உன்மத்தம் உன்மேலாகிறேன்…அத்தியாயம் #25

விடிகாலை வேளையில் முருகனும், வள்ளியும் சாப்பாட்டுக் கூடை, மாற்று உடைகள் அடங்கிய பை மற்றும் தேங்காய் பழக்கூடை எல்லாவற்றோடும் மதுரையில் இருக்கும் அழகர் கோவிலுக்கு செல்வதற்காக தயாராகி வாசலில் வந்து நிற்க,

வேஷ்டியும், கருநீல நிற அரைக்கை சட்டையுமாய் வந்த பிரபா கதவைப் பூட்ட,

“ஏய்யா! அந்த வெள்ளை சட்டையை போடப்படாதா? இது கருப்பு மாதிரியில்ல இருக்கு? கோயிலுக்குப் போய்…”

“இது ஊதாம்மா, வெள்ளைச் சட்டை அங்க போடுறதுக்கு எடுத்து  வச்சுருக்கேன். சாமி கும்பிடத்தானே போறோம், பொண்ணு பார்க்க போறமாதிரி பில்ட் அப் பண்றீங்க…” செல்ல அலுப்பு ஏற்பட்டாலும், சிரிப்பும் வந்தது பிரபாவிற்கு. ஒரு வழியாக திருப்பத்தூரிலிருந்து பஸ்-சில் அழகர்கோவில் அடிவாரத்துக்கு வந்துவிட்டனர்.

“மேலே போய் தீர்த்தமாடிவிட்டு வருவோம்” என்ற வள்ளியின் கட்டளையை ஏற்று மூவரும் நடக்கத் தொடங்கினர். பாதி தூரம் கடந்துவிட்டிருந்தனர்.

எதிரே ஒரு இளம்பெண் இரண்டு கையிலும் பெரிய பிளாஸ்டிக் பைகளுடன் ஓடிவர, அவளைத் துரத்திக் கொண்டு, பத்து பனிரெண்டு குரங்குகள் கூட்டமாய் வர… கண் மண் தெரியாமல் ஓடிவந்தவள் பிரபாவின் மீது மோத,

நிலை தடுமாறியவன் இருவரும் கீழே விழாமல் இருக்க அவள் இடைபற்றி அணைத்தபடியே அவள் கையில் இருந்த பைகளை பறித்து வீச, குரங்குகள் அதை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டன. அவன் மார்பில் முகம் புதைத்திருந்தவள் வேக மூச்சுகளுடன் அவனை நிமிர்ந்து பார்க்க,

“ஏய் பார்பி!” என எண்ணியபடி ஆச்சர்யமாய் விழிவிரிக்க,

“இந்தக் கருவாயனா?” என நினைத்தவள், பட்டென விலகிக்கொண்டாள்.

“பவானிம்மா, நீங்க எங்கம்மா இங்க? சொல்லியிருந்தா நான் கூட்டி வந்திருப்பேனே?”

“பிரெண்ட்ஸ் கூட பிக்னிக் வந்தேன். ஸ்னேக்ஸ் பேகை பார்த்ததும் குரங்கெல்லாம் துரத்த ஆரம்பிச்சுடுச்சு அங்கிள்!” என்று தனது காரோட்டியிடம் விளக்கம் வைத்தவள், எங்கோ பார்வையை பதித்திருந்த பிரபாவின் மீது உக்கிர பார்வையை வீசினாள்.

“இந்த கருவாப்பயலுக்கு இவ்வளவு திமிர் ஆகாது. பார்க்கிறானா பாரு, இருடா! உன்னை…” அவள் கருவிக் கொண்டிருக்கும் போதே தோழிகள் வந்துவிட்டனர்.

“ஏய் பவானி! ஸ்னாக்ஸ் எல்லாத்தையும் உன் தம்பி, தங்கச்சிக்கு கொடுத்துட்டியா?” கலகலவென சிரித்த நாலு தோழிகளையும் முறைத்தவள்,

“ஆமாடி… தூக்கி போடுன்னு சொல்ல புத்தி இல்ல… இப்போ வந்து கேளுங்க!” கடுப்படித்தாள்.

“பவானிம்மா, மேலே தீர்த்தமாடிட்டீங்களா?”

“ஹிப் ஹாப், ஜாஸ் தெரியும். பரதம் ஆடுறது கூடத் தெரியும். அதென்ன ஆண்ட்டி தீர்த்தம் ஆடுறது?” அறியாக் குழந்தையாய் இமை தட்டி பேந்தப்பேந்த விழிக்க,

எவ்வளவு தான் சிரிப்பை அடக்க… பற்களால் உதடு அழுத்தினாலும் சிரிக்கும் கண்களும், விரிந்த உதடுகளும் பிரபாவின் சிரிப்பை அவளுக்குக் காட்டிக் கொடுத்தன.

