கடன் தொல்லைகள் நீங்க…

கடன் தொல்லைகள் நீங்க வேண்டுமா? பிறரிடமிருந்து கடன் பெறாமலேயே போதிய பொருளாதாரத்துடன் வாழ வேண்டுமா? ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள்…

படனம் (பாராயணம்) செய்யும் முறை:

நாள் தோறும் இறைவனை வேண்டி ஓத வேண்டும். இதற்கு இசை தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. நமக்கு தெரிந்த விதமாய் பாடலாம். ஆனால் வாய்திறந்து தான் படனம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது சொற்கள் வெளிப்பட வேண்டும்.

அச்சொற்களில் உள்ள ஒலி அலைகள் மந்தர ஆற்றல் உடையவை. அவை நமக்கு அரணாக அமையும். அதனால் மெல்லிய குரலிலாவது வாய்விட்டு படனம் செய்ய வேண்டும் என்றும், படிக்கத் தெரியாதவர்கள் பிறரை படிக்கச் சொல்லி கேட்கலாம் என்றும் திருஞானசம்பந்தர் பெருமானே சொல்லியிருக்கிறார்.

ஓதத் துவங்கிய சில நாட்களிலேயே மாற்றம் நிகழ்வதை நீங்கள் உணருவீர்கள். இதை நாங்கள் செய்து பயன்பெற்ற பிறகே உங்களுடன் பகிர்கிறோம். நீங்களும் நம்பிக்கையோடு படித்து பயன் பெற எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக் கொள்கிறோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!

இடம்: திரு ஆலவாய் (மதுரை)
இறைவன் : சொக்கநாதர்
இறைவி: மீனாட்சியம்மை

பதிகத்தின் வரலாறு:

மதுரையில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் இரவு நேரத்தில் சமணர்கள் தழல் கொண்டு புகுந்து தீமூட்டினர். அடியவர்கள் விரைந்து தீயை அணைத்தனர். பாண்டிய நாட்டில் ஆட்சி முறை தவறியது என்றும், இதன் பொறுப்பு அரசனையே சேரும் என்றும் சம்பந்தர் எண்ணினார். அதனால் சைவர்கள் தங்கியிருந்த மடத்தில் இட்ட நெருப்பானது “பையவே (மெல்லவே) சென்று பாண்டியனுக்கு ஆகுக” என்ற பதிகத்தைப் பாடியருளினார். உடனே பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் (ஜுரம்) பீடித்தது.

சமணர்கள் தங்கள் மருந்துகளாலும் மந்திரங்களாலும் மன்னது வெப்பு நோயைத் தணிக்க முயன்றனர். நோய் இன்னும் அதிகரித்தது. மகாராணி மங்கையர்க்கரசியாரும், மந்திரி குலச்சிறையாரும் அரசனிடம் “இது சமணர்கள் செய்த பாவச் செயலின் விளைவு. சம்பந்தர் வந்தால் இந்நோய் குணமாகக் கூடும்” என்று சொன்னார்கள். மன்னனும் அதற்கு உடன்பட்டான்.

அவ்விருவரும் சம்பந்தரிடம் சென்று விண்ணப்பித்தனர். சம்பந்தரும் அதற்கு இசைந்தார். முதலில் திருவாலவாய்க் கோயில் சென்று சொக்கநாதரின் திருவுள்ளம் அறிந்துகொள்ள இரு பதிகங்கள் பாடினார். (“காட்டு மாவது” மற்றம் “வேத வேள்வியை” என்று தொடங்கும் பதிகங்கள் இவை) இறைவன் திருவுள்ளத்தை அறிந்து கொண்ட பின் சம்பந்தர் பாண்டிய மன்னனது அரண்மனைக்குச் சென்றார்.

திருச்சிற்றம்பலம்.

