தான் ஊர் வந்திடுச்சு. அம்மா அப்பாவும் தூங்குறாங்க… நான் எழுப்பிட்டு வரேன்.” விலகி சென்றுவிட்டான்.

“வள்ளி, நீ பிரபாவோட வீட்டுக்குப் போ நான் பவானிம்மாவை வீட்டில் விட்டுட்டு வரேன்.”

“ஏன் அங்கிள் என்னை உங்க வீட்டுக்கு வரச்சொல்ல மாட்டீங்களா?” அன்றய நாளை இன்னும் நீட்டிக்க விரும்பினாள் பவானி.

அவர்களது அன்பையும் வாஞ்சையையும் சட்டென விட்டு செல்ல மனமில்லாதவளாய்… இதுவரை ஒருநாளும் இப்படியெல்லாம் ஏங்கியதில்லை இன்று எல்லாம் தலைகீழ்…

அம்மா, அப்பா, ஒரே பையன் அழகான குடும்பம். ஏக்கமும், பிரபாவின் மீது பொறாமையும் தோன்ற, பதில் சொல்லாமல் நின்ற முருகனை ஒருநொடி வெறித்தவள்,

“நான் கிளம்பறேன். பை அங்கிள்! வரேன் ஆண்ட்டி!!” கையாட்டி விடைபெற, தனக்குள் இருந்த ஏதோ ஒன்றை யாரோ பிய்த்து எறிவது போல் பெரும் வேதனை உண்டாக சிலையாய் நின்றவனிடம்,

“பிரபா… ஆட்டோ பிடி!” ஆணையிட்ட அன்னை, பவானியின் கையை இறுகப் பற்றியிருந்தார்.

“தப்பா எடுத்துக்காதீங்க பவானிம்மா… எங்க வீட்டில் உங்களுக்கு வசதி பத்தாதுன்னு தான் இந்த மனுஷன் கூப்பிடத் தயங்கினார்… வாங்க வீட்டுக்கே போகலாம்!”

அந்தத் தாய்க்குப் புரிந்தது அவளது மனநிலை. சட்டென சரி செய்துவிட்டார். போன உயிர் மீண்டது போல் இருந்தது பிரபாவுக்கு.

“வேண்டாம் பிரபா, விலகியே இரு… நடக்க வாய்ப்பே இல்லைனு தெரிஞ்சும் ஏங்காதே!” மனதிற்கு கடிவாளமிட்டவனாய் ஆட்டோவின் முன்புறம் அமர்ந்து கொள்ள, மற்ற மூவரும் பின்னே அமர்ந்து கொண்டனர்.

சின்ன வயதில் இருந்து பார்த்து பழகிய தனது காரோட்டியிடம் எப்போதுமே தனி பாசம் உண்டு பவானிக்கு. இந்த முருகன் அங்கிள் காரோட்டி மட்டுமல்ல, சிறந்த பாதுகாவலன், நல்ல பேச்சு துணை என இருந்ததால் இவர்கள் இருவருக்கும் சொல்லப்படாத தோழமை இழையோடும். அந்த முதலாளியம்மா தன் இல்லம் வந்ததில் பெரும் மகிழ்ச்சி அவருக்கு.

வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். சிறிய ஹால், இரண்டு பிளாஸ்டிக் சேர்கள், குட்டி டிவி கொஞ்சம் கோப்பைகளும், ஷீல்டுகளும் என பிரபாவின் பரிசுப் பொருட்கள், அடுத்து கிட்சன்…

பொருட்கள் எல்லாம் அதனதன் இடத்தில் அழகாக இருந்தது. அழகுப் பொருட்கள் கொண்டு அழகு படுத்தப்படாமலேயே இயற்கையான அழகுடன் இருந்ததே அவளை மிகவும் கவர,

“வீடு அழகா இருக்கு ஆன்ட்டி!” வெட்கம் வந்துவிட்டது வள்ளிக்கு.