‘என்னைப் பார்த்தா சிரிக்கிற… இரு…உன்னை கதறடிக்கிறேன்!’ மனதினுள் அவனை வறுத்தெடுத்தாள்.

“மேலே புனித தீர்த்தமெல்லாம் இருக்கும். இங்கு வந்தால் அதில் கண்டிப்பா குளிக்கணும். அதைத் தான் அப்படி சொல்றா.” முருகன் எடுத்துச் சொன்னார்.

“அச்சச்சோ… எனக்கு தெரியாதே!”

“அதனால் என்னம்மா? வாங்க… இப்போ போகலாம்!” வெள்ளந்தியாய் வள்ளி அம்மையார் சொல்ல…

“இல்ல ஆண்ட்டி… நான் வேற ட்ரெஸ்ஸெல்லாம் கொண்டு வரல…”

“கீழே கடை இருக்கும். நாம போய் வரிசையில் நிப்போம். பிரபா வாங்கிட்டு வருவான்.”

“ஐயோ! அம்மா, இவ புடவையெல்லாம் கட்ட மாட்டாளே… நான் எப்படி வாங்குவேன்?” மிரண்டு விழித்தானே தவிர மறுப்பு சொல்லவில்லை. அவனருகே வந்தவள்,

“நடந்து தான் போகணும், இல்ல பிரபா?” எள்ளல் வழிந்தது அவளிடம்.

“திமிர்?! உன் சைஸ் என்ன?” கேலி கூத்தாடியது அவனிடம்.

“ஏய்!” மென்குரலில் அவள் சீற,

“சுடிதார், மிடி, புடவை இது தான் இங்கெல்லாம் இருக்கும்… சைஸ் தெரியாமல் எப்படி வாங்குவது?” புருவம் உயர்த்தி வினவ, பல்லைக் கடித்தவள்,

“…….” என முணுமுணுக்க…

“கேக்கல…” மந்தகாச சிரிப்பு அவனிடம். சட்டென அவன் சட்டையில் இருந்த பேனாவை எடுத்தவள், அவன் உள்ளங்கையில் எழுத, அவளது தீண்டல்களை சற்றும் எதிர்பார்க்காதவன் திகைத்து விழித்தாலும் பெண்ணின் முதல் ஸ்பரிசம் என்னன்னவோ செய்தது.

அவளோ அதையெல்லாம் அறியாதவளாய் தன் பர்சில் இருந்து பணம் எடுக்க,

“பவானிம்மா… உள்ளே வைங்க. எங்ககிட்ட இருக்கு. பிரபா வாங்காத…!”என முருகன் மகனுக்கு ஆணையிட,

“வைங்க வனிம்மா… நீங்க எவ்வளவோ செஞ்சுருக்கீங்க, உங்களுக்கு ஒரு டிரஸ் வாங்கிக் கொடுக்க மாட்டோமா?” கனிவாகச் சொன்னவன், விலகி கீழே இறங்கத் தொடங்கிவிட்டான்.

வனிம்மா இதுவரை தான் கேட்டிராத அழைப்பு… இப்போது திகைப்பது அவள் முறையாயிற்று.

“ஏய் பவானி… திரும்ப மேலே போகப் போறியா?”

“ம்… இன்னைக்கு முருகன் அங்கிள் கூடத் தான் இருக்கப் போறேன். ஆபத்துன்னதும் என்னை கழட்டி விட்டுடீங்கள்ல… போங்கடி! உங்க கூட வரமுடியாது.”

“ஏய்! அப்போ நாங்க எப்படிப் போறது? நீ தானே இந்த பிளானை போட்ட…”

“நீங்க என் காரை எடுத்துட்டு போங்க, நான் முருகன் அங்கிள் கூட வருவேன்…” ஏனோ இந்த குடும்ப சூழலை அனுபவிக்க வேண்டும் என்ற வீம்பு வந்துவிட்டது பவானிக்கு.

“பவானிம்மா! நாங்க பஸ்ல வந்தோம்…” முருகன் பதற,

“அதனால் என்ன? என்னையும் கூட்டிப் போக மாட்டடீங்களா?”

மறுக்கவே முடியாமல் பாவம் போலும் கேட்க, தலையாட்டி வைத்தார் முருகன். தோழிகளை அனுப்பி வைத்தவள் வள்ளியின் கரம் பிடித்துக்கொண்டு நடக்கத் தொடங்கிவிட்டாள்.

மேலே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக இவர்கள் முறை வந்ததும், வள்ளியுடன் சென்று நீராடி விட்டு வர, பிரபா வந்த பாடாயில்லை. ஈர உடையுடன் வெடவெடத்துக் கொண்டிருக்க, பிரபாவின் துண்டை எடுத்து தலை துவட்டி தோளோடு போர்த்தி விட்டார் வள்ளி. (நீ அவனை நடக்க வெச்சா… அவன் உன்னை நடுங்கவைக்கிறான்!)

