
உங்கள் பிள்ளைகள் கல்வியில் தலைசிறந்து விளங்க வேண்டுமா? எவ்வளவு கடினமான பாடமாக இருந்தாலும் நன்கு புரிந்துகொண்டு எளிதாக படிக்க வேண்டுமா? தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமா? ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள். பயன் பெறுங்கள்.
தோழமைகளே… எனது பிள்ளைகள் தினமும் மாலை இப்பாடலை பாராயணம் செய்கின்றனர். இருவரும் கல்வியில் சிறப்பாக செய்வதை கண்கூடாகவே பார்க்கிறேன். நீங்களும் படனம் செய்து பயன் பெற எங்களது வாழ்த்துகள்.
படனம் (பாராயணம்) செய்யும் முறை:
நாள் தோறும் இறைவனை வேண்டி ஓத வேண்டும். இதற்கு இசை தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. நமக்கு தெரிந்த விதமாய் பாடலாம். ஆனால் வாய்திறந்து தான் படனம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுது சொற்கள் வெளிப்பட வேண்டும்.
அச்சொற்களில் உள்ள ஒலி அலைகள் மந்திர ஆற்றல் உடையவை. அவை நமக்கு அரணாக அமையும். அதனால் மெல்லிய குரலிலாவது வாய்விட்டு படனம் செய்ய வேண்டும் என்றும், படிக்கத் தெரியாதவர்கள் பிறரை படிக்கச் சொல்லி கேட்கலாம் என்றும் திருஞானசம்பந்தர் பெருமானே சொல்லியிருக்கிறார்.
ஓதத் துவங்கிய சில நாட்களிலேயே மாற்றம் நிகழ்வதை நீங்கள் உணருவீர்கள். இதை நாங்கள் செய்து பயன்பெற்ற பிறகே உங்களுடன் பகிர்கிறோம். நீங்களும் நம்பிக்கையோடு படித்து பயன் பெற எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக் கொள்கிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!
திருமுறை : இரண்டாம் திருமுறை
பாடல் : 31
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
பண் : இந்தளம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு)
இறைவன்: குற்றம் பொறுத்த நாதேசுவரர்
இறைவி : கோல்வளை அம்மை
திருச்சிற்றம்பலம்
பாடல்: 1
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்
குற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே.
பாடல்: 2
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள் மேலே
கொண்டு அணைசெய் கோலம்அது கோள்அரவினோடும்
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஓர் அம்பால்
கண்டவன் இருப்பது கருப்பறிய லூரே.
பாடல்: 3
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆகப்
போதினொடு போதுமலர் கொண்டு புனைகின்ற
நாதன்என நள்இருள்முன் ஆடுகுழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறிய லூரே.
பாடல்: 4
மடம்படு மலைக்குஇறைவன் மங்கைஒரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்து அணவு காலன் உயிர் காலஒரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.
பாடல்: 5
ஒருத்தி உமை யோடும் ஒருபாகம் அதுவாய
நிருத்தன் அவன் நீதிஅவன் நித்தன் நெறிஆய
விருத்தன் அவன் வேதம்என அங்கம் அவை ஓதும்
கருத்தவன் இருப்பது கருப்பறிய லூரே.
பாடல்: 6
விண்ணவர்கள், வெற்ப அரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான்
எண்ணி வரும் காமன்உடல் வேவ எரிகாலும்
கண்ணவன் இருப்பது கருப்பறிய லூரே.
பாடல்: 7
ஆதிஅடியைப் பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதிஒளி நல்புகை வளர்க்குவடுபுக்குத்
தீதுசெய வந்துஅணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறிய லூரே.
பாடல்: 8
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர்செயும் தொழில் இலங்கை நகர்வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.
பாடல்: 9
பரந்து அது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்து ஓர் சடைமேல்மிசை உகந்து அவளை வைத்து
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அரியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.
பாடல்: 10
அற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர்
சொற்றம் அறியாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்று என இருப்பது கருப்பறிய லூரே.
பாடல்: 11
நலந்தரு புனல்புகலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேய கடவு(ள்) ளைப்
பலம்தரு தமிழ்க்கிளவி பத்தும்இவை கற்று
வலம்தரும் அவர்க்கு வினைவாடல் எளிது ஆமே.
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்.
LikeLiked by 1 person
நன்றிகள் பல.
LikeLike