உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் # 24

ஆதி தனக்கு வேலை கிடைத்துவிட்டதை நிவியிடம் எப்படி சொல்வது என தயக்கத்துடனேயே நாட்களை கடத்தினான். இதற்கு மேலும் சொல்லாமல் தள்ளிப்போட முடியாது… எப்படியும் இன்று சொல்லிவிட வேண்டும் என இறுதி முடிவை எடுத்துவிட்டாலும், ஆரம்பிக்கும் வழி தெரியாமல் மருகிக் கொண்டிருந்தான்.

வீட்டில் அனைவரும் சாப்பிட்டு படுக்கச் சென்றுவிட்டனர். வழக்கத்திற்கு மாறாய் ஆதி நிவேதாவின் அறைக்குச் செல்லாமல் மொட்டை மாடியில் நிலவை வெறித்துக் கொண்டிருந்தான்.

என்னதான் வெளிநாட்டு வேலையே கிடைத்திருந்தாலும் அவனால் அதை முழு மனதோடு ஏற்க முடியவில்லை. அவனது வேலையை விட நிவியே அவனது மூச்சாகியிருந்தாள்.

வேலையைப் பற்றி நிவியிடம் எப்படி சொல்வது? அவள் அதை எப்படி ஏற்பாள் ஒருவேளை அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை வெளிப்படையாக சொல்வாளா? அந்தச் சூழ்நிலையை எப்படி கையாள்வது? வேலையை உதர வேண்டுமா?

இல்லை நிவிக்கு புரிய வைக்க முடியுமா? தான் இல்லாது அவள் இங்கே சமாளித்து விடுவாளா…? தன்னை ரொம்பத் தேடுவாளோ? மனம் பலவித எண்ணங்களில் சிக்கித் தவித்தது. (நிவி கூட விட்டுட்டு இருந்துடுவா போல… இவன் தான் ரொம்பத் தேடுறான்!)

ஒவ்வொரு இரவும் தன்னை தூங்க வைப்பதற்காக வரும் ஆதி அத்தானை இன்னும் காணவில்லையே என நிவி தேடத் தொடங்கிவிட்டாள். அவன் அறையில் சென்று பார்த்தவள், ஆதி அங்கு இல்லையென்றதும்… அவனது போனையே எடுத்து பிரபாவிற்கு அழைத்தாள்.

“பிரபாண்ணா, ஆதி அத்தானை காணும்?” அவளது பதட்டத்தைக் கண்டு பிரபாவே ஒரு நொடி பயந்துவிட்டான்.

“பயப்படாத நிவிம்மா… பின் கதவு திறந்திருக்கான்னு பாரு, தோட்டத்தில் இருப்பான்!”

“இல்ல, கதவு மூடி இருக்கு…” சொல்லும் போதே அழுகை வந்து விட்டது.

“அழாதடா… அவன் என்ன சின்ன பையனா? காணாமல் போக… மொட்டை மாடியில் இருக்கலாம்… கண்ணை துடைச்சுக்கிட்டு போய் பாரும்மா. அங்கும் இல்லன்னா நான் வரேன்.

பக்கத்தில் எங்காவது வாக்கிங் போயிருப்பான் தேடி கண்டுபிடிச்சு உன் முன்னாடி அந்த தடியனை கொண்டு வந்து நிறுத்துறேன். கவலைப்படாதே!” பெரும் நிம்மதி பரவ, சிட்டாய் பறந்தாள் மொட்டைமாடிக்கு.

“பிரபாண்ணா லைட் எரியலையே… கதவு சாத்தியிருக்கு… ஆதி அத்தான் இங்கே வரல போல… எனக்கு ஆதி அத்தானை இப்போவே பார்க்கணும். ஏன் என்கிட்டே சொல்லிட்டுப் போகலை? நான் தேடுவேன்னு தெரியாதா?” அவள் குரலில் அழுகையும், ஆதங்கமும் போட்டி போட்டது.

இவளது குரல் ஆதியின் செவியைத் தீண்டிய அடுத்த நொடி, வேகமாக வந்து கதவைத் திறந்தான். கதவின் மேல் சாய்ந்தபடி பேசிக்கொண்டிருந்த நிவி, பிடிமானம் இன்றி பின்னே சாய, அவளைத் தன்மேல் தாங்கி, பின்னிருந்து அணைக்க… அலறிவிட்டாள்.