“இங்கேயே இருங்கம்மா, பிரபா இப்போ வந்துருவான். நான் சேலையை மாத்திட்டு வரேன்…” என சென்று விட்டார். பிரபாவும் வந்துவிட்டான்.

“இந்தா… மாத்திக்கோ!” எனத் துணிப்பையை அவளிடம் நீட்ட,

“இங்க… எப்படி?” அவள் முழிக்க,

“கஷ்டம் தான்! சரி கூட்டம் இல்லாமல் இருக்கு. நான் குளிச்சுட்டு வந்துடறேன். கொஞ்சம் இதையெல்லாம் பிடி!” என அவன் வாட்ச், வாலெட், பேனா எல்லாவற்றையும் கொடுக்க, முறைப்புடன் வாங்கிக்கொண்டவள், கை கொள்ளாமல் நிற்க, தன் சட்டையைக் கழட்டி அவள் தோளில் போட்டவன்,

“கையில் இருக்கிற பையில் போட வேண்டியது தானே?” கூறியபடி சென்றுவிட்டான்.

“நான் என்ன உன்… எல்லாத்தையும் என்கிட்ட திணிக்கிற…” பல்லை கடித்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனோ அவனது வாலட்டை பிரித்துப் பார்க்க கை பரபரத்தது.

முருகன் அங்கிளையும் காணோம்… வள்ளி ஆன்ட்டியையும் காணோம்… இவனும் பார்க்கமாட்டான்… திறந்து பார்த்திடலாம்… திறக்க, உள்ளே இரண்டு வங்கி அட்டைகள், கொஞ்சம் பணம்… பெற்றோருக்கு நடுவில் நின்று இருவரையும் அணைத்தபடி குட்டியாய் ஒரு புகைப்படம்.

அதை பார்த்தும் ஏனென்று தெரியாமல் விழிகளில் நீர் கோர்த்துக் கொண்டது. பட்டென மூடி அவன் சொன்னபடி செய்தவள், தோளில் கிடந்த சட்டையை எடுக்கத் தோன்றாமல் நின்று கொண்டிருக்க, வள்ளி வந்துவிட்டார்.

“பிரபா வந்துட்டானாம்மா? அதெல்லாம் இப்படிக் கொடுங்க!” என சட்டையை எடுத்துக் கொண்டதும், பையையும் கொடுத்தவள்,

“இங்கன (இங்கு) மாத்துறது உங்களுக்கு சங்கடமா இருக்குமே!” என செய்வதறியாது திகைத்திருக்க, ஈரம் சொட்டச் சொட்ட வந்தவன்,

“அம்மா… துண்டு!” என வெடவெடக்க, வெள்ளை பனியனும், வேஷ்டியுமாய் நின்றவனைக் கண்டவள் (பார்டா… கருவாயன் கூட அழகாத் தான் இருக்கான்) எனப் பார்த்துக் கொண்டிருக்க,

“துண்டைக் கொடு! ” என அவன் முணுமுணுத்ததும் தான் இவ்வளவு நேரமும் அவன் துண்டைத் தான் போர்த்தியிருக்கிறோம் என்பது விளங்க, அவனிடம் நீட்டினாள். சற்று நேரத்தில் உடை மாற்றிக் கொண்டு வந்தவன்,

“அம்மா, கீழே போற வழியில் காட்டு சரிவில் இறங்கி உங்க புடவையில் தடுப்பு உண்டாக்கி கொடுக்கலாம். வனிம்மா அதுல உடை மாத்திக்கட்டும்!” என்றதும் தான் அனைவராலும் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

அவனது அக்கறை பிடித்திருந்தாலும் இதெல்லாம் நீ ஏன் பண்ணனும்? எனும் கோபமும் வந்தது பவானிக்கு… இது எங்கு போய் முடியுமோ?

“ஈரத் துணியோடு எவ்வளவு நேரம் இருக்க முடியும்… புதுத் துணி வாங்கியும் போட முடியலையேன்னு சங்கடமாப் போச்சு… இது நல்ல யோசனை பிரபா!” என்றபடியே முருகனிடம் அனைத்து பைகளையும் ஒப்படைத்துவிட்டு, பிரபாவும், வள்ளியும் பவானியை அழைத்துக்கொண்டு மலைச்சரிவில் இறங்கி காட்டிற்குள் நடக்கத் தொடங்கினர்.

அவளது உடைகள் அடங்கிய பையை பிரபாவே வைத்திருந்தான். கொஞ்சம் அடர்த்தியான மரங்களுக்கு இடையில் வந்ததும், அருகருகே இருந்த மரங்களைச் சுற்றி அன்னையின் புடவையை வைத்து அரண் உருவாக்கினான். (இன்ஜினியரிங் படிச்சது வீண் போகல மாப்பிள்ளை…)

“நான் அந்தப் பக்கம் இருக்கேன்… மாத்திட்டு வாங்க!” என அம்மாவிடம் சொல்லிவிட்டு, இவர்கள் கண்பார்வைக்குள் இருக்கும்படி கொஞ்சம் தொலைவில் சென்று நின்று கொண்டான்.