ஒற்றை அ றை பார்த்ததுமே பிரபா தான் உபயோகப்படுத்துகிறான் என்பது தெரிந்து போனது. ஒற்றை கட்டில் மெத்தை குட்டி அலமாரி அதன் மேல் இரண்டு பெட்டிகள் சிறியதாய் ஒரு மேசையும் நாற்காலியும் படிக்க உபயோகப்படுத்துவான் போல…

முகம் பார்க்கும் கண்ணாடி, அதனருகே சிறிய ஷெல்ஃப் அதில் எண்ணெய், சீப்பு, ரோலான் பெர்ஃபியூம் பாட்டில் அவ்வளவு தான். தன் ட்ரெசிங் டேபிளை நினைத்து சிரிப்பு வந்தது. இவள் அறை அளவே இருந்தது அவர்கள் மொத்த வீடும்.

மீண்டும் வள்ளியின் கையால் ஒரு காபி. பவானிக்கு மனம் நிறைந்த உணர்வு தோன்றிவிட்டது. அதற்குள் பிரபாவும் ஆதியின் பைக்கை வாங்கி வந்திருந்தான். அலைபாய்ந்த மனதை முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வந்தவனாய்,

“வனிம்மா போலாமா?”

“பை அங்கிள், தேங்க்ஸ் ஆண்ட்டி!” என்றபடி வள்ளியை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு விடைபெற்றவள் முகம் தான் சிரித்ததே தவிர மனம் கனத்துப் போனது. தனக்கு அன்னை இல்லை என்ற வருத்தம் ரொம்பவும் வதைக்க, அமைதியாகவே பயணித்தாள்.

வீட்டில் இறக்கிவிட்டு கிளம்பியவனை,

“பிரபா! ஒரு நிமிஷம்!” அவள் குரல் தடுத்து நிறுத்த, என்ன என்பது போல் புருவம் ஏற்றி அவள் முகம் பார்த்தவன் கரம் பிடித்து, கற்றைநோட்டுகளை திணித்தாள்.

“எதுக்கு இது?” இறுகிய முகமும், அனல் கக்கும் விழிகளும், கோபத்தை உள்ளடக்கிய குரலுமாய் கேட்க,

“இன்னைக்கு காலையிலிருந்து சந்தோஷமா இருக்கேன்னு சொல்லமாட்டேன், நிறைய ஏக்கம், கொஞ்சம் ஏமாற்றம், உன் மேல் பயங்கர பொறாமை, கோபம் எல்லாம் கலந்த ஒரு உணர்வு, சுகமான வலியாய்…பட் பிடித்திருந்தது. முதன் முதலா நிறைவான குடும்பச் சூழலை முழுசா உணர்ந்தேன். நன்றி!”

“பவானி! எல்லாத்தையும் பணத்தால் வாங்கிட முடியாது. அன்பு, பாசம், நேசம் இதுக்கெல்லாம் விலை வைக்க முடியாது, வைக்கவும் கூடாது…மனித உணர்வுகளை மதிக்கப் பழகு… உனக்கெப்படியோ, எங்களுக்கு இந்த நாள் ரொம்ப விசேஷமானது.

என் பெற்றோர் இன்னும் பத்து நாளைக்கு வாய் வலிக்க, வலிக்க உன்னைப் பற்றி தான் பேசிட்டு இருப்பாங்க. இந்த பணத்தை கொண்டுபோய் கொடுத்தா மிரண்டு போயிடுவாங்க.

உன் மேல் அதிக மதிப்பு வச்சிருக்காங்க பவானி. உன் குணம் அவங்களுக்கு தெரியாமலேயே போகட்டும். இதை கொடுத்து அதை சிதைக்க விரும்பல!” அவள் கையில் கூட கொடுக்க விரும்பாதவனாய் நின்று கொண்டிருந்த காரின் மீது வைத்து விட்டுச் சென்றான்.

ஏனோ அவனது பவானி எனும் அழைப்பு கொடுத்த வேதனைக்கு முன் இந்த புறக்கணிப்பு ஒன்றுமில்லாததாய் தோன்றியது.

“தப்பு பண்ணிட்டேன்! இவங்கெல்லாம் யார்? ஏன் இவங்க கூட போக னும்? என்னவோ நினைக்க என்ன என்னவோ நடந்துடுச்சு…வேதனை தான் மிச்சம்” அவள் தனக்குள் மறுகிக் கொண்டிருக்க, அந்நேரம் அவளது கைபேசி அலற,

“பிரபாவோ? ஹர்ட் பண்ணிட்டோம்னு சாரி சொல்ல கூப்பிடறானோ? ஆவலாய் பார்க்க, (நீ ஏன் அவனையே நினைக்கிற?)

