
நமது நேர்மறை எண்ணங்கள் வெற்றிபெற முதலில் நாம் அதை வலுப்படுத்த வேண்டும். அதற்கு மனதை பக்குவப்படுத்த வேண்டும். நன்றி நவிழ்வதில் இருந்து அதை ஆரம்பிக்கலாம். காலையில் கண் விழித்ததும் கூடுதலாய் நமக்கொரு நாளை வழங்கிய இறைவனுக்கு நன்றி சொல்லலாம். இறை நம்பிக்கை அற்றவரா? தவறில்லை! பிரபஞ்சத்திற்கு நன்றி என்றும் சொல்லலாம்.
மணக்க மணக்க காபி கலந்து குடிப்பதற்கு பால் கொண்டுவரும் பால்காரருக்கோ, இல்லை பால் பாக்கெட் வாங்கிவரும் கணவருக்கோ, பிள்ளைகளுக்கோ ஆனந்தமாய் நன்றி சொல்லலாம். நாம் தயாரித்த அற்புதமான காபியை பருகும் போது நமக்கு நாமே நன்றி சொல்லிக் கொள்ளலாம். நாம் அற்புதமான, சமமான மனோநிலையில் இருந்தால் நமது சமையலும் அற்புதமாய் இருக்கும்.
படுக்கை விரிப்புகளை குடும்பத்தார் ஒழுங்குபடுத்தவில்லையா? கோபம் கொள்ளாது படுக்கையை நாமே சரி செய்துவிட்டு என்னை இப்படி பம்பரமாய் சுழலவிட்டு சுறுசுறுப்பாய் வைத்திருக்கும் என் குடும்பத்தாருக்கு நன்றி என்று சொல்லாம்.
ஆம்! நம்மை சுற்றி நிகழும் ஒவ்வொரு செயலிலும் இருக்கும் நல்லதை மட்மே பார்க்க கற்றுக் கொண்டால் மனம் எளிதில் பக்குவமடைந்த விடும்.
உதாரணத்திற்கு, நாம் இரவு உணவை உண்ணும் பொழுது பொசுக்கென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
“ச்சே! கரண்டு போச்சா? இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு!” என அர்ச்சிப்பதை தள்ளி வைத்துவிட்டு, கதவையும், ஜன்னல்களையும் திறந்து வைத்து லண்டியனையோ, மெழுகுவர்த்தியையோ ஏற்றி வைத்து அதை கேண்டில் லைட் டின்னராக மாற்றி சந்தோஷமாக சாப்பிடலாம். இப்படி செய்யும் பொழுது மின்சார துண்டிப்பிற்கும் மனம் நன்றி சொல்ல துவங்கிவிடும். இவ்வளவு தாங்க பாசிட்டிவ் அப்ரோச்!
நன்றி சொல்வோம். பெற்றவர்கள், கணவன், மனைவி, குழந்தைகள், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன், கூட்டாளி, பிள்ளைகள், அக்கம் பக்கத்தவர், நட்பு வட்டம் இப்படி யாராக இருந்தாலும் நன்றி சொல்வோம்! ம்கூம்! என்னை சுற்றி இருக்கிறதெல்லாம் டெரர் பீசா இருக்கு, இதில் எங்க இருந்து நன்றி சொல்றதுன்னு கேள்வி வருதா?
வரலாம் தவறில்லை. அவர்களது செயல்களால் நம் மனம் புண்படும் எனில் அப்படி நடந்துகொள்ள கூடாது எனும் பாடத்தை நாம் அவர்களிடம் இருந்து கற்கிறோம். ஒருவரை பார்த்து எப்படி இருக்க வேண்டும் என கற்றுக்கொள்கிறோமோ அதுபோலவே எப்படி இருக்கக் கூடாது என்பதையும் கற்றுக் கொள்கிறோம். கற்றுத்தருபவர் ஒவ்வொருவரும் ஆசானே! அந்த வகையில் அவர்களுக்கு நன்றி சொல்லலாம்.
யார் ஒருவரும் எப்பொழுதும் எல்லோருக்கும் நல்லவராகவோ இல்லை கெட்டவராக்கவோ இருந்துவிட முடியாது எனும் போது நாம் நல்லவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளும் அன்னப்பறவைகளாய் இருந்துவிட்டு போவோம்!
நாங்கள் சொன்னது போல் நன்றி என்று சொல்லித்தான் பாருங்களேன்… சட்டென அவர்கள் கண்களில் ஒரு மின்னல் வெட்டிச் செல்வதை காண முடியும். நமக்குள்ள எதுக்கு நன்றி? என கேட்பவர்கள் கூட அதை ரசிக்கத் தான் செய்வார்கள்.