ஐயோ, இதென்ன எல்லாமே வாங்கிட்டு வந்திருக்கானே… கருமம் கருமம் பப்பி ஷேமா போச்சே… இது உனக்கு தேவையா? ஒழுங்கா பிக்னிக் வந்தமா… அந்த வானரங்களோட கூத்தடிச்சோமா… வீட்டுக்கு போனோமான்னு இல்லாம… இந்த கருவாயனெல்லாம் ஒரு ஆளுன்னு கிறுக்குத்தனமா என்னென்னவோ பண்ணி அசிங்கமா போச்சே நொந்து போனாள் பவானி.

இதுவரை அவளுக்கு யாரும் உடையெல்லாம் வாங்கிக் கொடுத்ததில்லை. எல்லாம் அவள் தேர்வு தான். இன்று சுடிதாரோடு சேர்த்து உள்ளாடைகளும் வாங்கி வந்திருந்த பிரபாவின் அக்கறை எரிச்சலூட்டியது. அவள் நிறத்திற்கு பாந்தமாய்… அளவெடுத்து தைத்தது போல் கனகச்சிதமாக இருந்தது சுடிதார்.

ஒரு வழியாய் உடை மாற்றி வர, அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் தாண்டிச் சென்று சேலையை அவிழ்க்கத் தொடங்கினான். அவன் தன்னைப் பார்க்காதது அவள் ஈகோவிற்கு அடி விழுந்தது போல் தோன்ற, அவனுக்கு நன்றி சொல்ல நினைத்தவள், அதைச் சொல்லாமல் அவனை திரும்பித் திரும்பி பார்த்தபடி வள்ளியுடன் சென்றாள்.

பிரபா ஓரக்கண்ணால் அனைத்தையும் பார்த்தாலும், ஏதும் நடக்காதது போல் திரும்பினான். பழமுதிர்சோலைக்கு சென்று முருகனை வழிபட அவள் எங்கே சுவாமியைப் பார்த்தாள்… பக்த கோடிகளையும், அவர்களது உரையாடல்களையும் பார்த்து திணறிக் கொண்டிருந்தாள்.

இவர்கள் ஏன் வீட்டு விஷயங்களையும், பொது விஷயங்களையும் பேசுகிறார்கள்? இங்கு அமைதியாய் இருக்க வேண்டாமா? அமைதியில் தானே மனம் ஒருமுகப்படும். அப்பொழுது தானே தனக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாய் சிந்திக்க முடியும்.

சிந்தித்தால் தானே அதை கடவுளிடம் கேட்க முடியும்? அவள் எண்ணம் இப்படிச் செல்ல, சாமியும் கும்பிடவில்லை, விபூதியும் வாங்கவில்லை. அடுத்ததாக கருப்பர் சன்னிதிக்கு வர, அப்பொழுது தான் ஒருசிலர் ஆட்டுகடாவை பலிகொடுத்துக் கொண்டிருந்தனர்.

அவ்வளவு தான், ரத்ததையும் துடித்து அடங்கும் ஆட்டுகிடாயின் உடலையும் கண்டவள் வெகுண்டு எழுந்துவிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அவள் கோபத்தில் முருகனும், வள்ளியும் எங்கே சண்டை வந்துவிடுமோ என மிரண்டு போயினர். பிரபா தான் அவள் கரம் பிடித்து அங்கிருந்து இழுத்து வந்தான்.

“வனி, இதெல்லாம் வேண்டுதல் அவங்களுக்கு ஏதாவது நல்லது நடந்திருக்கும் அதுக்கு நன்றிக்கடனா பலி கொடுக்கறாங்க. இதிலென்ன தப்பு?”

“கையையோ காலையோ வெட்டிக்க வேண்டியது தானே? அதெல்லாம் செய்யமாட்டாங்களே… அதையெல்லாம் சாப்பிட முடியாதே…”

“ஆமா சாப்பிடத்தான் வெட்டுறாங்கன்னே வச்சுக்கோ. அதில் என்ன தப்பு இருக்கு? அவங்க மட்டும் சாப்பிடப் போறதில்லை… யார் போனாலும் சாப்பாடு போடுவாங்க. எத்தனையோ பேர் இதெல்லாம் வாங்கி சாப்பிட முடியாத ஏழைகள் கூட இப்படி போய் சாப்பிடுவாங்க. அது நல்ல விஷயம் தானே.

எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லதும், எல்லா நல்ல விஷயத்திலும் ஒரு கெடுதலும் இருக்கத் தான் செய்யும். உன் கண்ணுக்கு தெரிந்து நடந்தால் அது கொலை… இல்லன்னா சாதாரண நான்வெஜ்… அப்படி தானே?” அமைதியாய் கேட்டவனுக்கு பதில் சொல்ல முடியாமல் விழிக்கத்தான் வேண்டியிருந்தது.

