நேர்மறை அணுகுமுறை (positive approach)

நேர்மறை அணுகுமுறை (positive approach) வளர்க்கும் வழிகள்:

தோழமைகளே சென்ற பதிவில் நேர்மறையான எண்ணங்கள் பற்றி பார்த்தோம். இப்பதிவில் நேர்மறை அணுகுமுறை பற்றி பார்க்கலாம். நாம் எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற அதற்கான அணுகுமுறை மிகவும் முக்கியம் என்பது நாம் அறிந்ததே. நமது வாழ்க்கை எனும் மாளிகை சிறப்பாக கட்டப்பட வேண்டுமென்றால் அதன் அஸ்திவாரமான நமது எண்ணங்கள் பலமானதாக இருக்க வேண்டும்.

சரி, நான் நல்லதைத் தான் நினைக்கிறேன். அடுத்து என்ன செய்யணும்? என கேட்டால் நம்மோட அணுகுமுறைங்கிற செங்கல் கொண்டு மாளிகையை கட்டணும். இது நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பல காலமாய் அதாவது சிறுவயதில் இருந்து நம்மால் கட்டப்பட்டிருக்கு.

நாம் ஒரு செயலையோ இல்ல மனிதரையோ நேர்மறையா அணுகும் போது அதோட பலனே வேற மாதிரி இருந்திருக்கும் இதை நாம் பலமுறை உணர்ந்திருப்போம். உதாரணத்துக்கு ஒரு புடவை கடைக்கே போறோம்ன்னு வைங்க. பல டிசைன் பார்க்கிறோம் மனசு எதையும் உறுதியா தேர்ந்தெடுக்க மாட்டேங்குது. பிடிச்சும், பிடிக்காமையும் இருக்கு. புடவை எடுத்து போடுறவங்க,

என்னமா… இவ்வளவு புடவை எடுத்து போட்டுட்டேன் இன்னும், இன்னும்ன்னு கேட்குறீங்களேன்னு அலுத்துகிறாங்கன்னு வைங்க, அப்போ

ஹலோ! காசு கொடுத்து தானே புடவை வாங்குறோம்? சும்மாவா தரீங்க? புடவை எடுத்து போடுறது தானே உங்க வேலை? அதை செய்றதுக்கு அழுத்துக்குறீங்கன்னு சண்டைக்கு கிளம்புறதை விட்டு,

உங்க கடை புடவை ஒவ்வொன்னும் அழகழகா இருக்கு. எதை எடுக்கிறது எதை விடுறதுன்னே தெரியலை. நீங்களும் ரொம்ப பொறுமையா எடுத்து காட்டுறீங்க அதனால தான் எடுக்கச் சொல்றோம். உங்க அமைதியும், பொருமையும் யாருக்கு வரும்? நீங்க ரியலி கிரேட்டுன்னு சொல்லிப் பாருங்க. கூடுதலா புடவையும் காட்டப்படும். முகம் சுளிக்காமையும் இருப்பாங்க. இவ்வளவு தான் பாசிட்டிவ் அப்ரோச்.

ஆனால் இது எல்லா நேரத்திலும் சாத்தியப்படுமான்னு கேள்வி வரும். சாத்தியப்படனும்! படும்! சாத்தியபடாதுன்னு யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் வெற்றியாளன் சொல்லக் கூடாது. நாம் வெற்றியாளர்கள்! நாம் நல்லதே நினைக்க, நல்லதே நடக்கும்! நல்லதே நம்மை பின்தொடரும்! நமது வெற்றிக்கும், வளர்ச்சிக்கும், செல்வச் செழிப்பிற்கும் நமது நேர்மறை எண்ணங்களும், அணுகுமுறையும் தான் அடித்தளம்.

நேர்மறையான அணுகுமுறை அதாவது பாசிட்டிவ் அப்ரோச் எதை சார்ந்து இருக்கும் தெரியுமா?