“அச்சு” என ஒளிர்ந்தது. முதல் முறையாக விட்டேற்றியாக,

“சொல்லு அர்ஜுன்”

“ஹாய் பேபி! மீட் பண்ணலாமா?” குழைந்தது அவன் குரல்.

“ஐம் நாட் இன் எ குட் மூட்… இன்னொரு நாள் பார்க்கலாம்”

“வொய் பேபி? மூட் சரியில்லன்னா வா, ‘நிர்வாணா’ போகலாம்”

போகலாம் தான். மனம் கொஞ்சம் சமனப்படும் எனத் தோன்றிய போதும்,

“நான் எங்கேயும் வரல அர்ஜுன்… என்னை இரிடேட் பண்ணாதே!” பட்டென வைத்துவிட்டாள்.

“ராங்கி!” திட்டியபடியே அவனும் வைத்து விட்டான்.

பிரபாவுக்கு மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. பவானி அடங்கா குழந்தை, கொஞ்சம் திமிர் கொண்ட சண்டி ராணி இப்படித்தான் நினைத்திருந்தான். ஆனால் தன் நினைப்பு முற்றிலும் வேறுபட்டுப் போனதை அவனால் ஏற்கவே முடியவில்லை.

ஏண்டி இப்படி செய்தாய், வலிக்குதடீ… இந்த பார்பி, பிரபாவுக்கு வேண்டாம். தூரத்தில் பார்த்தத்தோடே இருந்திருக்கலாம். உன்னைப் பற்றி தெரியாமலேயே இருந்திருக்கும். பணம் தான் பிரதானமா? பொய்த்துப் போனாயே… எனக்கும் உனக்கும் செட்டாகாது. இனி கற்பனையில் கூட நீ எனக்கு வேண்டாம். முற்றிலுமாய் முறித்துக் கொண்டான்.

உன்னை சந்திச்ச ஒவ்வொரு முறையும் என் நிம்மதி காணாமல் போயிடுது. உன்னால் இன்று அர்ஜுனிடம் கோபப்பட்டுட்டேன். உன்னை நினைக்கக் கூட விரும்பலை. போ… அவளும் விலகினாள்.

பிரபா சொன்னது போல், அவனது பெற்றோர் பவானியை பற்றி தான் பேசினார்கள்… பேசினார்கள்… போதும்! போதும்!! என இவன் கதரும் வரை பேசினார்கள். பெற்றோர் தவறே செய்தாலும் அவர்களிடம் கோபம் கொள்ளக் கூடாது என்பதை கொள்கையாக வைத்துக் கொண்டவனுக்கே அதை மீறிவிடுவோமோ என்னும் பயம் வந்துவிட…

“அப்பா, முதலாளி அடுத்த வாரத்தில் நல்ல நாள் பார்த்து வேளையில் சேரச் சொல்லி இருக்கார்.” அவன் எண்ணியது போல் இது கொஞ்சம் கைகொடுத்தது. நல்ல நாள்… நேரமெல்லாம் பார்த்தவர் மறுபடியும் வேறுமாதிரி ஆரம்பித்துவிட்டார்.

“பிரபா, பவானிம்மா தான் உனக்கு முதலாளி… சின்ன பொண்ணு தானேன்னு நினைக்க கூடாது… மரியாதையா நடந்துக்கணும்… உன்வேளையில் கவனமா… யாரும் குறை செல்லாதபடி நடந்துக்கனும்…

பவானிம்மா ரொம்ப நல்லவங்க. அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் செய்திடக் கூடாது.’ (முடியலை! நல்லவ…? சலங்கை கட்டிவிடுங்க!)

“அப்பா… அவ கம்பெனியோட சொந்தக்காரி அவ்வளவு தான். உங்கள மாதிரி எனக்கும் ஐயா தான் முதலாளி.”

“பிரபா… இப்போ தானே சொன்னேன் மரியாதையில்லாம பேசுற…?”

“மரியாதையை அவங்க நடத்துகிற விதம் பார்த்து நாமே கொடுக்கணும்பா…” அலுப்பாக வந்தது.

