எடுத்தகாரியம் யாவினும் வெற்றி பெற வேண்டுமா? விஷசுரம் (கோவிட் -19, டெங்கு, டைபாய்டு போன்றவை) விஷக்கடி முதலியன நீங்க வேண்டுமா? தொண்டையில் உள்ள கோளாறுகள் அனைத்தும் நீங்கி குரல்வளம் பெற வேண்டுமா? செய்வினை, பில்லி, சூனியம் பாதிக்காமல் இருக்க வேண்டுமா? எப்பொழுதும் துணிவுடன் செயலாற்ற வேண்டுமா? இளைய சகோதரன் நலம் பெற வேண்டுமா? ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள்…
படனம் (பாராயணம்) செய்யும் முறை:
நாள் தோறும் இறைவனை வேண்டி ஓத வேண்டும். இதற்கு இசை தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. நமக்கு தெரிந்த விதமாய் பாடலாம். ஆனால் வாய்திறந்து தான் படனம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது சொற்கள் வெளிப்பட வேண்டும்.
அச்சொற்களில் உள்ள ஒலி அலைகள் மந்தர ஆற்றல் உடையவை. அவை நமக்கு அரணாக அமையும். அதனால் மெல்லிய குரலிலாவது வாய்விட்டு படனம் செய்ய வேண்டும் என்றும், படிக்கத் தெரியாதவர்கள் பிறரை படிக்கச் சொல்லி கேட்கலாம் என்றும் திருஞானசம்பந்தர் பெருமானே சொல்லியிருக்கிறார்.
ஓதத் துவங்கிய சில நாட்களிலேயே மாற்றம் நிகழ்வதை நீங்கள் உணருவீர்கள். இதை நாங்கள் செய்து பயன்பெற்ற பிறகே உங்களுடன் பகிர்கிறோம். நீங்களும் நம்பிக்கையோடு படித்து பயன் பெற எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக் கொள்கிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!
பதிகத்தின் வரலாறு:
கொடிமாடச் செங்குன்றூரில் திருஞான சம்பந்தர், அடியார்களுடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்பொழுது பனிக்காலம் வந்தது. பல அடியார்களை நளிர் (குளிர்) சுரம் பீடித்தது. அதனால் வருந்திய அடியார்கள் சம்பந்தரிடம் விண்ணப்பித்தனர்.
இது கேட்ட சம்பந்தர், இந்த நளிர் சுரம் வருதல் இந்நாட்டிற்கு இயல்பே என்றாலும், அடியார்களை இந்த நோய் எய்தக்கூடாது. நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர்தீர்க்கும் அரிய துணை
என்று எண்ணி “அவ்வினைக்கு இவ்வினை” என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.
ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வினை தீண்டா! திருநீல கண்டம்!
என்று ஆணையிட்டு அருளினார். உடனே அடியார்களுக்குச் சுரம் தீர்ந்தது மட்டுமல்லாமல் அந்நாட்டிலேயே அந்தச் சுரநோய் தொலைந்தது.
குறிப்பு -1 : இப்பதிகம் கொடிமாடச் செங்குன்றூரில் பாடப்பெற்றிருந்தாலும் பாடல்களில் தலப்பெயர் சொல்லப் பெறாததால், இது தலப்பெயர் இல்லாத “பொது” திருப்பதிகங்களுள் ஒன்று.
குறிப்பு – 2: கொடிமாடச் செங்குன்றூர் – இத்தலம் இக்காலத்தில் “திருச்செங்கோடு” என்று வழங்கப்பெறுகின்றது.
பொது (திருநீலகண்டப் பதிகம்)
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
“அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் ;
உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே?
கை-வினை செய்து எம் பிரான் கழல் போற்றுதும்; நாம் அடியோம்;
செய்-வினை வந்து எமைத் தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!”.
பாடல் எண் : 2
காவினை இட்டும், குளம் பல தொட்டும், கனி-மனத்தால்,
ஏ-வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு-பொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் ; நாம் அடியோம் ;
தீவினை வந்து எமைத் தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!
பாடல் எண் : 3
முலைத்-தடம் மூழ்கிய போகங்களும், மற்று எவையும் எல்லாம்
விலைத்தலையாவணம் கொண்டு எமை ஆண்ட விரி-சடையீர்;
இலைத்-தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்;
சிலைத்து எமைத் தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!
பாடல் எண் : 4
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இரு-போதும் தொழப்படும் புண்ணியரே;
கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்;
திண்ணிய தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!
பாடல் எண் : 5
மற்று-இணை இல்லா மலை திரண்டன்ன திண்-தோள் உடையீர்;
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ?
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்;
செற்று எமைத் தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!
பாடல் எண் : 6
மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்திப்,
பிறப்பு-இல் பெருமான் திருந்தடிக்-கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர்-கொடு வந்து உமை ஏத்தும் பணி-அடியோம்,
சிறப்பு-இல்-இத் தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!
பாடல் எண் : 7
This verse is lost
பாடல் எண் : 8
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல்-அடிக்கே
உருகி மலர்-கொடு வந்து உமை ஏத்துதும் நாம் அடியோம் ;
செரு-இல் அரக்கனைச் சீரில் அடர்த்து-அருள் செய்தவரே ;
திரு-இல்-இத் தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!
பாடல் எண் : 9
நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாது-செய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு-அரியீர்;
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்;
சீற்றம்-அது-ஆம் வினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!
பாடல் எண் : 10
சாக்கியப் பட்டும் சமண்-உரு ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இரு-தலைப் போகமும் பற்றும் விட்டார் ;
பூக்-கமழ் கொன்றைப் புரி-சடையீர், அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப் பெறா; திரு-நீல-கண்டம்!
பாடல் எண் : 11
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டு ஆகில் இமையவர்-கோன் அடிக்கண்
திறம் பயில் ஞான-சம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார்,
நிறைந்த உலகினில் வானவர்-கோனொடும் கூடுவரே.
திருச்சிற்றம்பலம்
அருமை🙏
LikeLiked by 1 person
நன்றி பா.
LikeLiked by 1 person