நமது வளர்ப்புமுறை, நாம் வாழும் சூழல், கற்றல், அனுபவங்கள் மற்றும் நாம் சந்திக்கும் மக்களின் தாக்கங்கள், அவர்களது செயல்பாடுகள் என ஒவ்வொன்றையும் உள்ளடக்கியே இருக்கும். இருப்பினும் முயன்றால் முடியாதென்று ஏதேனும் உண்டா? நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சித்தால் நிச்சயம் நம்மால் எதிர்மறையான அணுகுமுறையை விலக்கி நேர்மறை அணுகுமுறையை வளர்க்க முடியும்.

நேர்மறை அணுகுமுறையை வளர்க்கும் சில வழிமுறைகள்:

  • சுயமுன்னேற்ற நூல்களை படிக்கலாம்.
  • உத்வேகம் கொடுக்கக்கூடிய, புதிதாய் கற்கக்கூடிய வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். (புதுசு புதுசா உங்களுக்கு பிடிச்ச விஷயங்களை கத்துக்கலாம்)
  • “உடனே செய்…” என்னும் வாசகத்தை செயல்படுத்தவும். (அதாவது இப்போ ராமசாமியா தீயா வேலை செய்யனும்)
  • உங்களது கவனத்தை எதிர்மறையிலிருந்து நேர்மறை பார்வைக்கு மாற்றுங்கள். (இல்லாததை விட்டுட்டு இருக்கிறதை நினைச்சு சந்தோஷப்படுங்க)
  • எதிர்மறையாய் அதாவது குறையாய், குற்றம் கண்டுபிடிப்பதாய் பேசும் நபர்களிடம் இருந்து தள்ளியே இருங்கள்.
  • உங்களை நீங்களே முதலில் நம்புங்கள்… உங்களை நீங்களே விரும்புங்கள். (உங்களை நீங்க நம்பலைன்னா உலகமே உங்களை நம்பினாலும் ஆகப்போறது ஒண்ணுமில்லை! உங்களை உலகமே விரும்பனும்னு நினைக்கிறதுக்கு முன்னாடி நீங்களே உங்களை விரும்புங்க உங்க குறைகளையும் சேர்த்து!)
  • உங்களது சிந்தனைகள், உணர்வுகள், செயல்பாடுகள் அனைத்தும் பெரிதாக, மேன்மையானதாக இருக்கட்டும்.
  • வலிமையான குணாதியசங்களை உருவாக்கவும்.
  • கூடுதலான முயற்சி செய்யுங்கள். (அதாவது சராசரியான அளவைக் காட்டிலும் கூடுதலான முயற்சிகள்)

ஆமாங்க! முயற்சியும், தேவையான பயிற்சியும் இருந்தா வாழ்வை வசப்படுத்துறது ரொம்பவே சுலபம். வலியானாலும், வேதனையே ஆனாலும் விடாப்பிடியாய் நின்று ஜெயிக்க வேண்டும். என்ன நடந்தாலும்… நடக்காவிட்டாலும்… வெற்றி பெறும் வரை முயற்சிகளை கைவிடாமல் தொடர வேண்டும். ஏனெனில் சாதனையாளர்கள் சாக்குபோக்கு சொல்லமாட்டார்கள்… சாதித்து காட்டுவார்கள்!!

உங்கள் எண்ணங்களையும், அது சார்ந்த செயல்களையும் மாற்றினால் நீங்கள் புது மனிதராய் மாறுவது உறுதி.

நாம் நம் மனதிற்கு ராஜாவாக இருக்க வேண்டும். அதன் அடிமையாய் மாறிவிட கூடாது என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது. தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி நம் மனதை கவனிக்க ஆரம்பித்தால் அதில் உருவாகும் நேர்மறை எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் நம்மால் எளிதாக இனம் காண முடியும்.

பின்னர் மெதுமெதுவே நம் கவனத்தை நேர்மறையான எண்ணங்கள் மீது குவிக்கும் போது அது வலுப்பெற ஆரம்பிக்கும். இது ஒரு நாளில் ஏற்படுவது இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஒழுங்கோடு குறிப்பிட்ட நேரத்தில் இதைச் செய்தால் அற்புதமான மாற்றங்கள் நிகழ்வதை உணரலாம்.

தோழமைகளே… உங்களது நேர்மறை அணுகுமுறை நிகழ்வுகள் பற்றியும் அதனால் உண்டான மாற்றங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கு அது பெரும் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.

வாழ்க வளமுடன்.

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s