“பவானிம்மா தப்பாவே நடந்துக்கிட்டாலும் நீ சரியாய் தான் நடக்கனும்…அவங்க என்ன தப்பு செய்தாலும் நான் பவானிம்மாவை தப்பு சொல்லமாட்டேன். அவங்களுக்கு நல்லது, கெட்டது சொல்லிக் கொடுத்து வளர்க்க ஆளில்லை பிரபா.

முதலாளியம்மா (பவானியின் அம்மா) பவானிம்மா பிறந்ததும் இறந்துட்டாங்க. ஐயா அம்மாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க… அம்மாவோட இழப்பில் இருந்து மீண்டு வர வருஷக் கணக்கானது பிரபா.

பாவம், பச்சபுள்ளை வீடு முழுக்க வேலைகாரங்க இருந்தாலும் கவனிக்க ஆளில்லாமல் கேட்பாரற்று அழும். உனக்கும், பவானிமாக்கும் ஆறேழு மாசங்கள் தான் வித்தியாசம் இருக்கும். நீ அழுது நான் பார்த்ததே இல்லை.

உன் அம்மா நீ சிணுங்கும் போதே உன் தேவைகளை பார்த்துப் பார்த்து செஞ்சிடுவா.. காரோட்டி, வீட்டுக்குள்ள போக முடியாது… அந்த குழந்தையோட அழுகையை கேட்கவே முடியாது மனசு பதறும்.

பத்து மாசப்புள்ளையா இருக்கலாம், பால் பாட்டிலை வாயில் வச்சுக்கிட்டு தத்தி தத்தி நடந்து வரும்… அதை சாய்ச்சு குடிக்கணும்னு தெரியாது. மடியில் படுக்கவச்சு கொடுக்க யாருக்கும் அன்போ…அக்கறையோ அங்கு கிடையாது.

பயங்கர பசி போலும் அத்தனை படியையும் கடந்து காருக்கு பக்கத்தில் இருந்த என்கிட்ட வந்துச்சு… ரெண்டு பல்லு தான் இருக்கும் அதில் பாட்டில் ரப்பரை பிடிச்சிருக்கு என்னை பார்த்ததும் சிரிக்க, பாட்டில் கீழே விழிந்திடுச்சு… அன்று தான், என் பக்கத்தில் உட்கார வச்சு பாட்டிலை சாச்சுக் குடிக்க கத்துக் கொடுத்தேன்” சொல்லும் போதே கண்கள் கலங்கிவிட்டது முருகனுக்கு.

“பவானிம்மா அழகு மட்டுமில்ல அறிவும் கூட… அப்புறமெல்லாம் அவங்களே சமத்தா குடிக்க பழகிட்டாங்க. எனக்கு தான் மனசு கேட்காமல் எல்லாத்தையும் ஐயா கிட்ட சொல்லிட்டேன். ஐயா அவங்க அம்மாவை ஊரில் இருந்து கூட்டிவந்து இருக்க வச்சாங்க…

பவானிம்மா அச்சு அசல் முதலாளியம்மா போலவே இருப்பாங்க… பெரியம்மாவுக்கு பவானிமாவை பிடிக்காது. பாவம் ஏதாவது திட்டிகிட்டே இருப்பாங்க… அந்த குழந்தைக்கு ஒன்னும் புரியாது.

தன்னை யாரும் கவனிக்க மாட்டாங்களான்னு ஏங்கி, ஏங்கி ஒருகட்டத்தில் நீங்க யாருமே என்னை பார்த்துக்க வேண்டாம்கிற மனநிலைக்கு வந்துட்டாங்க. ஐயா உட்பட அந்த வீட்ல இருக்க யார்கிட்டயும் சுமூகமா பேசமாட்டாங்க பவானிம்மா.

ஆனால் என்கிட்ட எல்லா கதையும் சொல்லுவாங்க. பள்ளிக்கூடத்து கதை, கூட்டாளிகளோட சண்டை இப்படி நிறைய பேசுவாங்க… எட்டாவது படிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஐயா வெளிநாட்டுக்கு போயிருந்தாங்க…

கணக்குப்புள்ளை வந்து முருகா பவானிம்மா உன்னோட பேசனுமாம், கூப்பிடுறாங்கன்னு சொன்னார். இப்போதான் பள்ளிக் கூட்டத்துல விட்டுட்டு வந்தோம்… என்னாச்சோன்னு பதறி போய் போனை எடுத்தா,

‘முருகன் அங்கிள் நான் பெரிய பெண்ணாயிட்டேனாம்… வீட்டுக்கு போகசொல்றாங்க! வந்து கூட்டி போறிங்களான்னு கேட்டாங்க… யோசிச்சு பாரு பிரபா… பாவப்பட்ட புள்ள.