கோவிலுக்குள் சென்று அழகரை வழிபட, கூட்ட நெரிசலால் அவன் பின்னே செல்லும்படி நேர்ந்தது. அவன் மீது இரண்டு முறை முட்டிக்கொண்டாள். சட்டையைப் பற்றி இழுத்தவளை திரும்பி பார்க்க,

“நான் முன்னாடி போறேன். நீ என் பின்னே வா!” என்றாள் கோபமாக. புருவம் ஏற்றி இறக்கினாலும், அவள் முன்னே செல்ல வழிவிட்டான். என்ன முயன்றும் அவன் மேல் படாமல் செல்ல முடியவில்லை.

அதற்கும் அவன் மீதே எரிச்சல் கொண்டவள், அவன் காலை மிதித்துவிட்டே சென்றாள். பலி கொடுத்த நிகழ்விலேயே அவள் மனம் நின்றுவிட, பிரசாதம் கூடப் பெறாமல் அவள் எங்கோ கவனத்தில் இருப்பதைக் கண்டவன், சற்றும் யோசிக்காமல் தன் கையில் இருந்ததை வைத்து விட்டான். அவன் தொடுதலில் தன்னிலை பெற்றவள்,

“என்ன?” என்றாள் கண்களில் கனல் பறக்க.

“பிரசாதம்…” என்றான் திணறலாக. அவனை முறைத்தபடி, அதை அழிக்க சென்ற கையை கடைசி நொடியில் இறக்கி விட்டாள்.

“தேவையில்லாமல் என்னைத் தொட்டுப் பேசினால் எனக்குப் பிடிக்காது… பீ கேர்ஃபுல்!” என்றாள் கடினக்குரலில். சட்டென அவன் முகம் வாடிவிட்டது. இருந்தாலும் தன்னை சமன்படுத்தியவன், அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

வெளியே, நிழலாய் ஓரிடம் பார்த்து அமர்ந்தவர்களிடம் வள்ளி வீட்டிலிருந்து செய்துகொண்டு வந்த புளியோதரையையும், பருப்பு துவயலையும், உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸோடு தர, அமிர்தமாய் இறங்கியது தொண்டையில். நடந்ததும், குளித்ததும் அவளுக்கு நல்ல பசியைத் தந்திருந்தது.

வள்ளியின் கைப் பக்குவம் அபாரம், சாப்பாட்டில் அன்பையும் சேர்த்து அல்லவா கொடுத்திருந்தார். ஒரு நொடி பவானி அதில் மயங்கித் தான் போனாள்.

“ஆன்ட்டி… இது என்ன சாதம்?”

“இது புளியோதரைம்மா!”

“சூப்பரா இருக்கு. நான் இது வரை சாப்பிட்டதே இல்லை. இந்த சைடு டிஷ்கூட சூப்பர்!” என்றாள் மனப்பூர்வமாய்.

“இதெல்லாம் எங்க வீட்டு குக் செய்ய மாட்டார். ஒரு வேளை, எங்க அம்மா இருந்திருந்தால் செய்திருப்பாங்களோ…?” என்றாள் எதிர்பார்ப்பும், நிராசையுமாய்.

அவள் கண்களில் எட்டிப் பார்த்த ஏக்கத்தைக் கண்டு பிரபாவிற்கு தலைக்கு ஏற… இருமத் தொடங்கிவிட்டான். அவன் கண்களில் கண்ணீர் ஊற்ற முருகனும், வள்ளியும் பதறி விட்டனர்.

தலையை வள்ளி தட்ட, நெஞ்சையும், முதுகையும் தடவி முருகன் ஆசுவாசப்படுத்தினார். அவன் நிலைபெற ஐந்து நிமிடங்கள் ஆனது.

“இவ்ளோ பெரிய பிள்ளையானாலும், தன்னால ஒழுங்கா சாப்பிடத் தெரியுதா? நானே ஊட்டியிருப்பேன். இப்போ பாரு பொறை ஏறிடுச்சு! இங்க கொடு. ஊட்டுறேன்.” என்று சொன்னபடியே அவனுக்கு ஊட்டத் தொடங்கிவிட்டார்.

ஆர்வமாய் அவன் வாங்கத் தொடங்கினாலும், பவானியின் பார்வையை சந்தித்தவன், சற்றே அசடு வழிய பார்வையை திருப்பிக் கொண்டான்.

பவானியோ இவர்களது பாசப் பிணைப்பை கண்டு ஒரு நொடி ஏங்கினாலும், தன்னை மீட்டவள் பிரபாவை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

“இன்னும் தானாக சாப்பிடத் தெரியாதா?” என்பதாய்.

சாப்பிட்டு முடித்தவன், தன் தாய்க்கு ஊட்டி விடவும் மறக்கவில்லை. அவர் கை வேலையை செய்து கொண்டிருக்க, இவன் ஊட்டினான்.