“என்னாச்சு, நிவி… நிவி!? என்னமா?” போனில் பிரபா பதற,

“ஷ்… தங்கம், நான் தான்! உன் ஆதி அத்தான் தான்… பயப்படாதே!” என்று அவள் காதருகில் மென்குரலில் கூற, அவன் உதடுகள் பட்டும்படாமல் அவள் செவிமடலைத் தீண்டிச் சென்றது.

“நிவிம்மா… என்னாச்சுடா?!” பிரபாவின் குரல் போனில் அலற, ஒரு கையால் அவளை அணைத்தபடி, மறு கையால் அவளிடமிருந்து போனை வாங்கி,

“நான் தான் பிரபா… அவளுக்கு ஒன்றுமில்ல. மொட்டை மாடியில் காற்று வாங்க வந்தேன். கதவைத் திறந்தால் உன் தங்கை என் மேல சாஞ்சுட்டு கத்தி ஊரைக் கூட்டுறா!”

“போடா லூசு…! ஒரு நிமிஷம் உயிரே போன மாதிரி இருந்துச்சு. என்னாச்சோ… என்னவோன்னு! இனி மேல் அவகிட்ட சொல்லாம போகாதே… பாவம் ரொம்ப பயந்துட்டா… ஷி இஸ் மிஸ்ஸிங் யூ வெரிமச்! பார்த்துக்கோ மச்சான்… இது தான் கடைசி வார்னிங். என் தங்கை அழுதா உன்னை சும்மா விடமாட்டேன்!” என்று மிரட்டிவிட்டே அழைப்பைத் துண்டித்தான்.

நண்பன் திட்டியது கூட அவனுக்கு கூடை பூக்களை அள்ளி தலையில் கொட்டியது போல் சுகமாயிருந்தது. இருக்காதா பின்னே? ஆதியே அவன் காதால் கேட்டானே, நிவி தன்னைத் தேடி பதறியதை…

‘இருட்டு என்றால் பயப்படுபவள், தன்னைத் தேடி இங்கே வந்திருக்கிறாளே? பிரபாவிடம் விசாரிக்கும் அளவிற்கு என் தங்கம் பெரிய ஆள் ஆகிவிட்டாளே’ என்று மனம் துள்ள, தன்னவளைப் பார்க்க,

அவளோ ஆதி அத்தான் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இருகைகளாலும் அவன் இடையை சுற்றி பிடித்திருந்தாள். எங்கே விட்டால் அவன் தன்னை விட்டு சென்று விடுவானோ என்று அஞ்சுபவள் போல.

ஆதி அவள் முகம் பார்க்க முயல, அவளை அலைய விட்டதற்கு தண்டனையாய் தன் முகம் காட்டாமல் அவன் மார்பில் முகத்தை அழுத்திக் கொண்டாள்.

“தங்கம்… என்னைப் பாரேன்!”

“ம்ஹூம் …” தலையை உருட்டி, அவனது மார்பில் தன் வார்தையைப் புதைத்தாள்.

“நிவி செல்லம், என்னைத் தேடுனீங்களா?”

“…..”

“பிரபாகிட்ட ஏன் என்னை மாட்டிவிட்ட?”

“….”

“அவன் என்னை லூசுன்னு திட்டுறான்… மிரட்டுறான்! என் நண்பனையே என்னைத் திட்ட வச்சுட்டியே நிவி!” அவன் குரலில் என்ன தோன்றியதோ,

சட்டென நிமிர்ந்து… கோபமாய் இருக்கிறானோ என்று அரைக் கண்ணைத் திறந்து பார்க்க, அதற்காகவே காத்திருந்ததைப் போல் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.

“விடுங்க… ஆதி அத்தான்!” அவன் கைகளிலிருந்து விடுபட எண்ணி நெளிய, அவன் பிடி இறுக்கியிருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவளது அசைவுகள் அவனை இம்சிக்க, இறக்கி விட்டவன்,

“சொல்லுங்க, நிவி பேபி ஏன் என்னைத் தேடுனீங்க?”

“நீங்க ஏன் என் ரூமுக்கு வரலை?”

“ம்… பரவாயில்லையே… என் செல்லம் எதிர் கேள்வி கேட்கிற அளவுக்கு பெரியவங்களாகிட்டாங்களே?” என்று அவள் மூக்கை செல்லமாக பற்றி ஆட்ட,

“ஆதி அத்தான்… என்கிட்ட ஏதாவது மறைக்கிறீங்களா? இல்ல எனக்கு பிடிக்காத எதையாவது சொல்லப் போறீங்களா?”

