என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் #31

அத்தியாயம் #31

“சார்… நான் வேலையை விட்டுடலாம்ன்னு இருக்கேன்.” சரிதா சொல்ல, இதை சற்றும் எதிர்பாராதவன் சட்டென ப்ரேக்கில் காலை அழுத்திவிட்டான்.

வண்டி சற்றே குலுங்க, மனைவி கீழே விழுந்துவிடுவாளோ என அதே வேகத்தில் திரும்பியவன் தன் கையை அவளருகே அணைவாய் வைத்துக்கொண்டான். கண்கள் மனையாளை காபந்து செய்து கொண்டிருந்தாலும் உதடுகள் சரிதாவிடம்,

“ஏன் இந்த முடிவு?” என கேட்கத் தான் செய்தன.

“நான் தான் சொன்னேனே… தம்பிக்கு வேலை கிடைச்சுடுச்சு. அதனால என்னை வேலையை விட்டு நிற்க சொல்றான். தவிர பாட்டிக்கு இப்போவெல்லாம் அடிக்கடி உடம்புக்கு முடியாம போறதால சொந்த ஊருக்கே போய் அவங்க கூட இருக்கலாம்னு பார்க்கிறோம். நானும் வாழ்க்கைப் பாடம் நிறைய கத்துக்க வேண்டியிருக்கே, அதான் இந்த முடிவு.” உணர்ச்சியற்ற குரலில் சொல்ல,

“நீ ரொம்ப புத்திசாலி, யதார்த்தவாதி, உன்னால் எதையும் சுலபமா கத்துக்க முடியும்…” மெச்சுதலாய் சொன்னான். 

“காதல்ல நான் மக்கு தான், பயங்கர மோசமா தோற்றுப் போயிட்டேன்…” சொல்லும் போதே அவள் குரல் நடுங்கியது. விழிகள் கலங்கினாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“சரிதா…! நீ தோற்றுப் போகலை… நான் தான் அந்த பாதையில் இருந்து விலகிட்டேன். இதுல உன் தப்பு எதுவுமே இல்லை. நீ இதை சீக்கிரமா கடந்து போயிடனும்னு தான் நான் ஆசைப்படுறேன்.”

“கொஞ்சம்… இல்ல ரொம்ப கஷ்டமா இருந்தாலும் நிச்சயம் கடந்துடுவேன்.”  என்றவளிடம் பெரும் வேதனை இருந்தது.

‘கடக்கத் தானே வேணும். நீயும் உனக்கான வாழ்க்கையை அமைச்சுக்கத் தான் வேணும்!’ என எண்ணியவன் அமைதியாக இருக்க,   

“நீங்க அதை கடந்து காண முடியாத தூரம் போயிட்டீங்க…” மரத்த குரலில் சொன்னாள்.

“ஆமா, உண்மை தான். ஆரம்பத்தில் என்னால என் மனைவியை காதலிக்க முடியுமான்னு தெரியாமத் தான் இந்த பந்தத்தில் இணைஞ்சேன். இருந்தும் அவளை கடைசி வரை நல்லபடியா, பத்திரமா பார்த்துக்கணும்னுகிற எண்ணம் என் மனசில் இருந்துச்சு.”

“நீங்க உங்க சுமியை காதலிக்க ஆரம்பிக்கலைன்னா நினைக்கிறீங்க…!? எனக்கு காதலை வெளிப்படுத்த தெரியாமல் இருக்கலாம்…. ஆனா என்னால காதலை உணர முடியும், அப்படி பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி கண்ணாபின்னான்னு வேலை செய்யுது.” என்றவளிடம் தன்னையும் மீறி சிறு பொறாமை எட்டிப் பார்த்தது.

“கெமிஸ்ட்ரியா? நீ வேற, இவ எங்கிட்ட எப்பவுமே இப்படி தான், இது இவளோட இயல்பு. மரியாதை மருந்து அளவு கூட தரமாட்டா… தினமும் என்னோட சண்டை போடலைன்னா இவளுக்கு நாளே முடியாது…” ரசனைச் சிரிப்புடன் சொன்னவனுக்கு மனையாளிடம் தான் காதல் கொண்டுவிட்டதை முன்னாள் காதலிடம் சொல்ல தயக்கமாக இருந்தது.

