
சிங்கப்பூரில் ஹங்கிரி கோஸ்ட் ஃபெஸ்டிவல் (hungry ghost festival) என்னும் திருவிழா சீனர்களின் சந்திர வருடப் பிறப்பின் ஏழாவது மாதம் வெகு விமர்சையாக நடைபெறும். பிஃப்ரவரி மாதத்தில் சந்திர புத்தாண்டு துவங்கும். அதில் இருந்து ஏழாம் மாதம் என்பது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அந்த மாதத்தை அவர்கள் கோஸ்ட் மந்த் என்றே அழைப்பர். கோஸ்ட் மந்த்தின் பதினைந்தாம் நாள் திருவிழாவின் உச்ச நாளாக கொண்டாடப்படும். நமது ஆடி அமாவாசை தான் அந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று நாம் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையல் போடுவது போன்றவற்றை செய்வோம். அதுபோலவே தான் சீனர்களும் தங்கள் வீட்டிற்கு முன் இருக்கும் சாலை ஓரங்களிலும், மரத்தடியிலும் தங்களது முன்னோர்களுக்கு மட்டுமல்லாது அங்கே உலாவிக் கொண்டிருக்கும் அனைத்து ஆன்மாக்களுக்கும் விதவிதமான உணவுப் பண்டங்களை படைத்து, காகிதத்தால் உருவாக்கப்பட்ட பணங்களையும், கார்கள், உடைகள், மாளிகைகள் போன்றவற்றையும் எரித்து வழிபடுவர். ஆன்மாக்கள் வாழும் உலகத்தில் இங்கு எரிக்கப்படும் காகிதங்களுக்கு மதிப்பு உண்டு என்பது நம்பிக்கை.
அவ்வாறு எரிக்கப்படும் பணங்களை நரகத்தின் காவலர்களுக்கு கொடுத்துவிட்டு அவ்வான்மாக்கள் பூலோகத்திற்கு வந்து தங்களுக்காக படைக்கப்பட்டிருக்கும் உணவுகளை உண்ணும். அவற்றை சந்தோஷப்படுத்துவதற்காக சைனீஸ் ஓப்ரா (கூத்து அல்லது நாடகம்) விடிய விடிய நடத்தப்படும்.
நாமும் அதைப் பார்க்கலாம். ஆனால்… ஒரேயொரு நிபந்தனை! முன் வரிசையில் போடப்பட்டிருக்கும் இருக்கைகளில் மட்டும் அமரக் கூடாது. ஏனெனில் அவ்விருக்கைகள் ஆன்மாக்களுக்கானது. ஒருவேளை தவறுதலாய் அமர்ந்துவிட்டால் நாம் அமர்ந்திருப்பது இருக்கையில் இல்லை… ஏதோ ஒரு ஆன்மாவின் மடியிலென்பது தான் நிஜம்!
நாம் ஒரு நிகழ்ச்சியை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராமல் நம் மடியில் ஒருவர் அமர்ந்தால் கோபம் கொள்வதோ இல்லை வா… வா… என வாரி அணைத்துக் கொள்வதோ தானே நம் இயல்பு? ஆன்மாக்களும் அப்படித்தான். கோபம் கொண்டு நம்மை தண்டிக்கலாம்… இல்லையேல் என்னை அவ்வளவு பிடித்திருக்கிறதா? எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது! என நம் உடம்பில் புகுந்துகொள்ளலாம்… என்பது சீனர்களின் நம்பிக்கை! என்ன மக்களே, படிக்கும் போதே சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா?
நமது நம்பிக்கைகளும், சீனர்களின் நம்பிக்கைகளும் கிட்டத்தட்ட ஒத்திருப்பதை உணர முடிகிறதல்லவா? அதற்கான முக்கிய காரணம் புத்தர்! ஆம்! புத்தர் தான் இந்த திருவிழா கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம். புத்தமதம் எங்கெல்லாம் விரவியிருக்கிறதோ அங்கெல்லாம் இது கொண்டாடப்படுகிறது. சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தைவான், கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா, லாவோஸ், கம்போடியா, ஸ்ரீலங்கா, வியட்நாம் ஆகியவை அவற்றில் அடங்கும்.