“ஷப்பா… இவங்க ட்ராமா தாங்க முடியலையே!” இப்பொழுது ஏக்கம் கோபமாய் மாறியிருந்தது. தனக்கு என்றும் கிடைக்காத ஒன்று இவனுக்கு தினம், தினம் சுலபமாய் கிடைக்கிறதே… அப்போ நான் பணக்காரி மட்டும் தான். பாசத்தில் நான் ரொம்ப ஏழையோ… முயன்று தன் எண்ணத்தைக் கட்டுப்படுத்தினாள்.

“அம்மா… ஒரு அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்மா…ப்ளீஸ்!” என்றான் கெஞ்சலாய்.

“பவானிம்மா, என்ன பண்ணுவோம்? வெயில் கடுமையா இருக்கு.இங்கே நிழலில் சற்று ஓய்வெடுப்போமா இல்லை கிளம்புவோமா?” என்று முருகன் அவளிடம் தன்மையாய் கேட்க,

பிரபாவிற்காகவே கிளம்பலாம் என்று சொல்ல நினைத்தவள், ஏனோ,

“ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்!” என்றாள்.

“நீங்க இங்க படுக்கறீங்களாமா?” என்றார் வள்ளி.

“ச்சே… ச்சே! இங்கே எப்படி…?”

“அம்மா, உங்க புடவையைக் கொடுங்க!” என்று வாங்கியவன், அதை விரித்து அவன் தாயை அமர வைத்து அவர் மடியில் தலை வைத்து கால்நீட்டி படுத்துவிட்டான்.

“ஆண்ட்டி , இப்படியேவா இருப்பீங்க? உங்க கால் வலிக்காதா?”

“இது எனக்கு பழக்கம் தான். தாய்க்கு பிள்ளை என்னைக்குமே பாரமாகாது.” என்றார் சிரித்தபடி.

“இவ்வளவு பெரியவனா வளர்ந்தப்பறம் கூட, சின்ன பிள்ளை மாதிரி மடியில படுக்கிற பையனை இப்போ தான் பார்க்கிறேன்!” என்றாள் முணுமுணுப்பாக.

தாயின் தலை கோதலில் படுத்த ஐந்தாம் நிமிடம் உறங்கிவிட்டான். ஒரு பக்கம் அவன் சிறு பிள்ளைத்தனம் ஆச்சர்யம் அளித்தாலும், மனதின் ஓரம் பொறாமை எட்டிப் பார்த்தது.

‘சே! என்னதிது? போயும், போயும் இவனோடு போட்டி போடுகிறேன். இவனை இம்சை செய்வதாய் தான் பிளான் செய்து, தோழிகளை கழட்டிவிட்டு வந்தேன். போகிற போக்கை பார்த்தால் இவன் தான் என்னைத் தன் செய்கைகளால் வதைக்கிறான். நான் போட்ட திட்டம், எனக்கு எதிராய் திரும்புகிறதோ?

இவன் கண்ணை மட்டும் பார்க்கவே கூடாது. அதில் ஏதோ ஒன்று என்னை அவன் சொல்படி நடக்க வைக்கிறது. இவன் சிரிப்பு என்னோடு சேர்ந்து கொள்ளேன் என்று அழைக்கிறது.

நான் அர்ஜுனிடம் கூட இப்படி நெருக்கமாக உணர்ந்ததில்லை!’ என்று தனக்குள் போராடி களைத்துப் போனவளாய், வீசிய காற்றின் தாலாட்டை ஏற்று, அவனருகில் சேலையின் மீதே படுத்துவிட்டாள்.

தன் கையையே மடக்கி தலைக்கு வைத்து படுத்து உறங்கியவளை பார்க்க வள்ளிக்கு ஏனோ பாவமாய் தோன்ற, தன் அருகில் இருந்த துணிப்பையை தலையணையாய் வைக்க எண்ணி, சற்று அசைய, பிரபா விழித்துக் கொண்டான்.

“என்னாச்சும்மா?”

“ஷ்… மெதுவா. பவானிமா தூங்குறாங்க!” என்றார் மென் குரலில்.

“எங்கே?” என்றபடியே மறுபுறம் திரும்ப, தனக்கு வெகு அருகில் அவள் படுத்திருப்பதை நம்ப முடியாதவனாய் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மீது படாதவாறு வெகு ஜாக்கிரதையாய் எழுந்தவன், தாயை கால் நீட்டச்செய்து, அவளது தலையைத் தூக்கி மடியில் கிடத்தினான்.

