
வாழ்வில் எளிதாக வெற்றி பெற நேர்மறை எண்ணங்கள் மிகவும் முக்கியம். இவ்வெண்ணங்கள் அதிர்வலைகளாய் உருமாறி பிரபஞ்சத்தை அடையும். பிரபஞ்ச சக்திகள் நமது எண்ணங்களை ஈடேற்றிக் கொடுக்கும். பலர் இதை தங்களின் அன்றாட வழக்கமாய் கைக்கொண்டு வெற்றி பெறுகின்றனர். இதைத் தான் நமது முன்னோர்கள் “எண்ணம் போல் வாழ்க்கை” எனச் சொன்னார்கள்.
நல்லதோ கெட்டதோ ஒரே விஷயத்தை நாம் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தால் அது தானாக நடந்துவிடும். இதை நம்மில் பலர் அனுபவ ரீதியாகவே அறிந்திருப்போம். இதை நம் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றது போல் நல்லவிதமாய் மாற்றி, அதாவது நமக்கு என்ன வேண்டுமோ அதை மிகச் சரியாக பிரபஞ்சசத்திற்கு தெரியப்படுத்தினால் போதும், நமது எண்ணங்கள் நிச்சயம் ஈடேறும். அப்படி பிரபஞ்சத்திடம் கேட்கும் முறை தான் நேர்மறை உறுதிமொழி.
பிரபஞ்சத்திற்கு வார்த்தைகள் தெரியாது ஆனால் உணர்வுகள் நன்கு புரியும். நாம் பிரபஞ்சத்திற்கு அனுப்பும் உணர்வுகளை மறுபடி, மறுபடி திருப்பி அனுப்பும். இதை இன்னும் சுலபமாய் “நல்லது நினைத்தால் நல்லத்தே நடக்கும்!” என்றும் சொல்லலாம். இப்பொழுது நம்மால் நேர்மறை எண்ணங்களின் ஆற்றலையும், அவற்றின் அற்புதங்களையும் இணை கூட்டி பார்க்க முடியும்.
“நானும் தான் ரெண்டு வேலை நேர்மறை உறுதிமொழி சொல்றேன்… நல்லதே நினைக்கிறேன்… எனக்கு மட்டும் ஏன் எந்த நல்லதுமே நடக்க மாட்டேங்குது?!” என்று சிலர் புலம்ப,
“இதெல்லாம் சொல்லிட்டா நான் நினைச்சதெல்லாம் நடந்திடுமா…? கதை விடுறாங்க, வெளிநாட்டுக்காரன் ஏதாவது சொல்லிட்டா உடனே அதை பெருசா எடுத்துக்கிட்டு நானும் பண்றேன்னு கிளம்பிட வேண்டியது! பொழுதை வீணாக்காம வேலையை பாருங்கப்பா…!” என்று இன்னும் சிலர், கேலி செய்கின்றனர்.
வேறு சிலரோ,
“நான் ஜெயிக்கணும்னு தான் தொடர்ந்து நினைக்கிறேன் ஆனா பாருங்க, நான் எதுல ஜெயிக்க நினைச்சேனோ அதுல தான் தோத்துட்டேன். இதை பத்தி நினைக்காம இருந்திருந்தா கூட ஜெயிச்சிருப்பேன் போல… போங்கய்யா, நீங்களும் உங்க ஐடியாவும்…!” என்று கடுப்பாவதும் உண்டு.
இவர்கள் சொல்வதும், உணர்வதும் உண்மை தான். அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டால் அதை செப்பனிட்டுவிடலாம். பிறகு வாழ்க்கை செம்மையாய் மாறுவது உறுதி.
நேர்மறை உறுதிமொழிகளை சொல்லும் நேரம் மிக முக்கியம். காலை எழுந்தவுடன் முதல் 10 நிமிடங்களுக்குள் சொல்வது அல்லது பார்த்துப் படிப்பது முடியாவிட்டால் ஒளிப்பதிவு செய்து கேட்பது மிகவும் சிறப்பு. ஏனெனில் அதிகாலை நேரத்தில் நமது ஆழ்மனம் விழிப்பாய் இருக்கும்.
“நானே இன்னும் முழுசா கண் விழிக்கலை… அதுக்குள்ள என் ஆழ்மனம் எப்படி விழிச்சிருக்கும்?” என நம்மில் பலருக்கு கேள்வி எழலாம். அதற்கான விடை கண்டிப்பாக ஆழ்மனம் விழித்திருப்பது மட்டுமல்ல விழிப்பாகவும் இருக்கும் என்பது தான்.
இரவு நேரத்தில் மிதமாய் சாப்பிட்டு தொல்லைப்பேசி…ச்ச! தொலைபேசி, தொலைக்காட்சி ஆகியவற்றை ஒருமணி நேரத்திற்கு முன்பே அணைத்துவிட்டு நேரத்தோடு படுத்து தூங்கினால் அதிகாலையில் எழுவது சுலபம். நன்கு உறங்கி அதிகாலையில் விழித்தெழும் பொழுது முழுமையாய் ஓய்வுபெற்ற நம் உடலும், மனமும் புத்துணருடன் இருப்பதை நம்மால் நன்கு உணர முடியும்.
பிரம்மமுகூர்த்த நேரத்தில் விழித்து எழுந்து நேர்மறை உறுதிமொழிகளை சொல்வது சாலச் சிறந்தது. அதேபோல் இரவு, தூக்கம் கண்ணை அசத்தும் அந்த கடைசி 5 நிமிடங்கள் நம் ஆழ்மனம் அதிக விழிப்பாய் இருக்கும். அப்பொழுதும் நேர்மறை உறுதிமொழிகளை நினைத்துக் கொண்டு உறங்கலாம்.