“காதலுக்கு தேவை நம்பிக்கை தான், சுமி உங்களை நம்புறதால தான் நான் ஆபிசில் இருக்கேன்னு தெரிஞ்சும் உங்களை அங்கே வேலை செய்ய விடுறா. வாங்க, போங்கன்னு பேசுறது தான் மரியாதைன்னு நினைச்சீங்கன்னா அது தப்பு, உங்க மேல மதிப்பு இருந்தாலே மரியாதை தானா வந்துடும்.

ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் உங்களை மனசில் வச்சு, உங்ககிட்ட கலந்துக்கிட்டு முடிவு எடுத்தால் அது தான் உங்களுக்கான மரியாதை. உண்மையை சொல்லனும்னா உங்க மேல இருக்கும் மரியாதைக்காகத் தான் என்கிட்ட இத்தனை நல்லா பேசுறா.

உங்க பக்கத்துல உட்கார்ந்துகிட்டு உங்களை என்கிட்ட பேசவேவிடாம கண்காணிச்சுட்டே வந்தா நம்மால என்ன செஞ்சிருக்க முடியும்? ஆனா அவ என் பக்கத்தில் உட்கார்ந்து, என் கூட சுமூகமா பழகுறது உங்க மனசு கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக தான். இதை விட காதல்ல வேறென்ன எதிர்பார்க்குறீங்க?

நீங்க மட்டும் என்ன…?! நான் இங்கே தான் இருக்கேன்னு தெரிஞ்சாலும் உங்க கண்கள் சுமியை தான் சுத்தி சுத்தி வருது. அவகிட்ட பேசுறது குறைவா இருந்தாலும் அவள் செய்யும் அத்தனை அலும்புகளையும் சின்ன சிரிப்போடு ரசிக்கிறீங்க, அதுல நீங்களும் கலந்துக்கறீங்க… அவள் ஆசைப்பட்டதை அவள் கேட்காமலேயே செஞ்சு முடிக்கிறீங்க… இதுக்கு பேரு காதல் இல்லாம வேற என்ன?” சரிதா தான் உணர்ந்தவைகளை ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல,

‘நாம் சொல்லாவிட்டாலும் கண்டுகொண்டாளே!’ விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தான் சக்திவேல்.

“நீங்களே திரும்பி பாருங்க, வண்டி நின்னு அஞ்சு நிமிஷமாச்சு. உங்க மனைவி நல்லா தூங்கிட்டு இருக்காங்க, ஆனாலும் அவங்க உருண்டு விழுந்துடக் கூடாதுன்னு வச்ச கையை இன்னும் நீங்க எடுக்கவேயில்லை. இது காதல் இல்லாம வேற என்ன?” கேலிச் சிரிப்புடன். சொல்ல,

சக்தி சட்டென தன் கையை இழுத்துக் கொள்ளப் பார்க்க, அவனது சுண்டுவிரலை பிடித்துக் கொண்டு தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பவளைக் கண்டவனின் முகம் கனிந்தது.

“சுமியை எப்போ… எப்படி… எதுக்காக விரும்ப ஆரம்பிச்சேன்னு தெரியல… ஆனா இப்போ என் மனசு முழுக்க அவ தான் இருக்கா. இதை உங்கிட்ட சொல்லி சங்கடப்படுத்தக் கூடாதுன்னு தான் சமாளிச்சேன். ஆனா நீயே கண்டுபிடிச்சுட்ட.”

“இதில் சங்கடப்படுறதுக்கு என்ன இருக்கு? இது தான் வாழக்கைன்னு முடிவானதுக்கு அப்புறம் ஒட்டாம வாழவோ, விலகி நிற்கவோ வேண்டிய அவசியமென்ன? கிடைச்சிருக்க வாழ்க்கையை ரசிச்சு வாழ வேண்டிது தான். அது தான் எல்லோருக்குமே நல்லது.” அன்பான புரிதல் தான் காதல் என்பதை வெகு அழகாய் சொன்னாள்.    

“நீங்க இப்படி சந்தோஷமா வாழணும்ன்னு தான் நானும் ஆசைப்படறேன். ஆனால் நீங்க சுமிகிட்ட இவ்வளவு காதலோடு இருக்கிறதை பார்க்கும் போது, நிறைய ஏக்கம், கொஞ்சம் பொறாமைன்னு மனசு தடுமாறுது.