அலங்கார கட்டிலில், விலை உயர்ந்த மெத்தையில், ஏசி இல்லாமல் தூங்கியே பழகியிராத இந்த மங்கை, இங்கே எப்படி இவ்வளவு நிம்மதியாய், நிச்சலனமாய் தூங்கினாளோ? இருபது நிமிடங்கள் கழித்து விழித்தவள், தான் வள்ளி ஆண்ட்டியின் மடியில் இருப்பதை உணர்ந்து வெடுக்கென்று எழ,

“மெதுவாம்மா, தூங்கி எழும் போது திடுக்குன்னு எந்திரிக்கக் கூடாது.” என்றபடி ஆசுவாசப்படுத்தினார் அந்தத் தாய். தண்ணீர் பாட்டிலை கொடுத்து,

“முகம் கழுவிட்டு வாங்க பவானிம்மா… சூடா டீ சாப்பிடலாம்…” என்றார் அன்பான வருடலுடன். இதுவரை சுவைத்தே அறியாத பருப்புவடை அமிர்தமாக இருந்தது.

“இது என்னன்னு கேட்டா சிரிப்பானே… எதிரியையும் தன் பக்கம் இலகுவாக சாய்க்கும் சிரிப்பாக வேறு இருந்து தொலைக்குமே…” அவள் மனதை படித்தவனாய்,

“அம்மா டீ கடையில் சூடா பருப்பு வடை போட்டாங்க… அதான் வாங்கினேன் எப்படி இருக்கு?” மலர்ந்த முறுவலுடன் அன்னையிடம் தான் கேட்டான்.

இவனால் சிரிக்காமல் பேசவே முடியாதோ? மூஞ்சியைப் பார்… லாஃபிங் புத்தா மாதிரி… இதுக்குப்பேர் பருப்பு வடையாக்கும் டீக்கடையில் கிடைக்குமோ…? அடுத்த முறை டிரை பண்ணிட வேண்டியது தான்.

கண்ணை பாரு அப்படியே வள்ளி ஆன்ட்டியோடது ரெண்டு பேரும் கண்ணில் காந்தம் வச்சிருக்காங்க போல… அச்சுவோட பார்வை கூட என்னை இந்த அளவுக்கு பாதிச்சதில்லை… இவன் ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டேங்கிறான்… ஆனாலும் ஏதோ ஒண்ணு… அதற்கு மேல் யோசிக்க பிடிக்காதவளாய் தலை சிலுப்பி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள…

“பவானிம்மா… நான் தலை சீவிவிடட்டுமா?” தாயின் பரிவு அவரிடம். எப்போதும் தலைவிரி கோலமாய் இருப்பது தான் அவள் இயல்பு. ஆனால் மறுக்கத் தோன்றாமல் இசைவாக தலையசைக்க…

“பிரபா, பூவும் ஹேர் பின்னும் வாங்கிட்டுவா…” அன்னை சொன்னதோடு சேர்த்து அவள் உடைக்கு பொருத்தமான ஹேர் பேண்டும் வாங்கி வந்திருந்தான். நேர் வகிடெடுத்து இருபுறமும் முடியை டிவிஸ்ட் பண்ணி பின்கள் குத்தி தளரப்பின்னி மதுரை மல்லியையும் வைத்து விட,

“அம்மா! இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?” ஆச்சரியம் தாங்காமல் கேட்டேவிட்டான் பிரபா.

‘நீ பெண்பிள்ளையா பிறந்திருந்தா அழகழகா செஞ்சுவிட்டிருப்பேன்” பெருமையாகச் சொன்னார் வள்ளி.

இன்று எல்லாமே பவானிக்கு புதிய அனுபவம் தான். காலையில் குரங்கு துரத்தியதில் இருந்து ஆரம்பித்தது… இன்னும் தொடர்கிறது. தனக்கு பொருத்தமான வண்ணத்தில் சுடிதார் வாங்கியது பிரபா என்றாலும், தோடு வளையலெல்லாம் போடாதவளை கடைக்கு அழைத்துச் சென்று கண்ணாடி வளையல்களும், தோடும் மெல்லிய செயினும் சேர்ந்திருப்பது போல் அவள் உடைக்கு பொருத்தமாய் கவரிங் நகை செட்டும் வாங்கிக் கொடுத்து போடவும் வைத்திருந்தார் வள்ளி.

தளரபின்னிய கூந்தல் இன்று புதிதாய் இடை உரசுவது போல் ஒரு பிரேமை உண்டாக்க… தோள்களில் வழியும் மல்லிகை சரம், மற்ற அணிமணிகள் அனைத்திலும் செல்ஃபியின் மூலம் தன்னை பார்த்தவளுக்கு ரொம்பவும் வித்தியாசமாய் இன்று தான் பெண் என்னும் உணர்வே வந்திருப்பது போல் தோன்றியது.

ஆடை ஆபரணங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாத போதும் இவை எதையுமே மறுக்காமல் வள்ளியின் விருப்பப்படி செய்தது ஆச்சரியமாக வேறு இருந்தது. பிரபாவிடம் தனது கைபேசியை கொடுத்து முருகன் மற்றும் வள்ளியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

முதலாளி அம்மாவுடன் படமெடுக்க முருகன் கூச்சப்பட்டார் என்றால் வள்ளியோ ரொம்பவும் வெட்கப்பட்டார். அதெல்லாம் ரசித்தபடியே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தான் பிரபா. பஸ்சிற்காகவும் காத்திருக்க வேண்டியதிருந்தது.