பாடல் எண் : 1

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

பாடல் எண் : 2

வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம் உடைக் கார் அமண் தேரரை
எய்தி வாது செயத் திருவுள்ளமே
மைதிகழ் தரு மாமணி கண்டனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

பாடல் எண் : 3

மறை வழக்கம் இலாத மாபாவிகள்
பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திருவுள்ளமே
மறி உலாம் கையில் மா மழுவாளனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

பாடல் எண் : 4

அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து, வாது செயத் திருவுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

பாடல் எண் : 5

அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாது செயத் திருவுள்ளமே
வெந்தநீறு அது அணியும் விகிர்தனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

பாடல் எண் : 6

வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

பாடல் எண் : 7

அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல, வாது செயத் திருவுள்ளமே
தழல் இலங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

பாடல் எண் : 8

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாது செயத் திருவுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

பாடல் எண் : 9

நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திருவுள்ளமே
மாலும் நான்முகனும் காண்பு அரியதோர்
கோல மேனியது ஆகிய குன்றமே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

பாடல் எண் : 10

அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாது செயத் திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

பாடல் எண் : 11

கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே.

திருச்சிற்றம்பலம்

பொழிப்புரை :

உமாதேவியைத் தன் உடம்பில் ஒரு பாதியாக வைத்துள்ள பரமனே ! தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! வேதத்தையும் , வேள்வியையும் , பழித்துத் திரியும் பயனற்றவர்களாகிய சமணர்களையும் , புத்தர்களையும் வாதில் வென்றழிக்க உம்மை வேண்டுகின்றேன் . உமது திருவுள்ளம் யாது ? உலகனைத்தும் உமது புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

கருநீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானே ! வேதநெறிகளைப் பின்பற்றி ஒழுகாத வஞ்சனையையுடைய கரிய சமணர்களையும் , புத்தர்களையும் கூட்டி வாது செய்து வெல்ல விரும்புகின்றேன். உமது திருவுள்ளம் யாது ? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் முதல்வரே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

மான்கன்றையும் , மழுவையும் கைகளில் ஏந்தியுள்ள சிவபெருமானே ! வேத நெறிப்படி ஒழுகாத கொடிய பாவிகளாகிய , கையினால் முடி பறிக்கப்பட்ட தலையோடு பாயை உடுத்தித் திரியும் சமணர்கள் தோல்வியுறும்படி அவர்களோடு வாது செய்ய உமது திருவுளம் யாது ? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் முதல்வரே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

ஒளிபொருந்திய பிறைச்சந்திரனை அணிந்த முதல்வனே ! வரையறுக்கப்பட்ட வேதத்தின் ஆறு அங்கம் வகுக்கும் கொள்கைகளை வெறுக்கும் சமணர்களாகிய கீழோர்களைத் தடுத்து அவர்களோடு அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது ? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிகவேண்டும் . திருவருள்புரிவீராக !

நெருப்பில் வெந்த திருவெண்ணீற்றினை அணியும் வேறுபட்ட இயல்புகளையுடைய சிவபெருமானே ! அந்தணர்கள் செய்யும் அரிய வேதக்கிரியைகளை நினைத்துப் பார்க்காத சமணர்களின் வலிமைகள் சிதறும்படி அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது ? அழகிய திருஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள் புரிவீராக !

காட்டில் வாழும் யானையின் தோலை உரித்துப் போர்த்த என் உள்ளங் கவர்ந்த கள்வரே ! அந்தணர்கள் விரும்பிச் செய்கின்ற வேள்விச் செயல்களை இகழ்ந்து பேசும் வன்னெஞ்சினராகிய அமண்குண்டர்களை அடியேன் வாது செய்து விரட்ட உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள் புரிவீராக !

நெருப்புப் போன்று விளங்கும் சிவந்த திரு மேனியுடைய சிவபெருமானே ! அழலோம்பி அருமறையாளர்கள் செய்யும் காரியங்களைப் பயனற்றவை என்று கூறும் சமணர்களின் பலவகைத் திறமைகளும் விலக வாது செய்ய எண்ணுகின்றேன் . உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டுகின்றேன் . திருவருள்புரிவீராக !