கடைக்கு செல்கிறோம், நாம் பணம் கொடுக்கிறோம்… கடைக்காரர் பொருட்கள் கொடுக்கிறார், அதை வாங்கிக் கொண்டு சிறு புன்னகையுடன் நன்றி என சொல்கிறோம் அப்பொழுது அதற்கான எதிர்வினை என்னவாக இருக்கும்?
பரவாயில்லங்க என்று அவர் சொல்லலாம், இல்லையேல் எதுவும் சொல்லாமல் சிறிதாக இதழ் விரிக்கலாம், சற்று சுதாரிப்பான ஆளாக இருந்தால் அவரும் நமக்கு நன்றி சொல்லலாம், அடுத்த முறை இன்னும் இதமாய் உங்களோடு பேசக்கூடும். அவரது நினைவடுக்குகளில் நமக்கென்று தனி இடம் இருக்கும்.
இவை எதுவுமே நிகழவில்லை அவர் நமது நன்றியை காதிலேயே வாங்கவில்லை என வைத்துக்கொள்வோம், அடடா! என் நன்றியை உணர்ந்து மனம் நெகிழும் அந்த ஒருநொடி மகிழ்வை இழந்துவிட்டீர்களே, ஒன்றும் பாதகமில்லை… அடுத்தமுறையேனும் அம்மகிழ்வை அனுபவிக்க வாழ்த்துக்கள் என வாழ்த்திவிட்டு நமது நன்றி நவிழலை தொடரலாம். நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் அவ்வளவு மகத்துவம் இருக்கிறது மக்களே!
“என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்!
உசுரு இருக்கும் வரையில நான் உல்லாசமா இருப்பேன்!” (இது தான் நாங்க சொல்ற மந்திரம்!)
இப்படி நமக்கு பிடித்த இரண்டு வரி வாக்கியங்களை அடிக்கடி நமக்குள்ளேயே சொல்லிக்கொண்டு நம்மை நல்லவிதமான மனநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் மகிழ்வாய் வாழ சிறு புன்னகையும், சில வார்த்தைகளும் போதும்! மகிழ்ச்சி மனதில் தான் இருக்கிறதே தவிர பொருட்களில் இல்லை. ஆக, நன்றி சொல்வோம்! நலமாய் இருப்போம்! சரிதானுங்களே…!?
காலையில் நீங்கள் சொல்ல சில நன்றி நவிழல்கள் இதோ…. இது சின்ன சாம்பிள் தான்… நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப இதைவிட கூடவும் சொல்லிக் கொள்ளலாம். ஜோதியை தாங்கி நிற்கும் திரியை தூண்டி விடுகிறோம். அற்புதமாய் உங்கள் மனதிற்குள் அதை பெரிதாய் பிரகாசிக்க வைக்க உங்களுக்கு தெரியும்!
- அற்புதமான இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு (அல்லது பிரபஞ்சத்திற்கு / இறை ஆற்றலுக்கு) நன்றி.
- இந்த நாளில் நடக்கும் அனைத்தும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நல்லவையாக அமைவதற்கு நன்றி.
- நானும், எனது குடும்பமும் ஆரோக்கியமாய், அன்பாய், அந்நியோன்னியமாய் இருப்பதற்கு நன்றி.
- அற்புதமான இந்த உடலையும், அதை சுறுசுறுப்பாய் இயக்கும் ஆற்றலையும் கொடுத்ததற்கு நன்றி.
- மன அமைதியையும், நிறைவையும் நான் உணர முடிவதற்கு நன்றி.
- இன்றைய நாள் எல்லா வகையிலும் ஒரு அற்புதமான நாளாக, வெற்றி தரக்கூடிய நாளாக அமைவதற்கு நன்றி.
- இந்த அற்புதமான நாளை நான் மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கும்படியாய் அமைவதற்கு நன்றி.
- பணம் என்னை தேடி வருகிறது. என் பொருளாதார நிலை நாளுக்கு நாள் உயருகிறது. அதற்கான முயற்சிகளை நான் செய்துகொண்டே இருப்பதற்கு நன்றி.
- எனக்கு வேண்டியதை மிகச் சரியான நேரத்தில் கொடுக்கும் இறை ஆற்றலுக்கு நன்றி.
- இன்று, மற்றவருக்கு என்னால் முடிந்த உதவியை மிகச் சரியான நேரத்தில் சொல்லாலும், செயலாலும், உடல் உழைப்பாலும், பொருளாலும் உதவ முடிவதற்கு நன்றி.
எங்களுள் தேடலை உருவாக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் அம்மு யோகாவின் அன்பான நன்றிகள் பல.
நன்றி தோழமைகளே!