வருமானம் பெருக…

வருமானம் பெருக வேண்டுமா? செய்யும் தொழில் பெரும் இலாபத்தை ஈட்ட வேண்டுமா? வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? ஆம் எனில் கீழே இருக்கும் இப்பதிகத்தை படியுங்கள். மேலும்மூத்த சகோதரர்கள் வளமுடன் வாழ்வதற்கும், எவ்வளவு கடினமான வழக்காக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கும் இப்பதிகத்தை படனம் செய்யலாம்.


படனம் (பாராயணம்) செய்யும் முறை:

நாள் தோறும் இறைவனை வேண்டி ஓத வேண்டும். இதற்கு இசை தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. நமக்கு தெரிந்த விதமாய் பாடலாம். ஆனால் வாய்திறந்து தான் படனம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது சொற்கள் வெளிப்பட வேண்டும்.

அச்சொற்களில் உள்ள ஒலி அலைகள் மந்தர ஆற்றல் உடையவை. அவை நமக்கு அரணாக அமையும். அதனால் மெல்லிய குரலிலாவது வாய்விட்டு படனம் செய்ய வேண்டும் என்றும், படிக்கத் தெரியாதவர்கள் பிறரை படிக்கச் சொல்லி கேட்கலாம் என்றும் திருஞானசம்பந்தர் பெருமானே சொல்லியிருக்கிறார்.

ஓதத் துவங்கிய சில நாட்களிலேயே மாற்றம் நிகழ்வதை நீங்கள் உணருவீர்கள். இதை நாங்கள் செய்து பயன்பெற்ற பிறகே உங்களுடன் பகிர்கிறோம். நீங்களும் நம்பிக்கையோடு படித்து பயன் பெற எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக் கொள்கிறோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!

பதிகத்தின் வரலாறு:

திருத்தலங்கள் தோறும் யாத்திரையை மேற்கொண்ட திருஞானசம்பந்தர், திருவீழிமிழலையில் தங்கி இருந்து, பெருமானை வணங்கிப் பதிகங்கள் பல அருளிச் செய்யலானார். அவரோடு திருநாவுக்கரசரும் (அப்பர்) உடன் இருந்து இறைவனை வணங்கி மகிழ்ந்தார்.

அக்காலத்தில் வான் மழை பொய்த்து, நிலம் வறண்டு, விளைச்சலும் குறைவுற்று வறுமையுண்டாயிற்று.மக்கள் பசித் துன்பத்தால் வருந்தினார்கள். சம்பந்தர் கனவில் ஈசன் தோன்றி, நிலவுலகத்தின் இயல்பால் வறுமை வந்தடைந்தாலும், தீமை பயக்கும் பசி நோய் சம்பந்தர் மற்றும் நாவுக்கரசரை வந்து அடையாது என்றும் ஆயினும் அவர்களைச் சார்ந்தோர் பசி நோயால் வருந்தாதவாறு பலிபீடத்தின் மீது தினமும் பொற்காசு ஒன்றினை அளிப்பதாகவும், அதன் வாயிலாக இத்துன்பத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என அருளினார்.

அப்பொற்காசைக் கொண்டு சம்பந்தரும், நாவுக்கரசரரும் தங்களது மடத்தில் திருவமுது செய்து அடியார்களுக்கும், மக்களுக்கும் அமுது படைத்தனர்.

ஆனால் சம்பந்தரின் மடத்தில் அமுது தயாராக வெகு நேரம் பிடிக்கவே அதற்கான காரணம் என்னவென்று சம்பந்தர் கேட்க, பொற்காசு சற்று தரம் குறைந்ததாக இருப்பதால் அதன் மாசை நீக்கிய பிறகே வியாபாரிகள் பொருட்களை தருகின்றனர். அதனால் தான் காலதாமதமாகிறது எனச் சொல்ல சம்பந்தரை பெரும் வருத்தம் சூழ்கிறது.

நாமும் நாவுக்கரசர் செய்யும் அதே நல்ல காரியத்திற்கு தானே காசு கேட்கிறோம் நமக்கு மட்டும் ஏன் மாற்று குறைந்த காசை கொடுக்க வேண்டும் என எண்ணியவர், “வாசி தீரவே காசு நல்குவீர்” என்னும் பதிகம் பாடி இறைவனிடம் கேட்க,
இறைவனோ, “அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரில் அப்பர் சற்று உயந்தவர்! அதனால் தான் அவருக்கு மாசில்லாத காசும், உமக்கு சற்று மாற்று குறைந்த காசும் தருகிறேன்.” எனச் சொல்ல,
சம்பந்தரும், “அப்பர் அப்படி என்ன உயர்வு?” என கேட்க,

“சம்பந்தன் தன்னைப் பாடினான், சுந்தரன் பொன்னை பாடினான், என் அப்பன் என்னை பாடினான்.” என சொன்னார்.