என்ன இருந்து என்ன பண்ண? அம்மா இல்லன்னா ரொம்ப கஷ்டம்… பல வருஷத்துக்குப் பிறகு அழகர் கோவில்ல தான் பவானிம்மா கண்ணில் அந்த ஏக்கத்தை பார்த்தேன். வள்ளியையும், உன்னையும் மாறி மாறி பார்த்துக்கிட்டே இருந்தாங்க… கஷ்டமா இருந்துச்சு.

நம்மாள வேறெதுவும் பண்ண முடியாது. மேற்கொண்டு வருத்தப்படுத்தாமலாவது இருக்கனும்னு தான் சொல்றேன். பவானிம்மா காலேஜுக்கு போனதில் இருந்து, தானே கார் ஓட்டிக்கிட்டு போயிடுவாங்க.

நெருக்கம் குறைஞ்சிடுச்சுன்னு நினைச்சேன். இல்ல, நீங்க எப்போதுமே என் முருகன் அங்கிள் தான்னு சொல்லாம சொல்லிட்டாங்க.” மனபாரம் முழுவதும் இறக்கி வைத்ததில் அமைதியாக அமர்ந்துவிட்டார் முருகன்.

பிரபாவிற்கு தான் பெரும் பாரம் வந்து குடிகொண்டுவிட்டது.

சிவானந்தனே அலுவலகத்திற்கு வந்து பிரபாவை மற்ற ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

கடந்த ஒன்றரை வருடமாக பவானி தான் நிர்வாகம் பார்க்கிறாள் என்ற போதும், இந்த ஆறுமாதமாகத் தான் தொழில் வீழ்ச்சி. அதற்கான காரணம் தெரிந்தாலும், பிரபாவிடம் அதைச் சொல்லி மகளின் தரத்தை குறைக்க மனமற்றவராய் தவிர்த்துவிட்டார். இருந்தும் அவனுக்கு தன்னிச்சையாய் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கி சென்றார்.

அன்று மாலை பவானியிடம் இருந்து அழைப்பு,

“ஹாய் வனி!” குதூகலமாய் ஆரம்பிக்க,

‘பாருங்க பிரபாகரன், இப்போ நான் உங்க முதலாளி. நீங்க என்கிட்ட  கைகட்டி சம்பளம் வாங்குற சாதாரண தொழிலாளி! அதை நினைவுவச்சுக்கோங்க. கால் மி மேம்… மரியாதை ரொம்ப முக்கியம்.

கண்ட நேரத்தில் கால் பண்ற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. வேலை விஷயமா என்ன கேட்பதா இருந்தாலும் மெசேஜ் போடுங்க…பகலெல்லாம் எனக்கு காலேஜ் இருக்கும்.

ஈவினிங் ஏழுமணிக்கு மேல் பத்து மணிவரை என் பெர்சனல் ஸ்பேஸ் அதிலும் தொந்தரவு பண்ணாதீங்க. மத்தபடி எப்போ வேணா தொடர்பு கொள்ளலாம்” அவன் பதிலையெல்லாம் அவள் எதிர்பார்க்கவேயில்லை வைத்துவிட்டாள்.

தந்தையின் பேச்சால் பவானியின் பால் ரொம்பவும் இளகியிருந்தான் பிரபா. நறுக்கு தெரித்தது போல் பட்டென அவள் தன்னை அந்நியப்படுத்தியது மனதின் ஓரத்தில் வலியை உண்டாக்கியது.

முன்னைப்போல் வம்பளக்காமல் நல்ல தோழனாகவேனும் இருக்க முயற்சிக்க வேண்டும். நிச்சயம் இனியேனும் நல்லது கெட்டது பிரித்தறிய சொல்லிக் கொடுக்க வேண்டும் என என்னென்னவோ நினைத்திருந்தவனுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சில மணித்துளிகள் தேவைப்பட்டது.

உன்மத்தமாகலாம்…

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s