என்னோட இந்த எதிர்மறை எண்ணங்கள் உங்க ரெண்டு பேர் சந்தோஷத்தை அழிச்சிடுமோன்னு பயமா இருக்கு. முக்கியமா அதனால தான் வேலையை விட்டு போக முடிவெடுத்தேன். இத்தனை நாளும் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்காததால இயல்பா இருக்க முடிஞ்சுச்சு. இனி அது முடியாதுன்னு தோணுது.

எந்த ஒரு விஷயமும் காட்சியில் இருந்து மறைஞ்சுட்டா, கருத்தில் இருந்தும் மறைஞ்சுடும்ன்னு சொல்வாங்க. உங்க நினைவில் இருந்து நான் முற்றிலுமா வெளிய வரணும்னா வேலையை விட்டே ஆகணும்.

தம்பி என் கல்யாணத்தை முடிச்சுட்டு தான் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்றான். அதுக்கு நானும் என்னை தயார்படுத்திக்கத் தானே வேணும்?” என்றவளிடம் எதார்த்தத்தின் சாயல் நிறைந்திருந்தது.    

மனைவிக்கு இடது கையை கொடுத்திருந்தவன், தன் வலக்கையால் சரிதாவின் உள்ளங்கையை அழுத்தி,

“நிதர்சனத்தை ஏத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி சரிதா. கூடவே உன் புரிதலுக்கும் நன்றி. ஒருவேளை நீ சரியா புரிஞ்சுக்கலைன்னா அதுவேற எனக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்கி இருக்கும்.” மனமார நன்றி சொல்ல,  மிகச்சரியாய் அந்நேரம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தாள் சுமித்ரா.

தன் கண் முன்னே கணவனின் கரமும், சரிதாவின் கரமும் ஒன்றாய் இணைந்திருந்ததை கண்டவள், திடுக்கிடலுடன்,

‘இங்க என்ன நடக்குது…? இவள் எப்பொழுது முன்னே சென்றாள்? இருவரும் கையை பிடித்துக் கொண்டு என்ன செய்கிறார்கள்? இது எதுவும் தெரியாமல் நான் எப்படி தூங்கிப் போனேன்?’ பெரும் குழப்பம் சூழ வேகமாய் எழ எத்தனித்தவள் அப்பொழுது தான் கணவனின் மறுகரம் தன்னிடம் சிக்கியிருப்பதை கண்டாள்.

‘இதென்ன இருவர் கரத்தையும் தன் கரத்தில் அடக்கியிருக்கிறான்? அப்படியென்றால் இருவரோடும் வாழ எண்ணுகிறானா?’ மனம் தன் போக்கில் கண்டதையும் கற்பனை செய்ய அதை ஏற்க முடியாமல் வெடுக்கென தன் கரம் உருவிக் கொள்ள,

“அம்மு! எழுந்துட்டியா?” மென் முறுவலுடன் கணவன் கேட்க,

“நீங்க இங்க வாங்க சுமி…” சரிதா முன்னிருக்கையில் இருந்து எழப் போக,

“வேண்டாம். நான் இப்படியே இருக்கேன்.” என்றவளின் குரலும், முகமும் மாறுபட்டிருப்பதை கண்டுகொண்ட சக்தி,

“இன்னும் பத்து நிமிஷம் தானே? இப்படியே கண்டினியூ பண்ணுங்க.” என்றவாறு காரை கிளப்பிவிட்டான். 

பத்திரப்பதிவு அலுவலகத்தின் முன் காரை நிறுத்தியவன்,

“அம்மு! நீ காரிலேயே இரு. இங்க நமக்கு தெரிஞ்சவர் இருக்கார். அவரை சரிதாவுக்கு அறிமுகப்படுத்திட்டு ஐந்து நிமிஷத்தில் வந்திடுவேன்.” என்றபடி இறங்க அவனுக்கு முன்னதாக இறங்கியவள் வேகமாய் அவனருகே வந்து அவன் கரம் பற்றிக் கொண்டாள்.

‘என்ன?’ என்பது போல் புருவத்தை ஏற்றி இறங்கினாலும் மறுப்பின்றி அவளையும் அழைத்துக் கொண்டே அலுவலகத்திற்குள் சென்றான்.

அதிகாரிக்கு சரிதாவை அறிமுகப்படுத்தி செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, அனைத்தும் முடிந்ததும் தனக்கு அழைக்கும் படி சரிதாவிடம் சொல்லிவிட்டு காரில் வந்து ஏறும் வரை சுமி அவன் கரத்தை விடவே இல்லை.