ஆழ்மனம் வேறு எப்போதெல்லாம் விழிப்பாய் இருக்கும்?
சாப்பிடும் போது, குளிக்கும் போது, தண்ணீர் குடிக்கும் போது, உணர்ச்சி வயப்பட்டிருக்கும் போது (கோபம், பயம், சந்தோசம், சோகம்…) இந்த நேரங்களில் நேர்மறை உறுதிமொழிகளை ஞாபகப்படுத்திக் கொண்டால் பலனை வெகு விரைவாய் எதிர்பார்க்கலாம்.
நேர்மறை உறுதிமொழிகளை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை சொன்னால் கூட போதும். இங்கு நாம் நினைத்தை அடைவோம் எனும் நம்பிக்கை தான் முக்கியமே தவிர எத்தனை முறை உறுதிமொழியை மொழிகிறோம் எனும் எண்ணிக்கை இல்லை.
உதடு ஒரு உறுதிமொழியை உச்சரிக்க மனமோ அதற்கு எதிர்மறையாக சிந்தித்தால் மனசு தாங்க ஜெயிக்கும்! அதனால நாம என்ன உறுதிமொழியை சொல்றோமோ அதை உணர்ந்து உணர்வுபூர்வமா நம்பிகையோட சொல்லனும்! அது தான் ரொம்ப முக்கியம்.
உதாரணத்திற்கு, அம்முவாகிய என்னையே எடுத்துப்போம். வருஷத்துக்கு ஐந்து கதை எழுதணும்ன்னு உறுதிமொழி சொல்றேன்னு வச்சுக்கோங்க, அப்படி சொல்லும் போதே அதெப்படி எழுத முடியும்? வீட்டு வேலையெல்லாம் பார்த்து, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, வீட்டில் இருந்து வேலை பார்க்கும் கணவரை கவனித்து எழுத அமரும் போது கபாலம் களைத்துப் போகுமே… என மனம் சிந்தித்தால் அங்கு தான் நான் தோற்றுப் போகிறேன்.
முடியும்! “நான் டிசம்பர் 31-ற்குள் ஐந்து கதைகளை எழுதி முடிக்கிறேன். அவை அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. நான் மிகுந்த மகிழ்ச்சியாய் சொன்ன நேரத்திற்குள் முடித்துவிட்டதில் பெருமிதமாக உணர்கிறேன்” என்று உணர்வுகளோடு தொடர்புப்படுத்தி, அந்த உணர்வுகளை உங்களுக்குள் அனுபவித்துச் சொன்னால் இலக்கை அடைவது வெகு சுலபமாகிவிடும்.
நேர்மறை உறுதிமொழிகளை ஒருநாளைக்கு ஒருமுறை மட்டும் சொன்னால் போதாதா? ஏன் விழிக்கும் பொழுதும், உண்ணும் பொழுதும், உறங்கும்பொழுதும், என ஆழ்மனம் விழித்திருக்கும் நேரமெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்?
முதலில் இதுநாள் வரை நம் மனதிலும் சிந்தையிலும் நாம் தேக்கி வைத்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை அழிக்க வேண்டும். அதற்கான ஒரேவழி நேர்மறையான எண்ணங்களை அசைபோடுவது தான். அதனால் தான் நேர்மறை உறுதிமொழிகளை அடிக்கடி நினைத்துப் பார்த்து சொல்ல வேண்டும். எதிர்மறை எண்ணங்களை அழிக்க நேர்மறை எண்ணங்களால் மட்டுமே முடியும்.
ஒரு சிலருக்கு தாங்கள் எதிர்பார்த்த மாற்றம் அல்லது தங்களது எண்ணங்கள் வெகு வேகமாய் நிகழ்வதற்கு காரணம் அவர்களுக்கு எதிர்மறை எண்ணம் மிகக் குறைவாக இருப்பதுவே ஆகும்.
வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு மற்றவரையும், சூழ்நிலையையும் குறைகூறாமல் அவற்றை சமாளித்து தனக்கு வேண்டியதை அடைவதற்கான வழிகளை நோக்கி மட்டுமே முன்னெடுப்பவர்களுக்கு பிரபஞ்சத்தை வசப்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவது வெகு சுலபம். நாமும் முழுமனதோடு முயன்று தான் பார்ப்போமே…!
அதற்காக நாம் முதலில் செய்ய வேண்டியது, நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், நம் எதிரில் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்களிடம் நல்லதை மட்டுமே கண்டுபிடித்து அதற்கேற்ப செயல்படுவது மிக முக்கியம். நல்ல எண்ணங்கள், நல்ல சொற்கள், நல்ல செயல்கள் இவை தான் நேர்மறை எண்ணங்களை மேம்படுத்த உதவும் கருவிகள்.
நாம் நினைப்பது நல்லதாக இருந்தாலும் நமது மனம் நாம் நினைப்பதற்கு எதிர்மறையாக நடந்திடுமோன்னு சந்தேகம் கொண்டால் நிச்சயம் மனம் தான் ஜெயிக்கும். நினைப்பது மேல்மனம்! நம்புவது ஆழ்மனம்! இப்போ சொல்லுங்க யார் ஜெயிப்பா…?!
தோழமைகளே நேர்மறை உறுதிமொழிகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க…? இதை பற்றி கேள்விபட்டிருக்கீங்களா? உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தியிருக்கீங்களா?உங்களுக்கு எப்படி இது பற்றி தெரியும் என்றெல்லாம் கமெண்ட் செக்ஷனிலோ, முகநூலிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
வெற்றிக்கான வழிகளை தொடர்ந்து பேசுவோம்…
அருமை.
LikeLiked by 1 person
நன்றி பா.
LikeLike