“எப்படி சொல்லற?” சிறு திடுக்கிடல் ஓடி மறைந்தது அவன் கண்களில்.

“ரொம்ப மரியாதையா… இப்படி கொஞ்சி கொஞ்சி பேசறீங்களே அதான்…”

“ஹாஹா! கொஞ்சினது குற்றமா? என் தங்கம் என்னைத் தேடி பதறிட்டாளே, அந்த சந்தோஷம் தான்.” மூக்கோடு மூக்கை உரசி சிரிக்க,

“இல்ல, ஏதோ இருக்கு… நீங்களும், மாமாவும் எனக்குத் தெரியாம பேசிக்கறீங்க?”

“இது எப்போ?”

“இன்னைக்கு தான். சாப்பிடும் போது!”

“நான் கண்ணால் பார்த்தால் உனக்கு அர்த்தம் புரியுமா?” அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியபடி அவன் வசியக் குரலில் கேட்க, அதன் அர்த்தம் புரியாவிட்டாலும், அவன் கண்கள் அவளை ஏதோ செய்ய, பார்வையைத் தாழ்த்தினாள்.

“நீ சாப்பிடாமல் என்னைத் தான் பார்த்துட்டு இருந்தியா?”

“ஆமா… மீன் முள்ளை நீக்கித் தருவீங்கன்னு காத்துட்டுருந்தேன். நீங்க ஏதோ யோசனையில் இருந்தீங்க. மாமா கூப்பிட்டு என்னவோ சொல்ல, சாப்பிட ஆரம்பிச்சுடீங்க. என்னை கவனிக்கவேயில்லை!” என்றாள் உதடு சுழிய.

“அச்சோ… சாரி தங்கம்! என் தப்பு தான்… ஏதோ ஞாபகத்தில் இருந்தேன். நீ மீன் சாப்பிட்டியா இல்லையா?”

“நீங்க எடுத்துத் தராமல் எப்போ நான் சாப்பிட்டுருக்கேன்?”

ஆதிக்கு ஐயோ என்று இருந்தது. அந்த வீட்டிற்கு அவள் வந்ததிலிருந்து அவன் தான் மீன் துண்டுகளின் முள்ளை நீக்கித் தருவான். அவளாக எடுத்து சாப்பிடத் தெரியாமல் முழித்த போது, அவளை திட்டியபடி எடுத்துக் கொடுத்தான்.

அதன் பிறகு, அதுவே பழக்கமாகி விட்டது. நிவேதா கேட்கக் கூடமாட்டாள். மீனின் முள் குத்திவிடும் என்று அவளைத் தொட விடமாட்டான். அவன் இல்லாத போது அவள் மீனை சாப்பிடமாட்டாள். அதுவும் அவன் அறிந்ததே. அத்தை எடுத்துத் தருவதாகச் சொன்னாலும் ஒப்புக் கொள்ளமாட்டாள்.

“நிவிம்மா, உன் ஆதி அத்தானுக்கே மீன் முள்ளை எடுக்கச் சொல்லிக் கொடுத்தது நான் தான். என்னை விட உன் அத்தான் பெரிய எக்ஸ்பர்ட்டோ?” என்று அத்தை கூட செல்லமாய் அலுத்துக்கொள்வார்.

அவளை கீழே அழைத்துச் சென்றவன், டைனிங் டேபிளில் அமர வைத்துவிட்டு, மீன் வறுவலும், தயிர் சாதமும் எடுத்து வந்து ஊட்டிவிட்டான். மறுப்பின்றி முழுவதுமாய் வாங்கிக் கொண்டவளை,

“ஏன் பேபி… ஒழுங்கா சாப்பிடலையா?” என வருத்தத்துடன் வினவ

“இந்த தயிர் சாதம் டேஸ்ட்டா இருக்கே!”

“ஊட்றது நான் தானே… “

“அம்மா கூட இப்படி தான் ஊட்டி விடுவாங்க!”

“சரி, அம்மா இல்லைன்னா, ஆதி அத்தான் ஊட்டி விடுறேன். நான் இல்லைன்னா…” சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அவனைத் தாவி அணைத்துக் கொண்டவள்,

“நோ… ஆதி அத்தான், அப்படி சொல்லாதீங்க…” அலறிவிட்டாள்.

“ஷ்… ஷ்… மெதுவாடி! நான் ஊருக்குப் போனால், அத்தை உன்னை பார்த்துப்பாங்கன்னு சொல்ல வந்தேன்”

“நீங்க ஊருக்குப் போறீங்களா?” கண்களை மட்டும் மலர்த்தி அவனைப் பார்க்க,

“நீ சரின்னு சொன்னால் போவேன்!”