சம்பந்தரின் பாடல்கள் அனைத்திலும் அவரது பெயர் நிச்சயம் இடம்பெற்றிருக்கும், சுந்தரர் இறைவனை தனது தோழனாய் பாவித்து தனக்கு வேண்டிய பொன்பொருள், ஆடை ஆபரணம் என அனைத்தையும் கேட்டே பாடல்கள் பாடினார். அப்பர் மட்டுமே இறைவனை பாடினார். அதனால் அவரது பெருமையை உலகுக்கு உணர்த்தவே இறைவனும் இத்திருவிளையாடலை நிகழ்த்தினார்.

அதன்பிறகு சம்பந்தரும் மாசில்லாத பொற்காசு பெற்று பஞ்சம் தீரும் வரை அனைவருக்கும் திருவமுது படைத்தார் என்பது வரலாறு.

பதிகம்: தேவாரம் – thevaram
அருளியவர்: திருஞானசம்பந்தர் – Thirugnanasampanthar
இடம் : திருவீழிமிழலை
இறைவன் : வீழியழகேசுவரர்
இறைவி: சுந்தர குசாம்பிகை
பண் : குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

வாசி தீரவே காசு நல்குவீர் ;
மாசுஇல் மிழலையீர்; ஏசல் இல்லையே.

இறைவர் ஆயினீர்; மறைகொள் மிழலையீர்;
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

செய்யமேனியீர்; மெய்கொள் மிழலையீர்;
பைகொள் அரவினீர்; உய்ய நல்குமே.

நீறு பூசினீர்; ஏறுஅது ஏறினீர்;
கூறு மிழலையீர்; பேறும் அருளுமே.

காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்;
நாம மிழலையீர்; சேமம் நல்குமே.

பிணிகொள் சடையினீர்; மணிகொள் மிடறினீர்;
அணிகொள் மிழலையீர்; பணிகொண்டு அருளுமே.

மங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்;
கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே.

அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்;
பரக்கும் மிழலையீர்; கரக்கை தவிர்மினே.

அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்;
இயலும் மிழலையீர்; பயனும் அருளுமே.

பறிகொள் தலையினார்; அறிவது அறிகிலார்;
வெறிகொள் மிழலையீர்; பிறிவது அரியதே.

காழிமா நகர் வாழி சம்பந்தன்,
வீழிமிழலை மேல், தாழு மொழிகளே.

திருச்சிற்றம்பலம்

பதிகத்தின் பொருள் :

குற்றம் அற்ற வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள இறைவரே, அடியேனுக்கு வழங்கியருளும் காசில் உள்ள உயர்வு தாழ்வு நீங்குமாறு செய்து அக்காசினை நல்குக. அதனால் உமக்குப் பழிப்பு இல்லை .

எல்லோருக்கும் இறைவராக விளங்கும் பெருமானீரே, வேதங்களின் ஒலி நிறைந்த திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் உள்ள அக் கறையை நீக்கி முறையாக அளித்தருளுக.

சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மையாளர் வாழும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டுள்ளவரே, அடியேங்கள் உய்யுமாறு வாசியில்லாததாகக் காசு அருளுக.

திருவெண்ணீற்றை அணிந்தவரே, ஆனேற்றில் ஏறி வருபவரே, பலராலும் புகழப்பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, காசு அருளுவதோடு எமக்கு முத்திப்பேறும் அருளுவீராக.

காமனை எரிந்து அழியுமாறு செய்த புகை பொருந்திய அழல் விழியை உடையவரே! புகழ் பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே! எமக்குச் சேமத்தை அருளுவீராக.

கட்டப்பட்ட சடையை உடையவரே, நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகு பொருந்திய திருவீழி மிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எம்மைப் பணி கொண்டு அருளுவீராக.

உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, உயர்வுடைய திருவீழிமிழலையில் உறைபவரே, கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயுறவைப் போக்கியருளுக.

இராவணன் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரிய இரக்கம் காட்டியருளியவரே, எங்கும் பரவிய புகழ் உடைய திருவீழிமிழலையில் உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக.

நான்முகனும் திருமாலும் அடிமுடி காண முயலும் பேருருவம் கொண்டருளியவரே, எல்லோரும் எளிதில் வழிபட இயலுமாறு திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, எமக்கு வீட்டின் பத்தையும் அருளுவீராக.

ஒன்றொன்றாக மயிர் பறித்த தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டுபவராகிய உம்மை அறியாது வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, அடியேங்கள் உம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாது.

இத்திருப்பதிகம் சீகாழிப்பதியாகிய பெரிய நகருள் தோன்றி வாழும் ஞானசம்பந்தன் திருவீழிமிழலை இறைவர் மேல் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகளைக் கொண்டதாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

4 Comments

 1. akmlakshmi says:

  பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏

  Liked by 1 person

  1. ammuyoga says:

   நன்றி பா.

   Like

 2. Sorna says:

  Kanden kathalai next episode pleaae mam….. 🥰🥰🥰🥰

  Liked by 1 person

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s