
காலங்காலையில் எழுந்தோமா, காலைக்கும், மதியத்திற்குமான உணவை தயாரித்தோமா, பிள்ளைகளையும், கணவரையும் தயார் செய்து பள்ளிக்கூடத்திற்கும், வேலையிடத்திற்கும் அனுப்பினோமா, வழக்கமான வீட்டு வேலைகளை முடித்தோமா, அக்கடாவென கதை எழுத அமர்ந்தோமா என்றிருந்த காலமெல்லாம் கொரோனவினால் மலை ஏறிப் போக, எந்நேரமும் வீட்டுவேலைகளை செய்வதிலேயே பொழுது கழிகிறது.
இத்தனைக்கும் கொரோனாவிற்கு முன்பும் இதே வேலைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நேரம் ஏன் இப்பொழுது மட்டும் இப்படி கரைந்து காணாமல் போகிறது என்ற யோசனை தான் நேரத்தை நம் வசப்படுத்தும் இப்பதிவிற்கான அடித்தளம்.
நமது நேரத்தை நாம் எவ்வளவு தரமாக நிர்வகிக்கிறோம் என்பது தான் பெரும்பாலும் நம் வாழ்வின் தரத்தை தீர்மானிக்கிறது. நேர நிர்வாகம் (time management) என்பது தனிநபர் நிர்வாகம் (self management) மற்றும் வாழ்க்கை நிர்வாகம்(life management) தான். இந்த உலகில் உள்ள அனைவருக்கும் காலம் எந்த பாரபட்சமும் இன்றி, இருபத்து நான்கு மணி நேரத்தை கொடுத்திருக்கிறது. அதை பொக்கிஷமாய் கருதி மிகச் சரியாய், பயனுள்ளதாய் உபயோகிக்கிறவர்கள் வெற்றியாளர்களாய் உலா வருகிறார்கள்.
ஆமாங்க! எனக்கு நேரம் போதவே மாட்டேங்குதுன்னு சிலர் சொல்ல, இன்னும் சிலரோ நேரம் போகவே மாட்டேங்குதுன்னு சொல்வாங்க. ஒரு மனுஷன் எவ்வளவு வேலை தான் பார்க்கிறது? இப்படியா அடுத்தடுத்து வேலை வந்துகிட்டே இருக்கும்ன்னு கூட சில நாட்களில் யோசித்ததுண்டு. இதற்கான முக்கிய காரணம், நேரத்தையும், வேலைகளையும் சரியாக நிர்வகிக்காததும், அயர்ந்து போகும் வரை அத்துணை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வதும் தான்.
சிலநாட்களில் உற்சாகமும், உத்வேகமும் ஊற்றாய் பொங்க, “உன்னால் முடியாதென்று ஊரே சொல்லும், நம்பாதே… சிங்கப்பெண்ணே… சிங்கப்பெண்ணே!” ன்னு அவ்வளவு வேலையையும் ஒரே நாளில் முடித்துவிட்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு சோம்பலின் நாயகியாய் சோர்ந்து போய் இருந்திருக்கிறேன். உங்களில் யாருக்கேன்னும் அப்படி ஓர் அனுபவம் இருந்திருக்கிறதா தோழமைகளே? பகிர்ந்துகொள்ளுங்கள்…
“காலம் பொன் போன்றது” என்பார்கள், உண்மையில் காலம் பொன்னை விடவும் அரிதானது. தங்கத்தை தொலைத்து விட்டால் மறுபடியும் சம்பாதித்துவிடலாம் ஆனால் இழந்துவிட்ட ஒரு நொடியைக் கூட நம்மால் திரும்பப் பெற முடியாது.