சிறந்த வாள்வீரனான இராவணனுக்கு மிக்க அருள் புரிந்தவரே ! திருநீறு பூசியவர் மேல் பட்டு வீசும் காற்றடிக்கும் இடத்திலும் நில்லாத வன்கண்மை பொருந்திய உள்ளமுடைய சமணர்களின் பிழையைத் தெளிவித்து வாது செய்ய , உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

திருமாலும் , பிரமனும் காணுதற்கரியவராய் , அழகிய திருமேனியோடு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற சிவ பெருமானே ! கரிய உடலையுடைய சமணர்களோடு உமது உயர்வினை வெளிப்படுத்தும் வண்ணம் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

சினந்து பேசும் இயல்புடைய சமண , புத்தர்களால் காணஇயலாத தலைவரே ! முன்னொரு காலத்தில் முப்புரங்களை எரித்த அழகரே ! உம்முடைய பொன்போன்ற திருவடிகளைப் போற்றாத சமணர்கள் தோற்றோட வாதம் செய்ய , உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள் புரிவீராக !

நான்கு மாடங்கள் கூடும் திரு ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரை வணங்கி , உண்ணாநோன்புகளால் வாடிய உடலைஉடைய சமணர்களோடு வாது செய்து அவர்களைத் தோல்வியுறும்படி செய்ய இறைவரது இசைவும் , அருளும் பெற்ற, மாடங்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கள் பாக்கியவான்களாவர் .

குறிப்புரை :

வேதவேள்வி – வேதத்தையும் வேள்வியையும் . நிந்தனைசெய்து உழல் – பழித்துத் திரிகின்ற . ஆதம் இல்லி – பயன்பெறாதவர்களாகிய . அமணொடு – சமணர்களோடு . ஆதம் இல்லி ஒருமைச்சொல் அமணொடு தேரரை என்ற பன்மையோடு சேர்வது வழு அமைதியால் கொள்க . ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப என்பதுபோல. எல்லாச் சமயங்களிலும் சொல்லப்படும் கடவுள் சிவன் ஒருவனே ஆகவும், ஒரு சமயத்தை அழிக்கப்புகுவது அவன் திருவுள்ளத்திற்கு ஏற்குமா ? என்பதை உணர்த்த வாதில் வென்றழிக்தத் திருவுள்ளமே என்று வினவுகிறார் .

ஆயினும் சைவ நன்னெறி பரவுதல் இன்றியமையாமையின் ஞால நின்புகழே மிக வேண்டும் என வற்புறுத்தியும் வேண்டுகிறார் . ஆதி – சிவபெருமானுக் குரிய பெயர் .

வைதிகம் – வேதத்திற் சொல்லும் நெறி . கைதவம் – வஞ்சனை . காரமண் – நெற்றியில் நீறு பூசாமையாலும் , நீராடாமை யாலும் , ஒளி குன்றிய தன்மையாலும் காரமண் எனப்பட்டனர் . எய்தி – நின்று .

மறை வழக்கம் – மறையின்படி ஒழுகுதல் . வழக்கம் , தொழிற் பெயர் ; நடத்தல் என்பது பொருள் . பறிதலை – பறிக்கப்பட்ட தலை . கையர் – வஞ்சகர் . முறிய – தோற்க . மறி – மான் கன்று .

அறுத்த – வரையறுத்துக்கூறிய . அங்கம் ஆறு ஆயின நீர்மையை – வேதத்தின் அங்கங்கள் ஆறு ஆயின தன்மையை . கறுத்த – கோபித்த . கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள ( தொல்காப்பியம் உரி இயல் . 76.) வாழ் அமண் கையர்கள் – வாழ்க்கையையுடைய அமணர்களாகிய கீழோர் . வாழ் என்பது பகுதியே நின்று தொழிற் பெயர் உணர்த்திற்று . செறுத்து – தடுத்து . செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார் ( நாலடியார் . 222) முறித்த – வளைத்த . கண்ணி – தலைமாலை .

