பணம் புரள… செல்வ வளம் பெறுக…!!!

மாலை வணக்கம் தோழமைகளே…

உங்கள் கைகளில் பணம் புரள வேண்டுமா? உங்களது செல்வ வளம் பெறுக வேண்டுமா? ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள்…

நேர்மறையான எண்ணங்களும், அமைதியான மனமும் தான் பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் முக்கிய அம்சங்கள் என இதற்கு முந்தைய பதிவுகளில் பார்த்தோம். நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பதற்கான வழிகளையும், அதில் முக்கிய அம்சமான நன்றி நவிழ்தலைப் பற்றியும் கூட தெரிந்துகொண்டோம். நேர்மறை எண்ணங்களோடு நன்றி நவிழ்தலையும் தொடர்ந்து செய்தால், நமக்கு வேண்டியதை வெகு எளிதாக அடையலாம்.

சரி, வாங்க… பிரபஞ்சத்தை நம் வசப்படுத்தி வேண்டியதை பெற்றுக்கொள்ளும் வழிகளை பார்ப்போம்…

முதலில் நமக்கு வேண்டியது என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு பணம் தான் இப்போதைய அதிமுக்கிய தேவையாக இருக்கிறது என வைத்துக் கொள்வோம். நமக்கு அப்பணம் கிடைத்தால் அந்தக்கணம் நாம் எப்படி உணர்வோம்… அதை வைத்து என்ன செய்வோம் என ஒவ்வொன்றையும் மனதில் இருத்தி கண்முன் விரியும் காட்சிப் படமாய் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அதே மனநிலையில் கீழே இருக்கும் உறுதிமொழிகளை படிக்க வேண்டும்.

முந்தய பதிவுகளில் நமது ஆழ்மனம் விழித்திருக்கும் நேரங்கள் என கூறிய தருணங்களில் தினமும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி மனப்பூர்வமாய் உணர்ந்து… நேர்மறையான மனதோடு படிக்க வேண்டும். (இதை படிச்சுட்டா மட்டும்…?! னு இழுக்காதீங்க! இன்னும் நீங்க எதிர்மறை சிந்தனையில் இருக்கீங்கங்கிறதுக்கு எடுத்துக்காட்டே அது தான். முயற்சி பண்ணுங்க… முழு மனசோட தொடர்ச்சியா ஒரு வாரம்… அப்புறம் பாருங்க மாற்றத்தை! அதுக்கு நாங்க காரண்டி! கண்டிஷன்ஸ் அப்ளை!! அந்த கண்டிஷன்ஸ் கீழ் வருமாறு)

எப்போ படிக்கலாம்…?

குறைந்தது இரண்டு முறை… காலை எழுந்ததும் முதல் வேலையாய், மற்றும் உறங்குவதற்கு முன். முடிந்தால் காலை, மாலை, தூக்கம் கண்ணை இழுப்பதற்கு சரியாய் ஐந்து நிமிடங்களுக்கு முன் என நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை படிக்கலாம்.

எப்படி படிக்கலாம்…?

ஒரு காகிதத்தில் எழுதி வைத்துப் படிக்கலாம், உங்களது கைபேசியில் ஸ்கிரீன்ஷாட் (screenshot) எடுத்துவைத்தும் படிக்கலாம். அமைதியான மனதோடு படிப்பது மிகவும் முக்கியம்.

உறுதிமொழி எப்படி இருக்க வேண்டும்…?

நாம் எதிர்பார்ப்பது நமக்கு கிடைத்துவிட்டது என்பது போல் வாக்கியங்கள் மற்றும் நமது மனநிலை இருக்க வேண்டும். உதாரணத்திற்கு என் கையில் பணம் சேரனும் என்று சொல்வதை தவிர்த்து, என் கைகளில் பணம் சேர்கிறதுன்னு சொல்லணும். கீழே இருக்கும் உறுதிமொழியை படிக்கும் பொழுது இன்னும் இலகுவாக புரிந்துவிடும்.

பணம் நம் கைகளில் அதிகப்படியாய் புரள்வதற்கான நேர்மறை உறுதிமொழி:

அனைத்து செல்வங்களும் எளிதில் என்னை வந்து அடைகிறது.

நான் பணம் சம்பாதிப்பதில் திறமையானவள்.

நான் நிறைய செல்வத்தை ஈர்க்கிறேன், செல்வமும் என்னை ஈர்க்கிறது.

என் அளவில்லா செல்வத்தை கொண்டு என்னை சுற்றி இருப்பவர்களுக்கு என்னால் உதவ முடிகிறது.

பணம் என்னை தொடர்ச்சியாக வந்தடைகிறது.

நான் எதிர்பார்ப்பதை விட அதிகமான செல்வங்கள் என்னிடம் சேர்கிறது.

நிறைய பணம் என் வாழ்க்கையில் பல நல்ல நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.