ஒவ்வொரு உயிரினமும் ஒரு காலக்கெடுவோடு தான் இந்த பூமிக்கு வந்து தன் வாழ்க்கையை வாழ்கிறது. மனிதனுக்கு மட்டுமே தன் ஆயுட்காலத்தை அதிகப்படுத்திக் கொள்வதையோ அல்லது துரிதமாய் வாழ்ந்து முடிப்பதையோ தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புத்திசாலி மனிதன் தன் வாழ்நாளை தன் வசப்படுத்தி நிறைய புதுப்புது வாழ்வியல் நுணுக்கங்களை கற்று அவற்றை தன் வசப்படுத்தி வெற்றி பெறுகிறான்.
வெற்றியாளர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. சில சமயங்களில் குறைவான திறமைகளும், மிகக் குறைவான வாய்ப்புகளும் கிடைத்தாலும் கூட வெற்றியாளர்கள் அதிகமான சாதனைகளை நிகழ்த்துகின்றனர். ஏனென்றால் அவர்கள் தங்கள் நேரத்தை சிறப்பான விதத்தில் மிகத் திறமையாய் கையாளுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக மட்டும் நேர நிர்வாகத்தை மேற்கொண்டால் போதாது. நமது ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கி நிர்வகிக்க வேண்டும். அப்பொழுது தான் ஆல் இன் ஆல் (all in all) அழகு ராணிகளாய் அங்கீகரிக்கப்படுவோம்.
அதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது நமக்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது. அதாவது me time! அதெல்லாம் நான் செய்கிறேனே, எனக்கான நேரத்தில் தான் நான் யூ டியூப் பார்க்கிறேன், நாடகம் பார்க்கிறேன், நண்பர்களோடு அளவளாவுகிறேன், முகநூலில் உலா வருகிறேன் என யோசிப்பவர்கள் நிற்க, மேற்சொன்ன அத்துணை விஷயங்களும் மீ டைம்-ல் சேராது.
நாங்கள் சொல்லும் நமக்கான நேரம் என்பது வெளியுலக தொடர்பில் இருந்து நம்மை துண்டித்துக் கொண்டு தினமும் ஐந்தில் இருந்து பத்து நிமிடங்கள் அமைதியாய் அமர்ந்து நம்மை பற்றி சிந்திப்பது! நாம் செய்ய வேண்டியவற்றை பற்றி சிந்திப்பது!
ஹலோ! ஹலோ! நாங்க எல்லாம் எதையும் பிளான் பண்ணி தான் பண்ணுவோம் தெரியும்ல…! அப்படின்னு கேட்கத் தோணுதா? ரொம்ப நல்லதா போச்சு, நீங்க எப்படி உங்க நேரத்தை நிர்வகிக்கிறீங்கன்னு எங்களோடு பகிர்ந்துக்கோங்க… உங்களுக்கு புண்ணியமா போகும். நாம் பின்பற்றும் நல்ல விஷயத்தை நாலுபேருக்கு சொல்லிக் கொடுப்பதால் உண்டாகும் இன்பமே தனி! அதை நீங்களும் அனுபவிக்க எங்கள் வாழ்த்துக்கள்.
சரி தான்! இதெல்லாம் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் எப்படி நேரத்தை நிர்வகிப்பது என்பதில் தானே சிக்கலே…! என்ற எண்ணம் தோன்றுகிறதா? வாங்க நேர நிர்வாகத்தை அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு, தொகுத்து சிறந்த உத்திகளை தெரிவு செய்து திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி காண்போம்.
பெரும்பாலானோர் பல வருடங்களில் அல்லது தங்களது வாழ்நாளில் சாதிக்கின்ற விஷயங்களை விட அதிகமான விஷயங்களை அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் நாம் சாதித்துக் காட்ட நேரத்தை திறமையாக நிர்வாகம் செய்யும் உத்திகளை தொடர்ந்து இனி வரும் ஒவ்வொரு பதிவிலும் தெரிந்து கொள்ளலாம்.
சிந்தித்து செயல்படுவோம்…! சிகரம் தொடுவோம்…!! வெற்றி நிச்சயம்!!!