“நான் ஏன் சரின்னு சொல்லணும்?”

“என்னை கேம்பஸ் இன்டெர்வியூவில் ரெண்டு கம்பெனிகள் செலக்ட் பண்ணியிருக்காங்க. ஒரு கம்பெனி மும்பையில் இருக்கு மற்றொன்று துபாயில். இப்போ சாய்ஸ் என்னிடம். அதை உன்னிடம் ஒப்படைக்கிறேன்!”

அவனை விட்டு விலகி, பரிதாபமாய்ப் பார்த்தாள். அவளது பதிலுக்காய் காத்து நின்றான் அவளது கண்களைப் பார்த்தபடி. கண்கள், என்னை விட்டுப் போகாதே என்பது போல் சுருங்கி விரிய, கண்மணிகள் அங்கும், இங்கும் அலைய இதழ்களோ,

“எப்போ அத்தான் போகணும்?” என்றது மெல்லிய குரலில்.

“இன்னும் ஒண்ணு ரெண்டு மாசத்தில் ‘கால் ஃபார்’ லெட்டர் வரும். வந்தவுடன் போக வேண்டியது தான்.”

“எங்கே போனால் நிறைய லீவ் கொடுப்பாங்க?”

“நான் போறது வேலைக்கு. இதென்ன ஸ்கூலா? நினச்சா லீவ் போட!”

“நான் எப்படி உங்களை பார்க்கிறது? நீங்க தானே லீவ் போட்டுட்டு வரணும்!?”

“விவரம் தான்… நான் ஏன் வரணும்? நீ தான் நான் ஸ்மார்ட்டா இல்லன்னு சொன்ன, நான் உன்னை திட்டறேன், கொட்டுறேன். நான் இல்லைன்னா நீ ஜாலியா அத்தை, மாமாவோட ஊர் சுத்திட்டு இருக்கலாமே!

நான் தான் உன்னை எப்பவும் மிரட்டுறேன், அவங்க ரெண்டு பேரும் உன்னை செல்லமா வச்சுப்பாங்களே… என்ஜாய் பண்ணு!”

“நீங்க இல்லைன்னா யார் என்னைத் தூங்க வைப்பாங்க? யார் எனக்கு இப்படி ஊட்டி விடுவாங்க? யார் பாடம் சொல்லிக் கொடுப்பாங்க? யார் எனக்கு என்ன வேணுமோ… அதை நான் கேக்காமலேயே செய்து கொடுப்பாங்க?”

இதழ்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, கைகளோ அவன் சட்டைக்காலரை பற்றி இழுத்து நிமிண்டிக் கொண்டிருந்தது. அவள் கேள்விகளில் பிரம்மித்தவன்… அதைக் காட்டிக் கொள்ளாமல், சூழலை இலகுவாக்க,

“உன்னைத் தவிர வேறு யாரும் என் சட்டையைப் பிடிச்சு இப்படி கேள்வி கேட்க முடியாது பேபி!” என்று அவள் கன்னம் கிள்ளி சிரித்தான்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ஆதி அத்தான்!”

“நீ என்னை ரொம்பத் தான் மிரட்டுற… போடி! அதுக்காகவே நான் தூரமாய் போறேன்!” என்றான் விளையாட்டாய். அவளோ, அவனது விளையாட்டை உணராமல்,

“சாரி… சாரி! அத்தான்… நான் இனிமேல் இப்படி பேசமாட்டேன்!” என்றாள் தவிப்பாக.

“ச்சு… நான் விளையாட்டுக்குத் தான் சொன்னேன். என் அம்மா, அப்பாவிற்கு பிறகு என்னை கேள்வி கேட்கிற உரிமை உனக்குத் தான் இருக்கு தங்கம்.” காதல் வழிந்தது அவன் கண்களில். அவள் தோளைச் சுற்றி தன் கைகளால் இறுக்கியபடி…

“நான் மும்பைக்குப் போனால் வருஷத்துக்கு பத்து நாள் தான் லீவ் தருவாங்க. அது கூட எடுக்காமல் இருந்தால் தான் சீக்கிரம் வேலை நிரந்தரமாகும். சம்பளம் திருப்தியாக இருக்கும்.