சிறு முறுவலுடன் அதை ரசித்தவன், உணவகத்திற்கு அழைத்து வந்து அவளுக்கு மிகவும் பிடித்தமான சிக்கன் பிரியாணி வாங்கிக் கொடுத்தான். ஆனால் அவளால் தான் அதை ரசித்து ருசித்தென்ன நிம்மதியாகக் கூட உண்ண முடியவில்லை. சக்தி யதார்த்தமாய் செய்வது கூட அவளுக்கு வித்தியாசமாக தெரிந்து தொலைத்தது. பாதியைக் கூட உண்ணாமல் எழுந்துகொள்ள,

“பிடிக்கலையா? வேற ஏதாவது ஆர்டர் பண்ணவா அம்மு?” என்றவனிடம் அத்தனை வாஞ்சை. மறுப்பாக தலையசைத்தவள் எங்கே அவன் முன் அழுதுவிடுவோமோ என பயந்து வேகமாய் கடந்து சென்றுவிட்டாள்.

‘இவளுக்கு என்ன பிரச்சனை? ஏன் என்னவோ போல இருக்கா?’ தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டவன் சுமியை கவனிக்கத் துவங்கினான்.        

துணிக்கடைக்கு அழைத்து சென்றவன்,

“உனக்கு வேண்டியதை வாங்கிக்கோ அம்மு…” என பட்டுப்புடவைகள் இருக்கும் பகுதிக்கு கூட்டி போக, அங்கிருக்கும் புடவைகளில் அவள் கவனம் பதியாமல் போக கணவனும், கடைக்காரரும் காட்டுவதை எல்லாம் மறுத்துக் கொண்டே இருக்க,

டிசைனர் புடவைகளுக்கான பகுதிக்கு அழைத்துச் சென்றான். அங்கேயும் இதே கதை தொடர, அவனாகவே தனக்கு பிடித்த புடவை ஒன்றை வாங்கினான். அடுத்ததாக நகை கடைக்கு அழைத்து சென்றவன்,

“மூணு பவுன்ல உனக்கு பிடிச்ச நகை வாங்கிக்கோ அம்மு. இப்போதைக்கு அவ்வளவுக்கு தான் காசு இருக்கு. கொஞ்ச நாள் போனதும் கூட பவுனுக்கு வாங்கி தரேன்.” என சொல்ல,

“எனக்கு எதுவும் வேண்டாம்.” எங்கோ பார்த்தபடி சொல்ல,

“எதை காட்டினாலும் வேண்டாம் வேண்டாம்னா என்ன அர்த்தம்?” என்றவனுக்கு மூக்கின் மேல் நின்றது கோபம்.

“எங்கிட்ட எல்லாமே இருக்கு. எனக்கு எதுவும் வேண்டாம்.” சுள்ளென சொல்ல, அவனுக்கு முகம் சுருங்கிப் போனது. ஆழ்ந்த மூச்சின் மூலம் தன்னை சமன் செய்து கொண்டவன்,

“பெரும் பணக்காரரின் செல்ல மககிட்ட இல்லாததுன்னு எதுவும் இருக்குமா என்ன? இருந்தாலும் பிறந்தநாள் பரிசா ஆசை ஆசையா வாங்கித் தரேன் அதை ஏன்டி வேண்டாம்ன்னு சொல்ற? எனக்காக எதாவது வாங்கிக்கோடீ.” இதமாகவே சொன்னான்.

“எனக்கு நீங்க தான் வேணும்! உங்களை தவிர வேறெதுவும் வேணாம் மாமா! மொத்தமா எனக்கு மட்டுமே உங்களை கொடுக்க முடியுமா? முடியாது தானே… வாங்க போகலாம்!” என்றவள் அவன் பதிலுக்கெல்லாம் காத்திருக்கவில்லை வேகமாய் வெளியே சென்றுவிட்டாள்.

‘என்ன உளறல் இது? சில நேரம் இப்படித் தான் என்னை குழப்பியடிப்பா…’ எரிச்சலுற்றாலும், தனக்கு பிடித்தமான கொலுசு ஒன்றை வாங்கிய பிறகு தான் வந்தான்.

