அன்றாட வாழ்வில் ஆன்மீகம்

C:\Users\selva\Downloads\Screenshot_20210903-161539_PicCollage.jpg

வாழ்வை வளப்படுத்தும் பதிகங்கள்:

ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ வேண்டுமா? ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள். வாழ்நாள் முழுவதும் எல்லாவிதமான வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வேண்டும் எனும் ஆசை யாருக்குத் தான் இருக்காது…?!

நமது நியாயமான ஆசைகளை நிறைவேற்ற இறைவன் தயாளனாய் காத்திருக்க நாமும் அதற்கான முதல் முயற்சியாய் கீழே இருக்கும் பாடலை பாராயணம் செய்யலாம். வாழ்வில் வளம்பெற நமக்கு வேண்டியது ஒன்றே ஒன்று தான்! அதுவே நம்பிக்கை!

எதுவாயினும் கிடைக்கும்! நாம் அடைந்தே தீருவோம்! எனும் நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் இலக்கை அடைவதற்கான வழிகள் தானாகவே உருவாகும். பஞ்சாக்கரத் திருப்பதிகத்தை நம்பிக்கையோடு படனம் செய்து நிறைவான வாழ்வை பெற வாழ்த்துகள். 

சிவாயநம! சிவாயநம! சிவாயநம! சிவாயநம! சிவாயநம!  

படனம் (பாராயணம்) செய்யும் முறை:

            நாள் தோறும் இறைவனை வேண்டி ஓத வேண்டும். இதற்கு இசை தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. நமக்கு தெரிந்த விதமாய் பாடலாம். ஆனால் வாய்திறந்து தான் படனம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது சொற்கள் வெளிப்பட வேண்டும். அச்சொற்களில் உள்ள ஒலி அலைகள் மந்தர ஆற்றல் உடையவை. அவை நமக்கு அரணாக அமையும். அதனால் மெல்லிய குரலிலாவது வாய்விட்டு படனம் செய்ய வேண்டும் என்றும்,  படிக்கத் தெரியாதவர்கள் பிறரை படிக்கச் சொல்லி கேட்கலாம் என்றும் திருஞானசம்பந்தர் பெருமானே சொல்லியிருக்கிறார்.  

ஓதத் துவங்கிய சில நாட்களிலேயே மாற்றம் நிகழ்வதை நீங்கள் உணருவீர்கள். இதை நாங்கள் செய்து பயன்பெற்ற பிறகே உங்களுடன் பகிர்கிறோம். நீங்களும் நம்பிக்கையோடு படித்து பயன் பெற எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக் கொள்கிறோம். 

தென்னாடுடைய சிவனே போற்றி! 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!! 

பதிகத்தின் வரலாறு:

திருஞான சம்பந்தர், திருப்பனந்தாள், திருநாரையூர் முதலிய தலங்கள் வழியே சீர்காழிக்கு மீண்டார்.  சீர்காழியில் பதிகங்கள் பாடி வழிபட்டு வரும் நாளில், அவருக்கு உபநயனம் செய்தனர்.

அச்சமயத்தில், உபநயனச் சடங்குகள் முடிந்தபின் மறையோர்கள் வேதங்களில் அவர்களுக்கு இருந்த ஐயங்களைச் சம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் அளித்தபின், “துஞ்சலும் துஞ்சல் இலாத” என்று தொடங்கும் இத்திருப்பதிகத்தைச் சம்பந்தர் ஓதி அருளி, மந்திரங்களுக்கெல்லாம் முதன்மையுடையது திருவைந்தெழுத்தே என்று உணர்த்தினார்.

பதிகம்: தேவாரம் –  Thevaram

அருளியவர்: திருஞானசம்பந்தர் – Thirugnanasampanthar

இடம் : சீர்காழி

இறைவன் : பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர்

இறைவி: பெரியநாயகி, திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி

பண் : காந்தரப்பஞ்சமம் 

இராகம்: கேதாரகௌளை  

பஞ்சாக்கரத் திருப்பதிகம் 

பாடல் எண் : 1

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்

நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்;

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று

அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 2

மந்திரம் நான்மறை ஆகி, வானவர்

சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன;

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 3

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்-சுடர்

ஞான விளக்கினை ஏற்றி, நன்-புலத்து

ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர்

ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 4

நல்லவர் தீயர் எனாது நச்சினர்

செல்லல் கெடச் சிவ-முத்தி காட்டுவ;

கொல்ல நமன்-தமர் கொண்டு-போம் இடத்து

அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 5

கொங்கு-அலர் வன்-மதன் வாளி ஐந்து; அகத்து

அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம்பொழில்;

தங்கு அரவின் படம் அஞ்சும் தம்முடை

அங்கையில் ஐ-விரல் அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 6

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,

இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்,

அம்மையினும் துணை அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 7

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன; பின்னை நாள்தொறும்

மாடு கொடுப்பன; மன்னு மா-நடம்

ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 8

வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;

பண்டை இராவணன் பாடி உய்ந்தன;

தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு

அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 9

கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச்

சீர்-வணச் சேவடி செவ்வி நாள்தொறும்

பேர்-வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு

ஆர்-வணம் ஆவன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 10

புத்தர் சமண் கழுக்-கையர் பொய் கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின;

வித்தக நீறு அணிவார் வினைப்-பகைக்கு

அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.

பாடல் எண் : 11

நற்றமிழ் ஞான-சம்பந்தன், நான்மறை

கற்றவன், காழியர் மன்னன் உன்னிய

அற்றம்-இல் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து

உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.

திருச்சிற்றம்பலம்

பதிகத்தின்  பொருள் : 

தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய
மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே.

மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும். செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும்.

உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி, ஞானவிளக்கம் பெறச் செய்து, அறிவைப் பெறும் வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந்தெழுத்தேயாகும்.

புண்ணியர், பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும். எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும், மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும்.

வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும் தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும். இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தாகும். சோலைகள் அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என ஐந்தாகும். பாம்பின் படம் ஐந்து ஆகும். செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும். இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப, மந்திரமும் திருவைந்தெழுத்தேயாகும்.

தும்மல், இருமல் தொடர்ந்து வந்த பொழுதும், கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும், முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும், இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும்.

இறப்பு, பிறப்பு இவற்றை அறுத்து இத்திருமந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை
நீக்குவன. தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன. நிலை பெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தேயாகும்.

வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும். முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான்.
அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு, செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும்.

திருமாலும், பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந்தெழுத்தாகும்.

புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனத்திற் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும். சகல
சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன் போர்புரிய வரும் பகைவர்களை எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.

நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும், ஞானசம்பந்தன், நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய, கேடுகள்
வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள்.

                                        திருச்சிற்றம்பலம்

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s