துபாய் கம்பெனியில் பத்து நாள் லீவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஊருக்கு வரலாம். ஆனால் சம்பளம் குறைவு. ப்ராஜக்ட் முடிந்ததும் ஊர் திரும்ப வேண்டியது தான். ஷட் டவுன் போது ஒரு மாதம், ரெண்டு மாதம் போக வேண்டியதிருக்கும். நான் எதைத் தேர்ந்தெடுக்க?”

“அத்தை, மாமா என்ன சொன்னாங்க?”

“உன் இஷ்டம் என்று சொல்லிட்டாங்க!”

“அப்பறம் ஏன் என்னை கேட்கறீங்க?” (வளைச்சு வளைச்சு கேள்வியா கேட்குறாளே…. கொஞ்சம் வளர்ந்துட்டாளோ?)

“நீ தான் எனக்கு முக்கியம். எனக்கான முடிவு உன்னைச் சேர்ந்தது”

“நான் சொல்ற முடிவு தப்பாயிருந்தா?”

“நீ எது சொன்னாலும் சரியாத் தான் இருக்கும்!”

“நான் சொல்ற முடிவு உங்களுக்குப் பிடிக்கலைன்னா?”

“உன்னைப் பிடிக்கும் போது உன் முடிவும் பிடிக்கும்”

“அப்படின்னா… நான் ஆதி அத்தான் கிட்ட கேட்டுச் சொல்றேன். அவங்க என்ன சொன்னாலும் சரியாய் இருக்கும்!” என்றாள் கண்கள் மின்ன. (ஆன்னா… ஊன்னா… ஆதி அத்தனா… சொந்தமா யோசிக்கவே மாட்டியா? என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!)

அவன் கண்களில் பெருமிதமும், காதலும் போட்டி போட, அதைப் படிக்கத் தெரியவில்லை நிவேதாவிற்கு. அவளைத் தன்னோடு சேர்த்தணைத்தவன்,

“நிவி செல்லத்துக்காக நான் துபாய்க்கே போறேன்.”

“நீங்க இல்லைன்னா நான் எப்படி இருப்பேன்?” (மறுபடியும் மொதல்ல இருந்தா…. ஆதி… நீ காலி!)

“அத்தை, மாமா, பிரபா அண்ணா, நந்துக்கா எல்லாரும் இருக்காங்களே! அப்பறம் என்ன?” ( நீ இவ்ளோ பொறுமைசாலியா?)

“யார் இருந்தாலும் ஆதி அத்தான் மாதிரி வருமா?” அவன் மார்பில் சலுகையாய் சாய்ந்தபடி அவனைப் பார்க்க, அவளை முத்தமிடத் துடித்த உணர்வை பெரும்பாடுபட்டு அடக்கினான்.

“நான் வார இறுதியில் நிச்சயம் உன்னோடு பேசறேன்… உனக்கு என் கூட பேசத் தோன்றினால் மிஸ்ட் கால் கொடு. நான் கூப்பிடுறேன். நீ அத்தை, மாமாவை பத்திரமா பார்த்துக்கோ. எனக்காக… உன்னை ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துக்கோ… செய்வியா?” என்றான் ஆழ்ந்த குரலில் அவள் முகம் நிமிர்த்தியபடி.

அவளால் பேச முடியவில்லை. கண்களில் நீர் மல்க ‘சரி’ என்பதாய் தலையசைத்தாள். அவள் முகத்தை தன் இரு கரங்களால் தாங்கி, சிந்திய கண்ணீர் துளியை கன்னம் தாண்ட விடாமல் முத்தத்தால் தடுத்து நிறுத்தினான்.

“சரி… ரொம்ப நேரம் ஆகிட்டது. நீ போய் படு. நான் கொஞ்ச நேரம் கழித்து வரேன்!”

“நீங்க ஊருக்குப் போற வரை என் கூடத் தான் இருக்கணும். உங்க மடியில் தான் தூங்குவேன்!” (நீ தூங்குவ… உன் அத்தான் தூங்க வேண்டாமா? என்னடா இது ஆதிக்கு வந்த சோதனை!)

அவள் கேட்டுக்கொண்ட படியே கட்டிலில் அமர்ந்து, மடியில் ஒரு தலையனையை வைத்து, அவளை படுக்க வைத்தான்.

தலையை வருடிக் கொடுத்த பத்து நிமிடங்களில் உறக்கத்திற்குச் சென்றவளை பிரிய மனமின்றி வெகு நேரம் மடி தாங்கி அமர்ந்திருந்தான்.

உன்மத்தமாகலாம்…

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s