அவளோ முகத்தை மூன்று முழத்திற்கு தூக்கி வைத்துக் கொண்டு காரின் அருகே நின்றிருந்தாள். மனையாளோடு தனித்து பேச வேண்டியிருந்ததால் நேராக பிரபலமான ஹோட்டல் ஒன்றிற்கு சென்றவன் சூட் ரூம் புக் செய்தான். அதுவரை இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அறைக்குள் வந்ததும் வராததுமாக,

“அம்மு! உனக்கென்ன பிரச்சனை? ஏன் இப்படி ஒட்டாம நடந்துக்கற?” நேரடியாக கேட்க,

“பிரச்சனை எனக்கில்லை… உங்களுக்கு தான்.” என்றவள் கட்டிலில் குப்புற படுத்துக் கொண்டாள்.   

 “ஹேய்! எழுந்து உட்காருடி! நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன், குதர்க்கமாவே பேசிட்டுருக்க, நகைக் கடையில என்னவோ உளறினியே… என்ன?” சுள்ளென கேட்க, வேகமாய் எழுந்து அமர்ந்தவள், 

“ஹாங்! இப்போ நான் பேசுறதெல்லாம் உங்களுக்கு உளறலாத் தான் தெரியும்… அந்த சரிதா பேசுறது மட்டும் தேன் வந்து பாயிற மாதிரி இருக்குமே…” என்றவளுக்கு குரல் உடைந்து அழுகை வந்தது. மனையாளின் மாற்றத்திற்கான காரணம் புரிபட சக்திக்கு சிரிப்பு தான் வந்தது.

“அம்மு! அம்மு! இது தான் உன் பிரச்சனையா? அரைகுறையா எதையாவது பார்த்துட்டோ, கேட்டுட்டோ எந்த முடிவுக்கும் வரக் கூடாதுன்னு சும்மாவா சொன்னாங்க? என் லூசு பொண்டாட்டி! சரிதா என்ன பேசினான்னு தெரிஞ்சா உன் காதுல தேன் அருவியே பாயும்…” கண்ணோரம் சுருங்கச் சிரித்தபடி சொன்னான்.

“அப்படி என்ன சொன்னாங்க?” என்றவள் முகம் இன்னுமும் சிரிப்பை களவு கொடுத்திருந்தது.

“அவ சொன்னதை அப்புறம் தெரிஞ்சுக்கலாம், முதல்ல உனக்கு என்னை பத்தின நினைப்பு தான் என்ன? கையை விட்டா அவ கூடவே காணாம போயிருவேங்கிற மாதிரியே சுத்தினியே ஏன்? எனக்கு மட்டுமே உங்களை தர முடியுமான்னு மட்டும் கேட்டா அது சரியான கேள்வி.

கூடவே முடியாதுல்லன்னு நீயே பதிலையும் சொன்னியே… அது எப்படி? என்னை பார்த்தா ஒரே சமயத்தில் பல பெண்களோட தொடர்பில் இருக்க மூன்றாம் தர பொறுக்கி மாதிரியா தெரியுது?” என்றவனிடம் பெரும் கோபமும், இயலாமையும் போட்டி போட்டது.

“இல்ல… வந்து… நீங்க சரிதா கையை பிடிச்சுக்கிட்டு… கூடவே என் கையையும்…” என்றதும் உக்கிர பார்வை ஒன்றை அவள் மீது வீச, சுமிக்கு தன் தவறு புரிய,

“சாரி! சாரி… சாரி மாமா.” கெஞ்ச துவங்கிவிட்டாள்.

“பேசாத அம்மு! செம கோவத்தில் இருக்கேன். பிறந்தநாளும் அதுவுமா அடிச்சு அழ வச்சுடக் கூடாதேன்னு கையை கட்டிக்கிட்டு இருக்கேன்.” என சொல்லிக் கொண்டிருக்க, சரிதாவிடமிருந்து அழைப்பு வந்தது. அதை உயிர்ப்பித்து காதுக்கு கடன் கொடுத்தவன்,

“சொல்லுங்க சரிதா, வேலையெல்லாம் முடிஞ்சுடுச்சா?” என கேட்க,

“எல்லாம் முடிஞ்சுடுச்சு. நாளைக்கு ரெஜிஸ்டர் பண்றதுக்கான டாகுமெண்ட் டைப் பண்ணியாச்சு. அதை நீங்க வந்து வாங்கிக்கிறீங்களா இல்ல நான் கொண்டு வந்து கொடுக்கட்டுமா?” என கேட்க,

“நானே வரேன்.” இணைப்பை துண்டித்தவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்ப,

“மாமா! நானும் வரேன்.” சுமி வேகமாய் வர,

“அவசியமில்லை. இந்த ஜென்மத்தில் என் மனசையும், உடம்பையும் உன்னை தவிர வேற யாருக்கும் பங்கிட்டு கொடுக்கும் எண்ணம் எனக்கில்லை! என்னை நம்பினா இங்கயே இரு. இன்னும் சந்தேகமா இருந்தா ஆட்டோ பிடிச்சுக்கிட்டு என் பின்னாடியே என்னை வேவு பார்க்க வா!” எனறவன் அவள் பதிலுக்கெல்லாம் காத்திருக்கவில்லை.