அந்தணாளர் – அந்தணர் , அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத. ( தி .7. ப .55. பா .1.) என்றதும் காண்க . புரியும் – செய்கின்ற . அருமறை – அரிய வேதக்கிரியைகளை , காரண ஆகுபெயர் . சிந்தை செய்யா – நினைத்துப் பார்க்காத . திறங்களை – வலிமைகளை . சிந்த – சிதற .

வேட்டு – விரும்பி . பொருளை – காரியத்தை . விளி மூட்டு – இகழ்ச்சி செய்கின்ற . விளி இப்பொருளாதலை கூற்றத்தைக் கையால் விளித்தற்று என்ற திருக்குறளிற் காண்க . முருடு அமண் – வன்னெஞ்சை உடைய அமணர் . முருடு – இலேசில் பிளக்க முடியாத கட்டை . வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை என்பது திருவாசகம் . முருடு இங்குப் பண்பாகுபெயர் . ஓட்டி வாது செய – வாது செய்து ஓட்ட என வினையெச்ச விகுதி மாறிக் கூட்டுக . காட்டிலானை – காட்டில் வாழும் யானை . வனசரம் . ஏனைய கிரிசரம் , நதிசரம் என்பன .

அழல் ( அது ) ஓம்பும் – அக்நி காரியங்களைச் செய்துவரும் . திறம் – தன்மை , விழலது – விழலின் தன்மையது ; பயனற்றது . விழல் – பயனற்ற ஒரு வகைப்புல் . திறத்திறம் – பலவகைப் பட்ட திறமைகள் . திறம் – வகை . தன்மை எத்திறத்து ஆசான் உவக்கும் என்பது நன்னூல் . கழல – தங்கள் சமயத்தினின்றும் விலக . சைவன் – சிவன் .

திருநீறு பூசியவர்மேல் பட்டு வீசும் காற்றடிக்கும் இடத்திலும் நில்லாத சமணர் என்பது முன் இரண்டடியின் கருத்து . தேற்றி – அவர்கள் பிழையைத் தெளிவித்து . அரக்கர்க்கும் – இழிவு சிறப்பும்மை . ஆற்ற – மிகவும் . அருளினாய் – அருள் புரிந்தவனே என்ற குறிப்பு தீமை செய்தவர்களுக்கும் பேரருள் புரியும் பெருங்கருணைக் கடல் . ஆகையினால் தீயவர்களாகிய அமணர் திறத்தும் அக்கருணை காட்டின் சைவம் குன்றுமே என்னும் கருத்து .

நீலமேனி அமணர் – மேல் 2 ஆம் பாட்டில் காரமண் என்பதற்கு உரைத்தது உரைக்க . நீலம் , பச்சை , கருமை இவற்றுள் ஒன்றை மற்றொன்றாகக் கூறுவது மரபு . திறத்து – எதிரில் . நின் சீலம் – உமது சமயக் கொள்கையை. குன்றம் – நெருப்பு மலை ( அண்ணா மலை ) யாய் நின்றமையைக் குறிக்கிறது .

தென்ற . கன்ற – கோபிக்கின்ற .

கூடல் ஆலவாய் – இரு பெயரொட்டுப் பண்புத் தொகை . நான்கு மாடங்கள் கூடுதலையுடைய ஆலவாய் எனினும் ஆம் . விடை கொண்டு – வாதில் வென்றழிக்க உத்தரவு பெற்றுக் கொண்டு . வாடல் மேனி அமணர் – பட்டினி நோன்பிகள் உண்ணா நோன்பிதன்னொடும் சூளுற்று என்பது மணிமேகலை .

திருச்சிற்றம்பலம்.

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s