நான் தொட்டவை எல்லாம் பொன்னாகிறது.

நிறைய செல்வம் என் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டே போகிறது.

என் எண்ணம், செயல் அனைத்து செல்வங்களையும் ஈர்க்கிறது.

பணம் என் நிம்மதியான வாழ்க்கைக்கு காரணமாகிறது.

நிறைய செல்வம் நன்மையே விளைவிக்கும்

பணம் என்னை தேடி வருகிறது.

என் பொருளாதார நிலை தினமும் ஏறிக்கொண்டே போகிறது.

செல்வத்துடன் சேர்த்து நான் தினமும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் சம்பாதிக்கிறேன்.

இந்த பிரபஞ்சத்தின் மூலமாக நிறைய செல்வத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கிறேன்.

எனது வங்கி கணக்கில் அளவில்லா பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது.

நான் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறேன் .

பணம் எளிதாகவும், தொடர்ச்சியாகவும் என்னை வந்து சேர்கிறது.

என் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுகிறேன்.
நிறைய வழிகளிலிருந்து செல்வம் என்னை வந்து சேர்கிறது.

என் அளவில்லா செல்வத்தை வைத்து என் கனவுகளை நிறைவேற்ற முடிகிறது.

இது ஒரு எடுத்துக்காட்டு தான். நாங்கள் இதை ஒரு யூ-டியூப் சேனலில் தான் முதன்முதலில் பார்த்து அதை முயற்சி செய்தோம், எங்களுக்கு நல்ல பலன் தந்தது. தொடர்ந்து தினமும் இதை பின்பற்றுகிறோம். நீங்களும் இதையே தான் சொல்ல வேண்டும் என்பது இல்லை. உங்களுக்கு தேவையானதை நேர்மறையாய் நிகழ்காலத்தில் நடப்பதாக வார்த்தைகளை அமைத்து உணர்ந்து சொன்னால் சரி தான்.

உறுதிமொழியெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதில் எதுவுமே இப்போ நடக்கலையே, அப்புறம் எப்படி நடந்த மாதிரி சொல்றதுன்னு யோசிக்கிறீங்க தானே? பிரபஞ்சத்திற்கு வார்த்தைகளை காட்டிலும் உணர்வுகள் தான் புரியும். மேற்கண்டபடி சொல்லும் பொழுது நம் மனநிலை நிறைவுடன் இருக்கும். பணம் சம்பாதிக்கணுமே, இதை செய்யணுமே, அதை செய்யணுமேன்னு நினைக்காது. எல்லாம் நடந்து முடிந்துவிட்டதாக நேர்மறையாக சிந்திக்கும். பிரபஞ்சத்துக்கு அது தான் வேணும்! அதற்காகத்தான் இப்படி சொல்கிறோம்.

எத்தனை நாட்கள் படிக்கலாம்…?

குறைந்தது ஏழு நாட்கள்.. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை. தொடர்ந்து படிப்பதும், பலமுறை படிப்பதும் உங்களுக்கு அதிவேகமாய் செல்வம் சேர உதவும். நிச்சயம் ஏழு நாட்களுக்குள் உங்களுக்கு பண வரவு வந்தே தீரும்.

எவ்வளவு என்பது உங்களது மனநிலையை பொறுத்தது. நூறு ரூபாயோ, ஆயிரம் ரூபாயோ, வராது நின்றிருந்த பணமோ, லட்ச ரூபாயோ அது உங்களது சிந்தனைக்கு ஏற்ப மாறுபடும். நீங்கள் ஆயிரம் ரூபாய் வருதான்னு பாப்போம் என்று நம்பிக்கை இல்லாமல் ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்தா கம்பெனி பொறுப்பேற்காது!

பொறுப்பு துறப்பு:

பணத்தை பற்றியும், பணம் வைத்திருப்பவர்களை பற்றியும் தப்பா, குறையா பேசிக்கிட்டே இதை படிச்சீங்கன்னா நீங்க எப்படி பணக்காரர் ஆகுறது? அதனால பணத்தை பற்றி நல்லதா நேர்மறையா சிந்திங்க… மதியாதார் படிவாசல் மிதியாதேன்னு சொல்லி வச்சது மனுஷங்களுக்கு மட்டுமில்லை பணத்துக்கும் தான் என்பதை மறக்காதீங்க!! பணம் லக்ஷ்மிகரம்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

“உங்களால் முடியும் என்ற எண்ணமோ அல்லது முடியாது என்ற எண்ணமோ இரண்டுமே உண்மை தான்!” உங்கள் நம்பிக்கை தான் உங்கள் வாழ்க்கை.

முழு நம்பிக்கையோடு, எல்லா நேரமும் நேர்மறை எண்ணங்களோடு ஆழ்ந்து உணர்ந்து சொல்லுங்கள்… வெல்லுங்கள்!!!

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s