“லூசு! லூசு! மாமா சொல்ற மாதிரி நீ சரியா லூசு தான் சுமி! எதையும் முழுசா தெரிஞ்சுக்காம கண்டதையும் கற்பனை பண்ணி வாங்கிக் கட்டிக்கிறியே உன்னை என்ன பண்றது? வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சே… இப்போ எப்படி இறக்குறது? வேற வழி இல்லை! பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தான் ஆகணும். ஏறுவோம்!” என்றவள் மனதில் பெரும் திட்டம் உருவாக, நேராக ஹோட்டல் ரிசப்ஷனுக்கு தான் சென்றாள்.                                           

சரிதாவோ, சக்தி மட்டும் தனியாக வருவதைக் கண்டு,

“சுமி எங்க?” தேடலுடன் கேட்க,

“அவளுக்கு தலைவலி அதான் ரூம்ல ரெஸ்ட் பண்றா.” எனச் சொல்ல,

“அவங்க தலைவலிக்கு காரணம் நான் தான் இல்லையா?” என்றதும் மறுப்பாக தலையசைத்தவன்,

“நான் தான்!” என்றான்.

“சுமி போன் நம்பர் கிடைக்குமா?” என்றதும் தயங்கமால் மனையாளின் எண்ணை பகிர்ந்தவன், காபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்றான். அங்கே இருவரும் காபியும், ஹனி கேக்கும் உண்டு முடித்து வெளியே வர வாசலில் நின்ற பூக்கார பெண்மணி சரிதாவிடம்,

“பூ வாங்கிக்கோ பாப்பா…” என மல்லிகை சரத்தை நீட்ட, மறுப்பின்றி வாங்கிக் கொண்டவள்,

“இதை நான் கொடுத்ததா சுமிகிட்ட கொடுத்துடுங்க. கிளம்பறேன்.” மென்முறுவலுடன் சக்தியின் வாழ்வை விட்டு ஒரேயடியாக கிளம்பியும் விட்டாள்.                       

‘ராங்கி! என்ன பண்றான்னு தெரியல, இன்றைக்கு முழுக்க சரியாவே சாப்பிடலை. பசி வேற தாங்கமாட்டா…’ என்றெண்ணியபடி பார்வையை சுழலவிட, புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா அவனை பார்த்து கண் சிமிட்ட, கால்கள் தானாகவே அங்கு சென்றுவிட்டன.

அல்வாவை வாங்கிக் கொண்டு ஹோட்டல் அறைக்கு வந்தவன், அழைப்புமணியை அழுத்திக் கொண்டிருக்க, சுமி கதவை திறந்தபாடாய் இல்லை.

‘என்ன தான் பண்ணித் தொலைக்கிறான்னு தெரியல…’ எனும் முனுமுனுப்புடன், கைபேசிக்கு அழைக்க,

“சொல்லுங்க மாமா…” துள்ளலுடன் கேட்க,

“எங்கடி இருக்க?” என்றவனிடம் கோபம் எட்டிப்பார்த்தது.

“ரூம் நம்பர் 503 வாங்க மாமா.”

“அங்க என்ன பண்ற?”

“வந்து பாருங்க.” என்றவள் படக்கென வைத்துவிட்டாள்.  