ஒருவழியாக பஸ்ஸில் அன்னையை முதலில் ஏறச் சொன்னவன், அடுத்து பவானிக்கு கண் காட்ட உயரமான படியில் தன் ஹீல்ஸ் செருப்புடன் ஏறுவதற்குள் தடுமாறிப் போனாள்.

‘கவனம் வனிம்மா!’ சொன்னவன் அவள் கீழே விழாதவாறு அரணாக நின்றான். அதற்குள் தந்தையும் ஏறிவிட்டார். வள்ளி பஸ்ஸின் நடுவில் மாட்டிக் கொண்டார். முருகன் படிக்கு அருகே நிற்க பிரபா அவருக்கு கொஞ்சம் முன்னாள் நின்றான். அவனை ஒட்டி பவானி நின்றுகொண்டாள்.

அமருவதற்கெல்லாம் இடமில்லை. கூட்டம் வழிந்தது. எங்கு பிடிக்க? தடுமாறியவள் அவன் கை பார்த்து மேலே பிடிக்க, ஹீல்ஸ் போட்டிருந்தாலும் எட்டியும் எட்டாமலும் சிரமப்பட வேண்டியதாக்கிப் போனது.

“இங்கு பிடி வனி!” சீட்டில் இருக்கும் கம்பியை காட்டினான். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டாலும், பஸ் போகும் போக்கில் எங்கு போய் விழப் போகிறோமோ? பயம் வந்துவிட்டது பவானிக்கு.

இது தேவையா? இவனை வெறுப்பேத்த திட்டம் போட்டு நீ எங்காவது விழுந்து வச்சிடுவ போல இருக்கே… இவன் எப்படி அசையாமல் நிற்கிறான்?’ அவளது ஆராய்ச்சி புரிந்தவனாய்,

“கால்களை கொஞ்சம் அகட்டி வச்சு நின்னா தடுமாற மாட்டோம்.” சொன்னவனிடம் கேலி இல்லை. ஸ்நேகச் சிரிப்பு மட்டுமே.

அடுத்தடுத்த நிறுத்தங்களில் மக்கள் ஏறினார்களே தவிர யாரும் இறங்கவில்லை. கூட்ட நெரிசல் பழக்கமில்லாததால் யாரேனும் உரசினால் இவள் நெளிய, அவளது சங்கடம் புரிந்தவனாய் கீழிருக்கும் கம்பியை இரு கைகளாலும் பிடித்து யாரும் இடிக்காதபடி தன் கைவளையத்துக்குள் நிறுத்திக் கொண்டான்.

அவளது நெருக்கம் அவனை இம்சிக்கத்தான் செய்தது. அரைமணி நேரம் கடந்துவிட்டது.

“இன்னும் எவ்வளவு நேரமாகும்?” நிற்க முடியாமல் கால் மாற்றி தவித்தாள்.

‘ஒருமணி நேரமாகும் வனி! செருப்பை கழட்டிட்டு என் கால் மேல நில்லு!”

“ஏய்! என்ன ரொம்ப ஓவரா போற?” அவள் காண்டாகி சீற,

“ஆமாடி! உன்னை தூக்கி சுமக்கனும்னு வேண்டுதல் பார். பாவம், ஹீல்ஸ் போட்டு ரொம்ப நேரம் நிக்க முடியாதேன்னு சொன்னா ரொம்பத் தான்.”

“பிரபா! இட்ஸ் டூ மச்… கொஞ்சமும் மரியாதை இல்லாமல் வனி… நீ… வா… போன்னு பேசுறன்னு பார்த்தா… இப்போ டீ போட ஆரம்பிச்சுட்ட?” உக்கிரமாய் உரும,

“எப்படியும் உன்னைவிட சில மாசமாவது நான் பெரிய பையனா தான் இருப்பேன். முதல்ல நீ மரியாதையா கூப்பிடு அப்புறம் எதிர்பார்க்கலாம்…”

“நான் யார் தெரியுமா?” எண்ணையில் போட்ட கடுகாய் வெடிக்க,

“உன்னிடம் வேலை பார்ப்பது என் அப்பா தான். நான் இல்ல! அதுவும் உன் அப்பா தான் முதலாளி… சும்மா எகிராத…”

“ஏம்பா, உங்க காதல் சண்டையையெல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க… நான் இறங்கணும் கொஞ்சம் வழி விடுங்க!” இருக்கையில் இருந்த பெரியவர் எழ,

“காதல் சண்டையா? போயும் போயும் இந்த கருவாயனையா? நெவர்! எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு.” முகம் திருப்பிக் கொண்டவள் அந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

உன்மத்தமாகலாம்…

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s