புத்தரின் கூற்றுப்படி பார்த்தால் இதனை பேய்களுக்கான திருநாள் என்று சொல்வதைவிட அவற்றுக்கான விடுதலை நாள் என்றே சொல்ல வேண்டும். சிங்கையில் வாழும் சீனர்கள் பலர் புத்தமதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இங்கு இந்த பேய்களுக்கான திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுட்டாலும் நமக்கு வயிற்றில் பயப்பந்து உருவாகிவிடும் என்பது தான் நிதர்சனம்.
ஹங்கிரி கோஸ்ட் ஃபெஸ்டிவல் கொண்டாடப்படுவதற்கான மூலக் கதை:
முன்னொரு காலத்தில் மு லியான் (Mu Lian ) என்ற புத்த மத துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் புத்தரின் ஆஸ்தான சீடர். தனது குருவின் கருணையால் ஞான திருஷ்டி பெற்றதும் அவர் முதலில் காண விரும்பியது இறந்து போன தனது அன்னையைத் தான். அன்னையின் மீது அலாதி அன்பு கொண்டவர் என்பதால் அன்னையின் ஆன்மா தற்பொழுது எந்த நிலையில் இருக்கிறது என காண விரும்பி, தியானத்தில் ஆழ்ந்தவர் தனது ஞான திருஷ்டியின் மூலம் எமலோகத்தில் இருக்கும் அன்னையை கண்டார்.
மகனை கண்ட அன்னை தனக்கு மிகவும் பசிப்பதாகச் சொல்ல, மு லியானும் அன்னைக்கு கிண்ணம் நிறைய சாதத்தை உணவாக கொடுத்தார். அன்னை ஆசையுடன் அதை வாங்கிய அடுத்த கணம் உணவு தீப்பற்றி எறிய, சட்டென அதை தூக்கி எறிந்தவர் மகனை கண்டு பயந்து பின்வாங்கினார். அன்னையின் பசிக்கு உணவு கொடுக்க முடியா அவல நிலையால் மனம் நொந்தவர் தனது குருவான புத்தரிடம் வந்து உபாயம் கேட்டார்.
மு லியானின் அன்னை உயிரோடு இருக்கும் சமயத்தில் பேராசையுடனும், கருணையற்றும் நடந்து கொண்டதற்கான தண்டனையை தான் இப்பொழுது அனுபவிக்கிறார் என விளக்கிய புத்தர், போதகர்களுக்கும், துறவிகளுக்கும் உணவு வழங்கச் சொன்னார். அப்படி செய்வதன் மூலம் கிடைக்கும் புண்ணியம் அவரது ஏழு தலைமுறை மூதாதையர்களின் ஆன்மாவை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் என உபாயம் சொன்னார்.
மு லியானும் புத்தர் சொன்னபடி துறவிகளுக்கு உணவு வழங்கினார். அவர்களும் அவரது அன்னையின் ஆன்மா மேன்மை அடைய வேண்டும் என பிராத்தனை செய்தனர். அதன் விளைவாய் அன்னையின் ஆன்மா அதன் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப, செல்வந்தர் ஒருவர் வீட்டில் நாயாக மறுஜென்மம் எடுத்தது. அன்னையை மேன்மையான மனித பிறவி எடுக்க வைப்பதற்காக மு லியானும் ஐநூறு புத்தமத துறவிகளுக்கு உணவும், ஆடையும் வழங்கினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து பிராத்தனை செய்ய மு லியானின் அன்னை மீண்டும் மனித பிறவி எடுத்தார் என்பது வரலாறு.
என்ன தோழமைகளே கதை நன்றாக இருக்கிறதல்லவா?
பேய்களுக்கான திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது?
இதை எப்படி கொண்டாடுகிறார்கள்?
இத்திருவிழா கொண்டாடப்படும் சமயத்தில் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதையெல்லாம் அடுத்தடுத்து வரும் பதிவுகளில் தெரிந்துகொள்ளலாம்…
அமானுஷ்யம் அறிய காத்திருங்கள்…