அடுத்த சில நொடிகளில் அங்கு வந்த சக்தி கதவை திறந்த சுமியை பார்த்து திகைத்துப் போய் நின்றுவிட்டான். அவன் வாங்கியிருந்த டிசைனர் புடவை உடுத்தி, சென்டர் கிளிப்போடு கூந்தலை விரியவிட்டு, லேசான ஒப்பனையுடன் தேவதை போல் நின்றவள்,

“வாங்க மாமா!” கணவனின் கரம் பற்றி உள்ளே இழுக்க,

“இப்போ எதுக்கு ரூமை மாற்றின? மகாராணிக்கு சூட் ரூம் பத்தாதோ?” சிடுசிடுக்க,

“ஆமா! பத்தாது. அதான் ஹனிமூன் சூட்டுக்கு மாறிட்டேன்.” மிதப்பாய் சொல்ல, தன்னிடம் ஒருவார்த்தை கூட கலந்தாலோசிக்காமல் தன் போக்கில் செயல்பட்டிருப்பவளின் மீது எரிச்சலும், கோபமும் ஒருங்கே தோன்ற,

“நல்லது! நீயே இரு!” வேகமாய் வெளிநடப்பு செய்ய எத்தனிக்க, கதவின் முன் கரங்களை விரித்து நின்றவள்,

“ஹனிமூன் நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவான விஷயம்! நீங்க கிளம்பி போயிட்டா, நான் மட்டும் என்ன செய்ய?” என்றதும் தான் அவனுக்கு அவளது நோக்கம் புரிய,

அறை முழுவதும் தன் பார்வையை சுழலவிட, மெத்தையில் பூ அலங்காரம் செய்யப்பட்டிருக்க ஆங்காங்கே வாசனை தரும் மெழுகுவர்த்திகள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. கதவோடு மனையாளை சிறை செய்தவன், மூச்சுக் காற்று முகத்தில் விரவும் நெருக்கத்தில் நின்று,

“இதுக்கு என்ன அர்த்தம்?” கண்கள் பார்த்துக் கேட்க,

“யாருக்குத் தெரியும்? சினிமால பார்த்ததை ரீகிரியேட் பண்ணியிருக்கேன்.” கள்ள சிரிப்புடன் தோள்களை குலுக்கினாள்.  

“நம்பிட்டேன்! நம்பிட்டேன்! காலையில இருந்து சரியா சாப்பிடாம இருக்கியேன்னு அல்வா வாங்கிட்டு வந்தேன், கொட்டிக்கோ. அப்புறம் இதை சரிதா உங்கிட்ட கொடுக்க சொன்னா.” என மல்லிகை பூவையும், அல்வாவையும் கொடுக்க,

‘பார் டா! சாரே வாங்கிட்டு வருவாராம், ஆனால் சரிதா வாங்கிக் கொடுத்தான்னு கதை விடுவாராம். நாங்களும் நம்பிட்டோம், நம்பிட்டோம்!’ என எண்ணியவள்,

“அட! நானே உங்களை பூ வாங்கிட்டு வர சொல்லணும்ன்னு நினைச்சேன். கோபமா போனீங்களா அதான் சொல்லலை. சரிதாவோட போன் நம்பர் கொடுங்க தேங்க்ஸ் சொல்லிடறேன். சமயமறிஞ்சு உதவி பண்ணியிருக்காங்க.” மிதப்பாக கேட்க,

“சரிதா உன் நம்பர் கேட்டா, கொடுத்திருக்கேன். அவளே போன் பண்ணுவா அப்போ சொல்லு… இப்போ தள்ளு!” என்றவன் குளியறைக்குள் புகுந்து கொண்டான்.

‘நிஜமாவே சரிதா தான் வாங்கிக் கொடுத்திருப்பாங்களோ?!’ எண்ணிய சமயம் அவள் கைபேசிக்கு சரிதாவிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

“சுமித்ரா! நான் சரிதா. தெரிஞ்சோ தெரியாமலோ இன்றைக்கு உங்க மனசு சங்கடப்பட நானும் ஒரு காரணமாயிட்டேன். மன்னிச்சுடுங்க! என் சக்தி உங்க மாமாவாகலாம்! ஆனால் என்றைக்குமே உங்க மாமா என் சக்தியாக முடியாது!

இந்த ஜென்மத்தில் எனக்கும் சக்திக்குமான உறவு உங்களால முடிவுக்கு வந்துடுச்சு. அடுத்த ஜென்மத்திலாவது எங்களுக்கு குறுக்க வராதீங்க. குட் பை!”  என்ற செய்தியில், கொஞ்சம் கடுப்பும், நிறைய ஏக்கமும் இருப்பது புரிய,

“அடுத்த ஜென்மத்தில் இல்ல இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் மாமாவுக்கும், எனக்கும் நடுவில் நீங்க வராதீங்க! குட் பை!” என்றவளிடம் கோபம் இல்லை குறும்பு தான் மிளிர்ந்தது.

இப்படித் தான் சிறுபிள்ளைத்தனமாக எதாவது பதில் கொடுப்பாள் என சரிதா கணித்து வைத்திருந்ததாள் அவளிடமும் இப்பொழுது கோபத்திற்கு பதில் குறுநகை தான் குடிகொண்டது.                                      

குளித்து முடித்து இடையில் பூந்துவாலையும், மேனியெங்கும் நீர்திவலையுமாய் வந்தவனை கண்டவளுக்கு வெட்கம் வர, வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

“கொட்டிக்கிட்டியாடி குட்டிபிசாசே!” என்றபடி வேஷ்டியும், கையில்லா வெள்ளை பணியனுமாய் அவளருகே வர,

‘அம்மாடி! இந்த உடுப்பில் கூட அநியாயத்துக்கு அழகா இருக்கானே…!’ அவள் வாய் பிளந்து நிற்க, 

‘புது புடவை, தலை நிறைய மல்லிகை பூ, முகமெல்லாம் வெட்கச் சிரிப்புன்னு ஒரு மார்க்கமாத் தான் இருக்க… எத்தனை நாள் என்னை கதறடிச்சிருப்ப, கொஞ்ச நேரம் நீயும் அதை அனுபவி, அப்புறம் வச்சுக்கறேன் கச்சேரியை!’ மனம் மந்தகாசமாய் மலர்ந்தாலும்,

“அம்மு! எனக்கு ஆபீஸ் ஒர்க் இருக்கு. ரூம் சர்விசுக்கு கால் பண்ணி உனக்கு வேணும்கிற சாப்பாட்டை ஆடர் செய்து சாப்பிட்டு தூங்கு.” என்றவன் மடிக்கணினியோடு சோஃபாவில் அமர,

“என்னது சாப்பிட்டு தூங்கவா? யோவ் மாமா! உனக்கெல்லாம் அறுபதாம் கல்யாணமே நடந்தாலும் ஃபஸ்ட் நைட் மட்டும் நடக்கவே நடக்காது! கட்ட பிரம்மச்சாரியாவே கைலாயம் போகப்போற பாரு!” என்றவளது ஏக்கம் புரிய,

‘வாடி வா! நானும் இப்படித் தானே ஏங்கியிருப்பேன்… யார்கிட்ட?’ உள்ளூர கெக்கெலி கொட்டி சிரித்தவன்,

“உன்னை மாதிரி குட்டிபிசாசோட குடும்பம் நடத்துறதுக்கு சிங்கிளா இருந்து செத்து போறதே கெத்து தான் டீ!” சிரிக்காமல் சொல்ல…

(மேய்கிறது எருமை! இதில் என்ன பெருமை? அதென்னவோ நாங்க சூழலை உருவாக்கி கொடுத்தாலும் இந்த பையன் பிரம்மச்சரிய விரதம் தான் இருப்பேன்னு அடம்பிடிக்கிறான். இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல மக்களே!)

சத்தியமா இதோட நிறுத்தணும்ன்னு நினைக்கல! ஆனா என்ன செய்ய? 24 பக்கம் வந்துடுச்சே அதான் நிறுத்திட்டோம். இப்போ நம்ம சுமி என்ன செய்திருப்பான்னு நினைக்கிறீங்க? பகிர்ந்துக்கோங்க. சரியா சொன்னா அடுத்த பதிவு விரைவில் பரிசாய் வரும்.     

இம்சை தொடரும்…   

8 Comments

 1. Sorna says:

  Appadi sarithavukku mudivu kattiyachu☺️☺️…. 🥰🥰

  Liked by 1 person

  1. ammuyoga says:

   enna oru aanatham!?

   Like

 2. sridevigiridharan says:

  சரிதா chapter முடிஞ்சது 👍🏻👍🏻👍🏻
  கரெக்ட் இவனுக்கெல்லாம் 60 வயசானாலும் first night கிடையாது ❤❤❤❤

  Liked by 1 person

  1. ammuyoga says:

   ha ha ha… rightu!

   Like

 3. suganguna says:

  Nice ud sis

  Liked by 1 person

 4. Anonymous says:

  PDF download agamatenguthu sister

  Liked by 1 person

  1. ammuyoga says:

   எல்லோருக்கும் ஆகுதே… உங்களுக்கு ஏன் ஆகமாட்டேங்குதுன்னு தெரியலையே.

   Like

Leave a Reply to suganguna Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s